Published : 01 Jul 2019 02:35 PM
Last Updated : 01 Jul 2019 02:35 PM

இங்கிலாந்துடனான தோல்விக்கு தோனி மட்டுமே காரணமா?

எட்ஜ்பாஸ்டனில் இந்தியாவுடன் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற போட்டியில் இங்கிலாந்து அணி பேர்ஸ்டோவின் சதம், ஹார்ச்சர், வோக்ஸ் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு மூத்த வீரர் தோனிதான் காரணம் என்ற தொனியில் கிரிக்கெட் விமர்சகர்களும், ஆர்வலர்களும் இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் பல அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்தனர்.

அதுமட்டுமில்லாது சமூக வலைதளங்களிலும் பரவலாக தோனிக்கு எதிராக இந்திய ரசிகர்கள்  தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இதன் காரணமாக தோனியின் பெயர் நேற்று இரவு இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது. அவர்கள் விமர்சிப்பதுபோல இந்தப் போட்டியின் இறுதி ஓவர்களில் இன்னும் சிறப்பாக தோனியும், கேதர் ஜாதவ்வும் விளையாடி இருக்கலாம்.

ஆனால், இந்திய அணி அடைந்த தோல்விக்கு தோனியே முழு காரணம் என்று பழி சொல்வதில் முரண் இருக்கிறது. இங்கிலாந்து அணி மைதானத்தின் தன்மையை  உணர்ந்து ஒரு ஸ்பின்னருடன் களத்தில் இறங்கியது. ஆனால், இந்திய அணி  சாஹல், குல்தீப் என்று இரண்டு ஸ்பின்னர்களுடன் விளையாடியது.

விளைவு இரண்டு ஸ்பின்னர்களும் இங்கிலாந்து அணிக்கு ரன்களை வாரி வழங்கினர். இருவரது எக்கனாமியும் ஏழுக்கு அதிகமாக இருந்தது. அடுத்து பெரிய இலக்கை இந்திய அணி எதிர்கொண்ட நிலையில் தொடக்க வீர்ர ராகுல் 0 ரன்னுடன் ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த ரோஹித் சர்மாவும் - கோலியும் நிதானமாக விளையாடுகிறோம் என்று முதல் 10 ஓவரில் வெறும் 28 ரன்களை மட்டுமே சேர்த்தனர். அடுத்த 10 ஓவரில் 53 ரன்கள் சேர்த்தனர்.

இந்த ஜோடி விக்கெட்டை இழக்க வேண்டாம் என்று நிதானமாக விளையாடினாலும் ஒருபக்கத்தில் அணிக்குத் தேவைப்படும் ரன் ரேட்டையும் கவனித்திருக்க வேண்டும். 

இதில் ரோஹித் சர்மா சதம் அடித்துவிட்டதால் அவர் ஆடிய டாட் பந்துகளைப் பற்றி கணக்கெடுக்க விமர்சகர்கள் மறந்துவிட்டு வழக்கம்போல் தோனியிடம் வந்துவிட்டனர்.

அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா - ரிஷப் பந்த் இணையில் பாண்டியாவின் ஆட்டம் நேர்த்தியாக இருந்தது. எனினும் அவர் சந்தித்த கடைசிப் பந்துகளில் பாண்டியாவும் சற்று தடுமாறி விளையாடியே ஆட்டமிழந்தார்.

ரிஷப் பந்தோ அவர் ஊருக்குச் செல்ல வேண்டிய வண்டி மைதானத்துக்கு வெளியே நிற்கிறது என்பது போல் அவசரமாக கிரிக்கெட் ஷாட்டுகளை அடித்துக் கொண்டிருந்தார். இதில் இரண்டு முறை ரன் அவுட் ஆக இருந்தார்.

ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவரது பேட்டிங்கில் சற்றும் தெரியவில்லை. ரிஷப் பந்துக்கு இது முதல் உலகக்கோப்பை என்பதால் அவரை பெரும்பாலானவர்கள் விமர்சிக்கவில்லை என்பதை ஏற்றுக் கொண்டாலும் அவரது ஆட்டத்தில்  நிதானம் கூட வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை.

இவர்களுக்கு அடுத்து இந்தியாவின் கடைசி நம்பிக்கை இணையாக தோனியும் - ஜாதவ்வும்  களத்தில் இருந்தனர். இந்த இணை இருக்கும்போது இந்திய அணிக்கு வெற்றிக்கான ரன் ரேட் 10-ல் இருந்தது.

இந்தக் கட்டத்தில்தான் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் வோக்ஸ், ஹார்ச்சர் போன்ற அவர்களது நட்சத்திரப் பந்துவீச்சாளர்கள் பந்து வீசினர். இதில் இவர்கள் தோனிக்கும், ஜாதவ்வுக்கும் தொடர்ந்து பெரும்பாலும் ஸ்லோ பாலையே வீசினர்.

இதனால் இழுத்து அடித்தாலும் பந்து இங்கிலாந்து பீல்டர்களிடமே சென்றது. இங்கிலாந்து அணியின் பீல்டிங்கும் இந்தப் போட்டியில் மிகச் சிறப்பாக இருந்தது.ஒரு கட்டத்தில் தோனியும் - ஜாதவ்வும் பெரிய ஷாட்களை அடிக்கத் தவறியதால் இந்திய அணி தோல்வி அடைந்தது.

சேஸிங்கில் இதுவரை தோனி ஆட்டமிழக்காமல் நின்று விளையாடிய 49 போட்டிகளில் 47 போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளார்.

இதில் ஒரு போட்டி தோல்வியில் முடிந்திருக்கிறது. ஒரு போட்டி டிராவில் முடிந்திருக்கிறது என்பதை அவரை விமர்சிப்பவர்களிடம் முன் வைப்பது இங்கு அவசியமாகிறது.

உலகக்கோப்பையில் இந்தியாவின் தொடர் வெற்றிக்கு சற்று பின்னடைவைத் தந்த இந்தப் போட்டியில் ஒவ்வொரு வீரரும் எங்கு அவர்களது இலக்கைத் தவறினார்கள் என்று பார்க்க வேண்டுமே தவிர தொடர்ந்து இங்கிலாந்து வீரர்கள் ஸ்பின்னைத் தவிர்த்து சிறப்பாக பந்துவீசிக் கொண்டிருக்க  ரன் ரேட்டை  10க்கு இழுத்துச் சென்றுவிட்டு நீங்கள்  பெரிய ஃபினிஷர்தானே.. ஏன் வெற்றிகரமாக ஃபினிஷ் செய்து கொடுக்கவில்லை” என்று தோனியை மட்டுமே இந்தத் தோல்விக்குக் காரணம் என்று விமர்சிப்பது பெட்ரோமாக்ஸ்  லைட்டில் உள்ள மெண்டில்லை உடைத்துவிட்டு ”இதுல எப்படின எரியும்” என்று செந்தில் கேட்பது போல் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x