Published : 02 Jul 2019 10:53 AM
Last Updated : 02 Jul 2019 10:53 AM

நடுவருட வாழ்த்துகள் மக்களே!- ஓர் எழுத்தாளரின் சுவாரஸ்யமான முகநூல் பதிவு

நாம் விரும்புகிறோமோ? இல்லையோ முகநூல், வாட்ஸ் அப் தகவல்கள் நிமிடத்துக்கு நிமிடம் பிங் பாங் என நமது செல்பேசியில் கொட்டிக் கொண்டிருக்கும் வேளையில் எப்போதாவது சில சுவாரஸ்யங்கள் நம்மை வருடிச் செல்வதும் நடக்கிறது.

அப்படியான ஃபேஸ்புக் பதிவு ஒன்றை சிறார் எழுத்தாளர் விழியனின் முகநூல் பக்கத்தில் இன்று (ஜூலை 2- செவ்வாய்க்கிழமை) பார்க்க நேர்ந்தது.

அதில், நடுவருட வாழ்த்துகள் என்று அவர் கூறியிருந்தது அந்தப் பதிவை முழுமையாகப் படிக்கும் ஆவலை ஏற்படுத்தியது.

அந்தப் பதிவு அப்படியே உங்களுக்காக..

"ஜூலை 2ல் என்ன விசேஷம்?

ஜூலை 2 ஒரு சுவாரஸ்யமான நாள். ஒரு வருடத்தின் நடு நாள். ஜூலை 2 ஆம் தேதிக்கு முன்னர் 182 நாட்களும் அதற்கு பின்னர் 182 நாட்களும் இருக்கும். நாம் பயன்படுத்தும் நாட்காட்டியானது கிரிகேரியன் காலண்டர் என குறிப்பிடப்படுகின்றது. இது ஏறத்தாழ பூமியை தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ளும் கால அளவினை கொண்டுள்ளது. சுழற்சி நேரத்திற்கும் காலண்டர் நேரத்திற்கும் இருக்கும் மிகச்சிறிய வித்தியாசமே நான்கு வருடத்திற்கு ஒரு லீப் வருடம் வந்து ஒரு நாள் அதிகரிக்கின்றது. கிரிகேரியனின் காலண்டர் கிரிகேரி என்ற போப்பின் பெயரால் அழைக்கப்படுகின்றது. இந்த காலண்டருக்கு முன்னர் ஜூலியன் காலண்டரே பயன்பாட்டில் இருந்தது. கிரிகேரி வாழ்ந்த காலம் 1502-1585.

நாம் பயன்படுத்தும் மாதங்களின் பெயர்கள் அனைத்தும் லத்தீன் மொழியில் இருந்து வந்தவை / தழுவியவை. தற்போது நிகழும் ஜூன் மாதமும் ஜீனியஸ் என்ற வார்த்தையில் இருந்து வந்தது தான். (ஜூனோ என்ற பெண் கடவுளை குறிக்கலாம் என நம்புகின்றனர்)

அது சரி ஏன் பிப்ரவரி மாதத்திற்கு 28 அல்லது 29 நாட்கள் வருகின்றது. நியாயமாக பார்த்தால் டிசம்பருக்கு தான் இந்த மாறுதல்கள் வரவேண்டும் என்று தோன்றலாம். அதுவும் சரி தான். ஆரம்பத்தில் வருடத்தின் முதல் மாதம் ஜனவரியாகவும் கடைசி மாதம் பிப்ரவரியாகவும் இருந்தது. அப்போது பிப்ரவரியில் 23 நாட்களே இருந்தன. பின்னர் ஒவ்வொரு மாதத்திற்கு நாட்கள் இறுதியானது. பிப்ரவரி கடைசியில் இருந்ததால் அதற்கு 28 அல்லது 29 என வந்தது. பின்னர் மீண்டும் மாதங்களின் பெயர்கள் மாற்றியமைக்கப்பட்டன.

நடு வருட நாளில் (ஜூலை 2) என்ன செய்யலாம்?

ரொம்ப உற்சாகமா புதுவருடத்திற்கு ஏகப்பட்ட தீர்மானங்களும் முடிவுகளும் எடுத்திருப்போம். அது எல்லாம் எந்த அளவிற்கு இருக்குன்னு பார்த்து மறுஆய்வு செய்து திரும்பவும் உற்சாகமா ஆரம்பிப்போமே.

புது வருடத்திற்கு தான் வாழ்த்துக்கள் சொல்வீங்களா? நடுவருட நல்வாழ்த்துகள்- விழியன்" என்கிறது அந்தப் பதிவு.

காலை வேளையை ஒரு புதிய தகவலுடன் தொடங்குவது எத்தனை இனிமையானது. ஒருவேளை இந்தத் தகவல் உங்களுக்கும் புதியதாக இருந்தால் நடுவருட வாழ்த்துகளை நட்புகளோடு பகிர்ந்து கொள்ளுங்களேன்.

அட புதுவருடக் கொண்டாட்டத்திலேயே பல குழப்பம் இதில் இதுவேறா என்று நினைப்பீர்களானால், வாழ்த்து வேண்டாம். இந்தத் தகவலையாவது பகிர்ந்து கொள்ளலாம். குழந்தைகள் இது போன்ற தகவல்களைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள். ஏனெனில் எல்லாத் தகவல்களும் அவர்களுக்கு தகவல் மட்டுமே. முன்முடிவு ஏதுமில்லா பார்வையும் தேவை. குழந்தைகள் போல் எல்லாவற்றையும் கொண்டாட அதுவும் அவசியம்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x