Last Updated : 11 Jul, 2019 05:33 PM

 

Published : 11 Jul 2019 05:33 PM
Last Updated : 11 Jul 2019 05:33 PM

மிடில் ஆர்டர் வரிசை மொத்தமாக மாறும் என எதிர்பார்ப்பு: கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக்கிற்கு கதவு மூடப்படுகிறதா?

உலகக்கோப்பையில் அரையிறுதி வரை வந்து இந்தியா தோல்வி தழுவினாலும் நடுவரிசை வீரர்கள் தேர்வு பற்றிய கேள்விகளுக்கு ரவிசாஸ்திரியோ, விராட் கோலியோ, தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத்தோ எந்த வித ஏற்றுக்கொள்ளக் கூடிய திருப்திகரமான பதில்களை கடந்த ஒன்றரை வருடங்களாக அளிக்கவில்லை என்பதே உண்மை.

 

கங்குலி ஏகப்பட்ட வீரர்களை உருவாக்கிக் கொடுத்து கேப்டன் பொறுப்பு என்பது வெறுமனே வெற்றி பெறுவது மட்டுமல்ல, அணியைக் கட்டமைப்பதும்தான் என்பதை நிறுவினார். உலகில் எந்த ஒரு கேப்டனையும் எடுத்துக் கொள்ளலாம்  மன்சூர் அலிகான் பட்டவ்டி, கபில்தேவ், இம்ரான் கான், ஹேன்சி குரோனியே, அர்ஜுணா ரணதுங்கா, கங்குலி, மார்க் டெய்லர், ஆலன் பார்டர், மைக்கேல் கிளார்க் தற்போது கேன் வில்லியம்சன் என்று இவ்வாறு அணியைக் கட்டமைப்பதிலும் சிறந்து விளங்குகிறார்கள். இதில் ஒருநாள் போட்டிகளில் கடைசியாக இயான் மோர்கனையும் சேர்த்துக் கொள்ளலாம். 2015-ல் மிகவும் தாழ்வான நிலையிலிருந்த இங்கிலாந்து அணியை புதிதாகக் கட்டமைத்தார், இன்று கோப்பையை வெல்லும் நிலைமைக்கு உயர்த்தியுள்ளார்.

 

அணியைக் கட்டமைப்பதிலும் வீரரை அடையாளம் காணுவதிலும் கோலியின் போதாத் திறமை

 

ஆனால் விராட் கோலியோ, ஜடேஜாவிடம் ஒரு நல்ல ஆல்ரவுண்டரைக் காணத் தவறினார், ரவிசாஸ்திரியை விடுத்து அனில் கும்ப்ளேவுடன் ஒரு 4 ஆண்டுகள் கோலி பணியாற்றியிருந்தால் ஆட்டத்தின் நுணுக்கங்களை இன்னும் கொஞ்சம் நுட்பத்துடன் கோலி கற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் கற்றலை விட ‘ஈகோ’ பெரிது, நல்ல மனிதரை அபாண்டமாக வெளியேற்றினார் கோலி. முகமது ஷமியை செமிபைனலில் உட்கார வைத்து, வரவர லாலிபாப் பவுலராகி வரும் சாஹலுக்கு முன்னுரிமை அளித்தார் அவரோ 239 ரன்களில் 63 ரன்களை விட்டுக் கொடுத்தார், வில்லியம்சன் விக்கெட் இவரது திறமையினால் விழுந்தது அல்ல, வில்லியம்சனின் கவனக்குறைவினால் விழுந்த விக்கெட்.

 

மணீஷ் பாண்டே, ராயுடு, ஷ்ரேயஸ் அய்யர் ஆகியோரை ஒதுக்கி விட்டு விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக், ஜாதவ் என்று மிகவும் பலவீனமான நடுவரிசை வீரர்களை வைத்து ஆடிவந்தனர். குறிப்பாக மனீஷ் பாண்டேயை ஒழித்தனர் என்றால் மிகையாகாது, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்காமலேயே ஓரங்கட்டப்பட்டார். ஷ்ரேயஸ் அய்யர் ஒரு எதிர்காலக் கேப்டன் வீரர் ஆவார், அதனால்தானோ என்னவோ அவரை அணியில் எடுக்க இவ்வளவு யோசனைகள் இருந்து வருகின்றன. மயங்க் அகர்வாலை முன்னமேயே பரிசீலித்திருக்க வேண்டும்.

 

பலவீனமான மிடில் ஆர்டர் இருந்தும் அனுபவசாலியான ரஹானேயை உலகக்கோப்பைக்குப் பரிசீலிக்கப்படவில்லை, காரணம் இவரும் ஒரு கேப்டன்சிக்கான வீரர்.

 

கார்த்திக், ஜாதவ் எனும் கேள்வி

 

அஸ்வினையும், ஜடேஜாவையும் ஓரங்கட்டி சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு அதீத முன்னுரிமை அளிக்கப்பட்டது. எந்த ஒரு அணியும், கேப்டனும் அனைத்து சாத்தியங்களையும் கவனத்தில் கொண்டே செயல்பட முடியும்.  ஆனால் விராட் கோலி, ரவிசாஸ்திரி கம்பெனி எப்போதுமே ஒரு உயர்வு நவிற்சி கனவு நிலையிலேயே உள்ளனர், எல்லாம் நல்லபடியாகவே போய்க்கொண்டிருக்கிறது, விமர்சகர்களுக்குத்தான் இந்தப் பிரச்சினையெல்லாம் ஓய்வறையில் அனைவரும் நன்றாக உள்ளனர், மகிழ்ச்சியாக உள்ளனர் என்று திரும்பத் திரும்ப நமக்குச் சொல்லப்பட்டு வருகிறது.

 

தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ் போன்றவர்கள் இடைப்பட்ட தற்காலிக தீர்வுகள்தானே தவிர நிரந்தரத் தீர்வுகள் அல்ல, எனவேதான் உலகக்கோப்பைக்கு முன்பாக தினேஷ் கார்த்திக் போன்றவர்களுக்கு சீரான முறையில் தொடர் வாய்ப்புகளைக் கொடுக்காமல் பெரிய தொடருக்கு அழைத்துக் கொண்டு சென்றது தவறாக முடிந்தது, அதே போல் அரைக்கை பவுலர் கேதார் ஜாதவ் காயத்துக்கு பெயர் பெற்றவர், ராகுலும்தான். ஏன் ஜாதவுக்குப் பதிலாக மாற்று வீரரை யோசிக்கக் கூட இல்லை என்பது மிகபெரிய கேள்வி.

 

அதே போல் தோனி எனும் கேள்வி. அவரைக் கேள்வி கேட்க முடியாத உயரத்துக்கு ஏற்கெனவே கொண்டு சென்றாகிவிட்டது. அவர் ஆடும்போதெல்லாம் எதிர்முனையில் ஒரு ஹிட்டர் தேவைப்படுகிறது, ஒன்று ஹர்திக் பாண்டியா, இன்னொன்று ஜடேஜா. ஏன் இந்த நிலை, ஒரு சீனியர் வீரர் அணியின் அழுத்தமான சூழ்நிலையிலிருந்து அதனை விடுவிக்க அவரது பவர் பேட்டிங் ஏன் பயன்படுவதில்லை, அவர் ஏன் பவர் பேட்டிங் ஆடுவதில்லை என்று யாரேனும் அவரிடம் கேட்கின்றனரா? அனுபவ வீரர் ரிஸ்க் எடுக்காமல், கரியரை தொடங்கியிருக்கும் ரிஷப் பந்த், பாண்டியா, அணிக்குள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருக்கும் ஜடேஜா ஆகியோர்தான் ரிஸ்குகள் எடுக்க விதிக்கப்பட்டவர்களா? அவருக்கு அறிவுறுத்தப்பட்டதா போன்ற கேள்விகளுக்கு எம்.எஸ்.கே. பிரசாத் பலமுறை மழுப்பலாகவே பதில் அளித்து வருகிறார்.

 

மிடில் ஆர்டரில் கார்த்திக், ஜாதவ், விஜய் சங்கர் போன்ற தற்காலிக தீர்வுகள் பயனளிக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு இந்திய அணி நிர்வாகம் இப்போது வந்தேயாக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது, ஆகவே கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக்கிற்கு இனி சர்வதேச வாய்ப்புகள் அவ்வளவுதான் என்று தெரிகிறது.

 

ஜாதவ், கார்த்திக் போன்றவர்கள் துணைக்கண்டத்திற்கு வெளியே கடினமான சூழ்நிலைகளைச் சமாளித்து அணியை மீட்டெடுக்கும் திறமை தேவைப்படும் அளவுக்கு இல்லாதவர்கள். இதில் தினேஷ் கார்த்திக்கிற்கு சரியான பேக் -அப் இல்லாததால் அவருக்கு போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்பதும் உண்மை, வழங்கிய வாய்ப்புகளை அவர் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளவும் இல்லை என்பதும் உண்மை.

 

மேலும் கோலியும், ரோஹித் சர்மாவும் சதங்களாக அடித்துத் தள்ளியதால் மிடில் ஆர்டர் பலவீனங்கள் மறைக்கப்பட்டன. மிடில் ஆர்டர் தோல்வியடைந்தால் என்ன செய்வது என்பதற்கான பிளான் பி இந்திய அணியிடம், ரவிசாஸ்திரியிடம், கோலியிடம் இல்லவேயில்லை.

 

ஷுப்மன் கில் பெரிய வீரர் என்றார் கோலி, நியூசிலாந்தில் வாய்ப்பளித்தார் அதன் பிறகு அவரை ஒதுக்கினார்கள்.

 

இந்திய அணித்தேர்வுக்குழுவில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து 20 டெஸ்ட்களை ஆடியிருப்பார்களா என்பது சந்தேகமே. எனவே இவர்கள் அணியைத் தேர்வு செய்தால் எப்படி இருக்கும்? ஆகவேதான் கோலி, ரவிசாஸ்திரி, தோனி ஆகியோரின் ஆதிக்கம் அணித்தேர்வுகளில் அதிகம் இருந்து வருகிறது.

 

எனவே பாண்டே, அய்யர், பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், ஆகிய ஆக்ரோஷ வீரர்களை அணிக்குள் தேர்வு செய்ய வேண்டியுள்ளது.  அதே போல் ரிஸ்ட் ஸ்பின் நம்பிக்கை போதும் என்றே தோன்றுகிறது பவுலிங்கில் நவ்தீப் சைனி, தீபக் சாஹர், ஸ்பின்னில் ராகுல் சாஹர், மயங்க் மார்க்கன்டே, ஷ்ரேயஸ் கோபால் ஆகியோரை பரிசீலிக்க வேண்டும். அதே போல் குருணால் பாண்டியா, சஞ்சு சாம்சன் ஆகியோருக்கும் அவ்வப்போது வாய்ப்புகள் வழங்கி மிடில் ஆர்டர் வீரர்களில் ஒரு செட் தோல்வியடைந்தால் இன்னொரு செட் தயாராக இருக்க வேண்டும் என்ற முடிவில் தேர்வுக்குழு தொலைநோக்குப் பார்வையில் சிந்திப்பது அவசியம்.

 

ராகுல் திராவிட் தேர்ந்த பயிற்சியாளராக அவ்வப்போது அணிக்கு நல்ல வீரர்களை அடையாளம் காட்டி வருகிறார், அவர் நீண்ட காலமாகவே சஞ்சு சாம்சனின் திறமைகளை பேசி வருகிறார், ஷேன் வார்னும் பேசி வருகிறார். ஆகவே இந்த அனுபவம், மூத்த வீரர் போன்ற பழைய பஞ்சாங்கங்களிலிருந்து இந்திய அணி வெளியே வர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

 

ஆஸ்திரேலியாவில் டேரன் லீ மேன், ஸ்டீவ் ஸ்மித், வார்னர் கூட்டணி போடாத ஆட்டம் இல்லை, அத்தனை ஆதிக்கம் செலுத்தி வந்தனர், கடைசியில் ஒரு டிவி கேமரா அவர்களின் அகந்தையை ஒழித்தது. பால் டேம்பரிங்கில் சிக்கினர். அதே போல் இங்கு ரவிசாஸ்திரி, விராட் கோலி, தோனி கூட்டணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது, இதிலிருந்து மீண்டு கிரிக்கெட் ஆட்டம் கிரிக்கெட்டுக்காக என்ற முடிவை நோக்கி இந்திய அணி மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு தோல்விக்கு இவ்வளவு எச்சரிக்கை அவசியமா என்று தோன்றலாம் ஆனால் பெரிய சரிவின் தொடக்கமாக இது அமைந்து விடக்கூடாது என்ற கரிசனை அணி நிர்வாகத்துக்குத் தேவை.

 

(பிடிஐ தகவல்களுடன்...)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x