

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்று கண்டுபிடித்த வங்கத்து விஞ்ஞானி சர் ஜெகதீஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் இன்று (நவம்பர் 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…
* வங்காளத்தின் (தற்போதைய வங்கதேசம்) விக்ரம்பூரில் பிறந்தவர். எதையும் உற்றுநோக்கும் குணமும், நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இயற்கையிலேயே இருந்தது. ஓயாமல் கேள்வி கேட்டாலும் சளைக்காமல் பதில் சொல்லக்கூடிய தந்தை கிடைத்தது அவரது அதிர்ஷ்டம்.
* பட்டப்படிப்பை முடித்ததும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் கற்றார். வைஸ்ராய் சிபாரிசுடன் கல்கத்தா மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். இந்தியர்கள் திறன் குறைந்தவர்கள் என்ற பிரிட்டிஷ் அரசு, அதே பதவி வகிக்கும் ஆங்கிலேயரின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்குதான் கொடுக்கப்படும் என்றது.
* கஷ்டமான சூழலிலும், தன்மானத்தை விட்டுக்கொடுக்காத போஸ் 3 ஆண்டுகள் சம்பளமே வாங்காமல் வேலை பார்த்தார். அறிவாற்றல், கற்பிக்கும் திறனால் பேரும் புகழும் பெற்றார். தவறை உணர்ந்த கல்வித் துறை இயக்குநர் தனது முயற்சியால் முழு சம்பளம் கிடைக்க ஏற்பாடு செய்தார். அவருக்கான 3 ஆண்டு ஊதியத்தையும் மொத்தமாக வழங்கியது அரசு.
* இந்த பணத்தில் தன் வீட்டிலேயே ஆராய்ச்சிக்கூடம் அமைத்தார். தன் ஆயுள் முழுவதையும் ஆராய்ச்சிக்கே அர்ப்பணிப்பது என 1894-ல் முடிவெடுத்தார். முதலில் மின்சாரம் பற்றி ஆராய்ந்தார். மின் அலைகள், கம்பிகளின் உதவியின்றி பொருட்களைக் கடந்து செல்லக்கூடியவை என்று கண்டறிந்தார்.
* மின்காந்த அலைகளின் பகுதி ஒளித் தன்மைகளை (quasi-optical) கண்டறியும் கருவியைக் கண்டுபிடித்தார். மிகக் குறைந்த அலை நீளம் கொண்ட நுண்ணலைகளை உருவாக்கும் இயந்திரத்தை முதன்முதலில் வடிவமைத்தார்.
* போட்டோகிராபிக் கோட்பாட்டை உருவாக்கினார். இவரது ஆராய்ச்சி பற்றிய கட்டுரைகள் ராயல் சொசைட்டி இதழில் வெளிவந்தன. லண்டன் பல்கலைக்கழகம் இவருக்கு ‘டாக்டர் ஆஃப் சயின்ஸ்’ பட்டம் வழங்கியது.
* பல நாடுகளின் அறிவியல் கழகங்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இந்தியாவின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. பல பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டங்களை வழங்கின. விருதுகள் குவிந்தன.
* இவரது ஆராய்ச்சி தாவரவியல் பக்கம் திரும்பியது. தாவரங்களுக்கு உயிர், உணர்ச்சிகள் உண்டு என்பதை ஆதாரங்களுடன் பாரீஸ் மாநாட்டில் நிரூபித்தார். இந்த உண்மைகளை கண்கூடாகக் காட்ட உதவும் ‘ரெஸனன்ட் ரெக்கார்ட்’, ‘கிரெஸ்கோகிராப்’ ஆகிய கருவிகளை அரும்பாடுபட்டு உருவாக்கினார்.
* ‘ரெஸ்பான்ஸ் இன் லிவிங் அண்ட் நான் லிவிங்’, ‘த நெர்வஸ் மெக்கானிஸம் ஆப் பிளான்ட்ஸ்’ ஆகிய 2 நூல்களும் இவருக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்தன.
* ஆண்டு வருமானத்தில் தனது அத்தியாவசியத் தேவைக்கு ஐந்தில் ஒரு பங்கை வைத்துக்கொண்டு எஞ்சிய தொகையை அறிவியல் பயிலும் மாணவர்களுக்குச் செலவழித்தார். இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக பல லட்சம் ரூபாய் உயில் எழுதிவைத்த இந்த தேசபக்த விஞ்ஞானி 79 வயதில் காலமானார்.