Published : 19 Aug 2017 09:22 AM
Last Updated : 19 Aug 2017 09:22 AM

ஹசாரி பிரசாத் த்விவேதி 10

இந்தி இலக்கியக் களத்தின் ஈடிணையற்ற படைப்பாளிகளில் ஒருவரான ஹசாரி பிரசாத் த்விவேதி (Hazari Prasad Dwivedi) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

உத்தரபிரதேச மாநிலம், பலியா மாவட்டத்தில் துபே கா சப்ரா என்ற கிராமத்தில் பிறந்தார் (1907). கிராமத்துப் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். சமஸ்கிருதம் பயின்றார். இவரது குடும்பத்தினர் பாரம்பரியமாக ஜோதிடக்கலை யில் பிரபலமானவர்கள்.

இவரும் இன்டர்மீடியட் தேறிய பிறகு காசி இந்து பல்கலைக்கழகத்தில் ஜோதிடமும் தனது ஆர்வத்திற்கேற்ப இலக்கியமும் பயின்று ‘ஆச்சார்யர்’ பட்டம் பெற்றார். சமஸ்கிருதம், வங்க மொழி, பஞ்சாபி, குஜராத்தி, பாலி, பிராகிருதம், அபபிரம்மஸா உள்ளிட்ட மொழிகளை அறிந்திருந்தார்.

லக்னோ பல்கலைக்கழகம் இவருக்கு டி.லிட். பட்டம் வழங்கியது. 1940-ல் சாந்தி நிகேதனில் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அப்போது ரவீந்திரநாத் தாகூரால் கவரப்பட்ட இவர், பண்டைய மற்றும் நவீன இலக்கிய நூல்களைக் கற்றார். படைப்பாளியாகப் பரிணமித்தார். இவரது முதல் நாவல் ‘பன்பட்டா கீ ஆத்மகதா’ 1946-ல் வெளிவந்தது.

இந்தியக் கலாச்சாரம், இலக்கியம், ஜோதிடம் மற்றும் இலக்கியத்தின் பல்வேறு கிளைகள், எழுதும் பாணி ஆகியன குறித்து விரிவான கட்டுரைகளை எழுதினார். இவரது ‘இந்தி சாகித்ய கீ பூமிகா’, ‘இந்தி சாகித்ய கா ஆதிகால்’ ஆகிய இலக்கிய வரலாற்று கட்டுரை நூல்கள், இவருக்கு இலக்கிய உலகில் முக்கிய இடம் பெற்றுத் தந்தன.

இவர் படைத்த கட்டுரைகள், தத்துவம், சமூக வாழ்க்கை, நிர்குண (இறைவனின் குணங்களே இல்லாத), ஸகுண (குணங்களுடன் கூடிய) இரண்டும் சேர்ந்த இலக்கியத்தின் பல்வேறு களங்களாக வகைப்படுத்தப்பட்டன.

பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டத்தில், இவரது பல உரைநடைப் படைப்புகள் இடம்பெற்றுள்ளன. சமஸ்கிருதம் கலந்த இந்தி மொழியை ஆழ்ந்த இலக்கியங்களுக்குப் பயன்படுத்தினாலும், பிற படைப்புகளில் ஆங்கிலம், பரவலாகப் பயன்படுத்தப்படும் உருது வார்த்தைகள் மற்றும் வட்டாரப் பேச்சுமொழி கலந்து எழுதும் பாணியைப் பின்பற்றினார்.

எனவே இவரது படைப்புகளைப் பண்டிதர்களும் சாமான்யர்களும் பாராட்டினர். இயல்பான நடையில், சுவாரஸ்யமாகவும் நகைச்சுவையும் நையாண்டியும் கலந்தும் எழுதினார். ‘சூர் சாகித்ய’, ‘கபீர்’, ‘ப்ராசீன் பாரத் மே கலாத்மக் வினோத்’, ‘லாலித்ய மீமாம்சா’, ‘சாகித்ய சஹசர்’, ‘ஆலோக் பர்வ’ உள்ளிட்ட இவரது விமர்சன நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

‘அசோக் கே ஃபூல்’, ‘குடன்’, ‘ஆலோக் பர்வ’ உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகள், ‘புனர்னவா’, ‘அனாம்தாஸ் கா போதா’, ‘பாணபட்ட கீ ஆத்மகதா’ உள்ளிட்ட நாவல்கள், மற்றும் ‘சந்தேஷ் ராஸக்’, ‘சங்ஷிப்த ப்ருதிவிராஜ் ராஸோ’ உள்ளிட்ட உரைநடை நூல்கள் இந்தி இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் இந்தித் துறையில் தலைவராகப் பணியாற்றினார். ‘பிரபந்த சிந்தாமணி’, ‘புராதன் பிரபந்த சங்கிரஹா’, ‘லால் கனேர்’ உள்ளிட்ட பல பிரபல நூல்களை ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளிலிருந்து இந்தியில் மொழி பெயர்த்தார்.

இந்தி இலக்கியத்துக்கு இவரது பங்களிப்புகளுக்காக 1957-ல் பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. ‘ஆலோக் பர்வ’ என்ற கட்டுரைத் தொகுப்பு நூலுக்காக 1973-ல் சாகித்ய அகாடமி விருது வென்றார். ‘ஆச்சார்யா’ என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட ஹசாரி பிரசாத் த்விவேதி 1979-ம் ஆண்டு தனது 72-வது வயதில் மறைந்தார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x