Last Updated : 03 Aug, 2017 10:37 AM

 

Published : 03 Aug 2017 10:37 AM
Last Updated : 03 Aug 2017 10:37 AM

மிஸ்டர் உல்டா: கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியாது

கமல்ஹாசனுக்கு அரசியல் தெரியாது

- முதல்வர் எடப்பாடி பேட்டி

டப்பாடியாரை அவர் வீட்டில் சந்திக்கச் சென்றார் உல்டா. “இதான்.. இதுக்குதான் காக்கிச் சட்டையின் துணை, ஆட்சிக்கு தேவைன்றது. ரொம்ப தேங்க்ஸ். நான் பாத்துக்கறேன்” என்று சொல்லி ஃபோனை வைத்தார்.

‘‘கமல்கிட்டேயா பேசிட்டிருந்தீங்க..? அவர்தானே ‘காக்கிச் சட்டை’ படத்து ஹீரோ?’’ என்று உல்டா கேட்டதும் உர்ரானார்.

‘‘எங்களைப் பொறுத்தவரை கமல் இன்னும் ‘பதினாறு வயதினிலே’தான். இன்னும் வயசுக்கே வரலை’’ என்று கூறிவிட்டு பெரிதாக சிரித்தார். ‘‘நான் பேசிட்டு இருந்தது நம்ம டிஜிபிகிட்டே! ‘ஒரு திடீர் அவசரச் சட்ட சிறப்பு ஸ்பெஷல் கவன ஈர்ப்புத் தீர்மான மசோதா நிறைவேற்றி, கமலின் ‘விஸ்வரூபம்’ ரெண்டாம் பாகத்தை அரசே நல்ல விலைக்கு வாங்கி எல்லா தியேட்டரிலும் ரிலீஸ் பண்ணிட்டா, தானா அடங்கிடுவார்’னு ஐடியா கொடுத்தாரு. இதேபோல, இன்னொரு தி.அ.ச.சி.ஸ்.க.ஈ.தீ. மசோதா நிறைவேற்றி, ‘மருதநாயகம்’ படத்தை அரசே தயாரிக்கலாம் என்ற எண்ணமும் வந்திருக்கு. அவர்பாட்டுக்கு பொசுக்குனு ஷூட்டிங் கிளம்பிப் போய்ட்டா, அப்புறம் யாரு அறிக்கை விடுறது? யாரு ட்வீட் போடுறது?’’ என்று கண்ணைச் சுருக்கிக்கொண்டு சிரித்தார்.

‘‘நம்ம டிஜிபி ‘குட் காப்’. அதாவது நல்ல போலீஸ். அரசுக்கு அப்பப்போ நல்ல ஐடியாவும் கொடுக்கறார். அவருக்கு பதவி நீட்டிப்பு தந்தால், நம்ம எதிர்க்கட்சி தலைவர் கோவிச்சிக்கிறார்’’ என்று அலுத்துக்கொண்டார்.

‘‘ஆமா, கமலுக்கு அரசியல் தெரியாதுனு எதை வச்சு சொல்றீங்க?’’ என்றார் உல்டா.

‘திரும்பவும் மொதல்லேர்ந்தா’ என்பதுபோல டயர்டானவர் ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார். ‘‘நீயே பாரேன் உல்டா.. ஊழல் ஆதாரங்களை சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அனுப்பச் சொல்றார். இப்படி அனுப்பிச்சா என்னாகும்? அவுங்களுக்கு தெரிஞ்சு நடந்த தப்பு மட்டுல்லாம, தெரியாம நடந்த தப்புகளைப் பத்தியும் தெரியவரும். அட நம்ம இலாகாவுல இவ்ளோ நடந்திருக்கானு தெரிஞ்சுக்கிட்டு, அதையே ஆதாரமா வைச்சி, தங்களுக்குத் தெரியாம நடந்த தப்புக்கெல்லாம் ஷேர் கேட்டு அதிகாரிங்களை படுத்தி எடுப்பாங்க. இப்படி செய்தா, ஊழல் பாத்திரம் இன்னும் ஜோரா பொங்கி வழியாதா!’’ என்று அசத்தலாக ஒரு லாஜிக் சொன்னார்.

உலகநாயகனிடம் இருந்து ‘காலா’ நாயகன் பக்கம் தாவினார் உல்டா. ‘‘ரஜினியும்தான் சிஸ்டம் சரியில்லைன்னார். அவரை நீங்க யாரும் கண்டுக்கவே இல்லயே..’’ என்றார் உல்டா.

‘‘கமல் இப்ப ஃப்ரீயா இருக்காரு. தினம் ஒரு கருத்து சொல்றார். ரஜினி அப்படி இல்லையே.. எப்போவாச்சும் - அதுகூட வெண்டைக்காய் கூட்டு மாதிரி வழவழ கொழகொழனு சொல்லிட்டு அவர் வேலையைப் பார்க்கப் போயிடறாரு. இன்னொரு விஷயம்.. டைரக்டர் ரஞ்சித்கிட்ட எங்க ஆளுங்க பேசியாச்சு. ‘காலா’ படம் முடிய இன்னும் ரெண்டு வருஷம் ஆகுமாம். அதுக்குள்ள ரஜினி மும்பைவாசியாவே மாறிடுவாரு. தேவைப்பட்டா அதுக்கப்புறம் இரண்டு வருஷம் இழுக்கவும் ரெடின்னு ரஞ்சித் சொல்லிட்டாராம். இதையெல்லாம் மீறி ரஜினி ஏதாவது டார்ச்சர் கொடுத்தா, ‘காலா’ கதை என்னுடையதுனு அமெரிக்கா, ரஷ்யா, சீனா கோர்ட்ல எல்லாம் கேஸ் போட பல அசிஸ்டென்ட் டைரக்டர்களை ரெடி பண்ணியாச்சு’’ என்று மூச்சு விடாமல் சொல்லி முடித்தார்.

“இன்னொண்ணும் தெரிஞ்சுக்கோ.. அமித்ஷா மூலமா மோடிஜிகிட்டே பேசியிருக்கோம். இப்போ புதுசா ஒரு சட்டம் வர இருக்கு. அந்த சட்டப்படி ஒருத்தர் மூணு தடவைக்கு மேலே முதல்வர் ஆகக் கூடாது. அதே மாதிரி, ஒவ்வொரு துறையில் இருந்தும் முதல்வர் பதவிக்கு ஆட்கள் இத்தனை தடவைதான் வரலாம்னு கோட்டா வரப் போகுது. அதுபடி பார்த்தா, சினிமா துறையில் இருந்து வர்றதுக்கான கோட்டா, ‘அம்மா’வோட முடிஞ்சு போச்சு. ஆசிரியர், விவசாயி, டிவி சீரியல் நடிகர், மருத்துவர் இவங்கள்ல ஒருத்தர்தான் முதல்வராக முடியும்.. எப்படி சட்டம்?’’ என்று எகத்தாளமாகக் கேட்டார்.

‘‘அதென்ன சம்பந்தமில்லாம டிவி சீரியல் நடிகர்?’’ உல்டா சந்தேகம் கேட்டார். ‘‘என்னதான் எதிர் முகாமா இருந்தாலும் ஸ்டாலினுக்கும் ஒரு சான்ஸ் தரணுமில்லே.. அவர்தான் ‘குறிஞ்சி மலர்’ சீரியல்ல நடிச்சிருக்காரே’’ என்றார். ‘‘மூணு முறைக்கு மேலே ஒருத்தர் முதல்வர் ஆகக் கூடாது என்கிற கண்டிஷன் பன்னீருக்கு ஷட்டர் போடத்தானே..?’’ என்று கேட்டு அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டார் உல்டா.

‘‘சார்ஜ் திரண்டுவர்ற நேரத்துல, ஸ்மார்ட்போன உடைக்கிற பார்த்தியா.. கொளுத்திப்போடாம மொதல்ல இடத்தைக் காலி பண்ணு..’’ என்று உல்டாவை ‘பேக்’ பண்ணினார் எடக்குப்பாடி.. ஸாரி, எடப்பாடி!

கமல்ஹாசனுக்கு போலீஸ் பாதுகாப்பு

உலகநாயகன் வீட்டு வாசலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு. ‘‘உள்ளே ஏதோ ஒரு புதிய அறிக்கையை ட்வீட் பண்ணிட்டிருக்கார். பார்த்து போ உல்டா’’ என்று பயமுறுத்தி உள்ளே அனுமதித்தார் ஒரு போலீஸ்காரர். அறைக்குள் கம்பராமயணம், கந்தர் அலங்காரம், திருமுருகாற்றுப்படை, பதினெண்கீழ் கணக்கு, திருக்குறள் என்று ஏகப்பட்ட நூல்களுக்கு நடுவே அமர்ந்திருந்தார் கமல்.

உல்டாவின் சந்தேகப் பார்வையைப் புரிந்துகொண்ட கமல், ‘‘ஒண்ணுல்ல உல்டா! அறிக்கைகள், ட்வீட்டுல நான் என்ன சொல்லவரேன்றதே பலருக்கு புரியலையாம். டபாய்க்கறாங்க. சுத்த தமிழ் இலக்கியத்துலருந்து எடுத்து அம்பு விட்டா, என்ன சொல்றாங்கனு பார்ப்போம்” என்றார். ‘அதுசரி.. சினிமான்னா இந்தி, இங்கிலீஷ், தெலுங்குன்னு டிவிடி பார்க்கலாம். அரசியல் அறிக்கைக்கு இதையெல்லாம்தானே நம்பி ஆகணும்? ஆனாலும் ஒரு பணிவான வேண்டுகோள்.. இந்த புஸ்தகத்துல இருந்து எடுக்கிறதுல தப்புல்ல. கொஞ்சம் எளிமையான வார்த்தையா எடுத்துப் போடுங்க. உங்க அறிக்கையில் வர்ற பல வார்த்தைகள் ஐநூறு நோட்டு மாதிரி புழக்கத்திலேயே இல்லைனு உங்க ரசிகர்களே புலம்புறாங்க’’ என்ற உல்டாவைக் கொடூரமாக முறைத்தார் கமல். 

‘‘சிறுமிரட்டல்களுக்கஞ்சா திரண்டதோளணை கறுப்புச் சட்டையுடுத்திய இந்த பெரியாரின் பேரனிடம் எவ்வார்த்தையும் துணிந்து பேசலாமென துச்சமென நினைத்துவிட்டீர்களோ எம்மனங்கவர்ந்தவுல்ட்டா?’’ என்று கமல் கேட்க, ஒரு கணம் கிர்ரென்று தலைசுற்றியது உல்டாவுக்கு.

சகஜநிலைக்குத் திரும்பியவர், ‘‘பாத்தீங்களா, பாத்தீங்களா? தக்காளி விலை ஏறுன விவகாரம்னாக்கூட உடனே சாமியை இழுக்கறதை நீங்க ஒரு ஃபேஷனாவே வச்சிருக்கீங்க. இதனாலதான் பிஜேபிகாரங்க டென்ஷன் ஆகுறாங்க. ‘கமலுக்கு அரசியல் தெரியாதுனு சொல்லலை... தெரிஞ்சா நல்லா இருக்குமேனுதான் சொல்றோம்’னு கலாய்க்கறாங்க” என்ற உல்டாவை சந்தேககக்கண்கொண்டு.. ஸாரி, சந்தேகமாகப் பார்த்தார் கமல்.

பேச்சை மாற்றிய உல்டா, ‘‘ஆமா, முதுகெலும்பு பத்தி எச்.ராஜா என்னமோ கமென்ட் அடிச்சாராமே?’’ என்றார். 

‘‘சபாஷ் நாயுடு ஷூட்டிங்ல அடிபட்டு கால் எலும்பு முறிஞ்சு வீட்டுல இருந்தேன். அந்த சமயத்துல எடுத்த எக்ஸ்ரே ரிப்போர்ட் எப்படியோ பிஜேபி கைக்குப் போயிடுச்சு. கால் எலும்புக்கும் முதுகெலும்புக்கும் வித்தியாசம் தெரியாம பேசிட்டாரு. அப்படியே முதுகெலும்பு இல்லைன்னே வச்சுக்குவோம். சியெம் சீட்டுல உட்காரவங்களுக்கு முதுகெலும்பு கண்டிப்பா இருக்கணும்னு ரூல்ஸ் எதுவும் இல்லயே’’ என்று கூறி உல்டாவுக்கு விடைகொடுத்தார்.

 

சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கியது உண்மைதான்: டிஜிபி பேட்டி

சிறையில் உண்மையிலேயே என்னதான் நடந்தது என்று நைஸாக ஒரு பெண் கைதியிடம் பேச்சு கொடுத்தார் உல்டா. ‘‘போட்டோ, வீடியோ கூடாது. அப்புறம் இதை சேனலுக்கு வித்து, வருமானத்துக்கு அதிகமா நீங்களும் சொத்து குவிச்சுடுவீங்க’’ என்று லா-பாயின்ட்டோடு ஆரம்பித்தார் அந்த கைதி.

‘‘அங்கு நடந்தது எல்லாமே நெசம்தான். ஆனா, இதெல்லாம் அவங்க, அவங்களுக்காக செஞ்சிக்கல. எல்லாம் பொதுநலத்துக்காக பண்ணனதுதான். ஜெயில்ல சாப்பாடு சரியில்ல. டிவி சரியா தெரியல, சீரியல் பார்க்க முடியல, வீட்டுக்கு போன் பேச முடியலன்னு கைதிகள் நிறைய பேர் அவங்க கால்ல விழுந்து குறையெல்லாம் சொன்னாங்க. இதையெல்லாம் சின்னத்தாயுள்ளத்தோட கேட்டுக்கிட்ட அவங்க, அவங்க மட்டும் தனி ரூம்ல எல்இடி டிவி வச்சு பார்க்கல. மொத்தம் பதினஞ்சு எல்இடி டிவி ஆர்டர் போட்டு ஜெயிலுக்கு வரவச்சாங்க. ஜெயில்ல சிசிடிவி கேமரா போல ஆங்காங்கே எல்இடி டிவி. கைதிகளுக்கு ரொம்ப குஷி. இதேபோல, பிரபல டிவி சேனல்ல சமையல் நிகழ்ச்சி நடத்தியவரை பிரத்யேகமாக ஆளுங்களைவிட்டு கூட்டிட்டு வந்து, சமைக்கச் சொல்லி, தானும் சாப்பிட்டதோட, கைதிகளுக்கெல்லாம் போட்டார். ஜெயில் ஆபீசருங்ககூட அந்த சாப்பாடுதான் சாப்பிட்டாங்க. இதையெல்லாம் ஒரு சேவையாகதான் செய்தாங்க’’ என்று மெய்சிலிர்க்க சொன்னார் அந்த கைதி.

‘‘அப்போ.. அந்த ஷாப்பிங்?’’ என்று குறுக்கிட்டார் உல்டா. ‘‘அதுவும் நெசம்தான். அவங்க ஏன் ஷாப்பிங் போனாங்க? அவங்க சொந்தக்கார பையன் விவேக் வாங்கிட்டுவந்த காய்கறி எல்லாம் சொத்தையும், முத்தலுமா இருந்திச்சு. அதனால, வெண்டைக்காய ஒடச்சுப் பாத்து வாங்குறதுக்காக, முத்த வெண்டைக்காய மத்த கைதிங்க சாப்பிட்டுடக் கூடாதேன்னு ஷாப்பிங் போனாங்க..’’

‘‘அந்த சுடிதார்?’’

‘‘நீங்க வீட்ல டவுசர் போட்டிருப்பீங்க. கடைக்கும் அதோடயே போவீங்களா?’’ என்று கோபம் குபீரென்று கொப்பளிக்க கேள்வியை உல்டாவை நோக்கி திருப்பினார் அந்தக் கைதி.

‘‘சரி, எல்லாம் நல்லாத்தானே போய்ட்டிருந்திச்சு. அப்புறம் எப்படி பிரச்சினையாச்சு?’’ என்றார் உல்டா.

‘‘எல்லாம் கரண்டு பில்லால் வந்த வினை. அக்ரஹார ஜெயிலுக்கு எப்பவும் கரண்டு பில் மூவாயிரம்தான் வரும். போனமாசம் முப்பதாயிரம்!’’

‘ஆ’ என்று ஆச்சரியத்தைப் பிளந்தார் உல்டா. ‘பின்ன.. 15 எல்இடி டிவி, 3 வாசிங்குமிசினு, 3 எல்ட்ரிக் குக்கர், 8 பிரிஜ்ஜு, தண்ணிக்கு 15 ஆர்ஓ, 15 செல்போன் ஜார்ஜ்.. நீயே கணக்கு போட்டுப் பாத்துக்கோ’’ என்றார்.

உல்டாவின் தலை டாப்கியரில் சுற்றத் தொடங்கியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x