

ஆடி 18 - தீரன் சின்னமலை நினைவு தின சிறப்புப் பகிர்வு
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு, "தீரன் சின்னமலை மாளிகை" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஓடாநிலையில் சின்னமலை நினைவு மணி மண்டபம் உள்ளது. சென்னையில் தீரன் சின்னமலையின் உருவச்சிலை தமிழக அரசால் அமைக்கப்பட்டது. 2005 ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி இந்திய அரசின் தபால் தந்தி மற்றும் தகவல் தொடர்புத் துறை, "தீரன் சின்னமலை நினைவு அஞ்சல் தலை" வெளியிட்டது.
இத்தகைய சிறப்புகளைப் பெற்றும், வரலாற்றின் சிறப்புப் பக்கங்களில் பொறிக்கப்படாத தீரன் சின்னமலை யார்?
ஈரோடு மாவட்டம், காங்கேயம் அருகில் உள்ள மேலப்பாளையத்தில் 1756-ம் ஆண்டு பிறந்தவர் தீரன் சின்னமலை. அவரின் பிறப்பிடமான கொங்கு நாடு, அப்போது மைசூர் மன்னர்களால் ஆளப்பட்டது. ஹைதர் அலி ஆண்டு கொண்டிருந்த காலத்தில் இவரின் பகுதியில், ஹைதர் அலியின் திவான் முகமது அலி, வரியும் தானியமும் வசூலித்துவிட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்தார்.
சின்னமலையான தீர்த்தகிரி
அதைக் கண்ட தீரன் சின்னமலை, அவற்றைப் பிடுங்கி ஏழை மக்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தார். கோபமடைந்த திவான், யார் நீ எனக் கேட்க, 'சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையிலே ஒரு சின்னமலை பறித்தான் என்று போய்க் கூறு!' எனக் கம்பீரமாகச் சொல்லியனுப்பினார். அதற்குப் பிறகே அவரின் பெயர் சின்னமலை என்றானது. அவரின் பெற்றோர் வைத்த பெயர் தீர்த்தகிரி.
சின்னமலை போர்க் கலைகளான வாள் பயிற்சி, விற்பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம் போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து, இளம் வயதிலேயே போர் வீரராக உருவெடுத்தார். ஓடிக்கொண்டிருக்கும் குதிரையின் முழங்காலில் குறி தவறாமல் சுடுவதில் வல்லவர் சின்னமலை.
இயல்பாகவே தலைமைப் பண்புடன் வளர்ந்த சின்னமலை, தனது மக்களைக் கொடுமைப்படுத்தியவர்களை எதிர்த்துப் போரிட நினைத்தார். அதற்காகப் படை திரட்ட மைசூர் சென்றார். அங்கே திப்பு சுல்தான் ஆங்கிலேயரை எதிர்க்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தார். இருவரும் ஒன்றாகக் கைகோர்த்தனர். இதையறிந்த ஆங்கிலேயப் படை இவர்களை உடனே எதுவும் செய்ய முடியாமல், நேரம் பார்த்து நசுக்கக் காத்திருந்தது.
சின்னமலை- திப்பு சுல்தான் கூட்டணி
1790களின் பிற்பகுதியில் சின்னமலை, திப்பு சுல்தான் கூட்டணி ஆங்கிலேயருடன் மோதியது. அதில் திப்புவின் கோட்டையை மட்டுமே தரிசித்துச் சென்றனர் ஆங்கிலேயர்கள்.
இது பொறுக்காத ஆங்கிலேயர்கள், பல புதிய போர் யுக்திகளை நயவஞ்சமாகத் தீட்டினர். 1799-ல் நடைபெற்ற நான்காம் மைசூர்ப் போரில் திப்பு மரணம் அடைய, மைசூர் ஆங்கிலேயர் வசம் போனது. திப்பு சுல்தானின் வீரமரணத்திற்குப் பின்னர், கொங்கு நாட்டில் உள்ள ஓடாநிலை என்னும் ஊரில் தங்கியிருந்தார் சின்னமலை.
திப்புவின் மரணத்திற்குப் பழிதீர்க்கும் வண்ணமாக, அவருக்கு சொந்தமான சிவன்மலை- பட்டாலிக் காட்டில் தனது வீரர்களுக்குப் பயிற்சி அளித்து, பிரெஞ்சுக்காரர்கள் உதவியோடு பீரங்கிகள் போன்ற போர் ஆயுதங்களையும் தயாரித்தார். தன்னை ஒரு பாளையக்காரராக அறிவித்து,
அண்டை நாட்டில் உள்ள பாளையக்காரர்கள் அனைவரையும் ஒன்று திரட்டினார். ஆங்கிலேயர்கள் 1802-ல் குதிரைப் படைகளை அனுப்பினர். இப்படை ஓடாநிலையில் சின்னமலையின் படையுடன் மோதியது. மீண்டும் ஆங்கிலேய அரசு தோல்வி கண்டது.
1803-ல் ஈரோடு மாவட்டம், அறச்சலூரில் கர்னல் ஹாரிஸின் ஆங்கிலப்படையையும் கையெறி குண்டுகள் வீசி வெற்றிக் கண்டார் சின்னமலை. அவரின் கோட்டையைத் தகர்க்க பீரங்கிப் படையோடு ஆங்கிலேயர்கள் வருவதை அறிந்தவர், கோட்டையை விட்டு வெளியேறினார். அறச்சலூர் அருகிலுள்ள ஓடாநிலையில் அவர் கட்டிய பலமிக்க கோட்டையை, 143 பீரங்கிகளை வைத்தே, பிரிட்டிஷ் படைகள் இடிக்க வேண்டிதாக இருந்தது.
சூழ்ச்சியால் வீழ்ந்த சின்னமலை
சின்னமலை அந்தக் கோட்டையில்தான் எண்ணற்ற துப்பாக்கிகளையும், பீரங்கிகளையும், வெடிமருந்துகளையும் தயாரித்தார். ஆங்கிலேயர்கள் பலரையும் தோல்விக்குள்ளாக்கி, அவர்களைத் தலைகுனியச் செய்த தீரன் சின்னமலையை, யாராலும் வீரத்தால் வெற்றி கொள்ள முடியவில்லை. எனவே சூழ்ச்சியால் சின்னமலையை வீழ்த்த எண்ணிய ஆங்கிலேயர்கள், அவரது சமையல்காரன் நல்லப்பனுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி, தங்கள் வலையில் விழச்செய்தனர். விலை போன நல்லப்பன், பழனிமலைக்கு அருகிலுள்ள வனத்தில் தீரன் சின்னமலை இருப்பதைக் காட்டிக் கொடுத்தான்.
தீரன் சின்னமலையையும், அவர் தம்பிகள் மற்றும் படைவீரர்களையும் கைது செய்து, அவர்களை சங்ககிரிக் கோட்டைக்குக் கொண்டு சென்ற ஆங்கிலேயர்கள், 1805-ல் ஆடிப்பெருக்கான 18-ம் நாளன்று தூக்கிலிட்டனர். தம்பிகளுடன், தீரன் சின்னமலையும் வீர மரணமடைந்தார்.
ஆங்கிலேயர்களைப் பலமுறை வெற்றி கண்டு, புறமுதுகிட்டு ஓடச்செய்து, கடைசியில் சூழ்ச்சியினாலே மாண்ட தைரிய வீரன், தீரன் சின்னமலையின் தீரச்செயல்களை நினைவுகூர்வோம்.