Published : 12 Aug 2017 10:37 AM
Last Updated : 12 Aug 2017 10:37 AM

கைபேசி.. ஒரு கையடக்க ஆபத்து!

இன்று சர்வதேச இளைஞர்கள் தினம்

இன்றைய இளைஞர்களின் சக்தி ஆச்சர்யமூட்டுகிறது. அதிலும் சமூக ஊடகங்களில் இளைஞர்களின் செயல்பாடுகள் உலகையே திரும்பிப் பார்க்க வைக்கின்றன. அரபு வசந்தம் தொடங்கி மெரினா புரட்சி வரை உதாரணங்களைச் சொல்லலாம். அதேசமயம் அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சு என்பதையும் மறக்கக் கூடாது. ஆம், கைபேசி மூலம் சமூக ஊடகங்களை கையாளும் இளைஞர்களில் கணிசமானோர் அதற்கு அடிமையாகிவிட்டனர் என்றே தெரிகிறது. அறிவியலின் வளர்ச்சி அதிவேகமாக இருக்கிறது. தினம் தினம் புதுப்புது தொழில்நுட்பங்களில் ஆண்ட்ராய்டு அலைபேசிகள் நம்மைக் கவர்ந்திழுக்கின்றன. சொல்லப்போனால், கைபேசி இல்லாத நபரே இல்லை என்றே கூறலாம். கைபேசி பயன்படுத்துபவர்களில் கணிசமானோர் இந்த உலகில் வாழவில்லை; அவர்கள் உலகமே கைபேசியாகிவிட்டது. அதிலேயே வசிக்கிறார்கள். வாழ்வதற்கும் வசிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது அல்லவா. முன்பெல்லாம் நம் வாழ்வில் மூன்றாவது நபர்போல் இருந்த கைபேசி, இன்று முதல் நபராக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. அதை நமது மூன்றாவது கை என்றும் அழைக்கலாம். ஆனால், இது ஆரோக்கியமானதா?

இன்று குழந்தைகள்கூட கைபேசியில் முடங்கிக் கிடக்கிறார்கள். மரத்தடியில், மைதானத்தில் ஓடி ஆடிய குழந்தைகளைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. நமது குழந்தைகள் கைபேசியைப் பயன்படுத்தும்போது ஏற்படும் பாதிப்புகளை அறிவீர்களா? உடல், மனம் இரண்டுமே பாதிக்கிறது. குழந்தை நான்கு பேருடன் அக்கம்பக்கம் பேசித் திரிந்தால்தான் பேச்சு வரும். கைபேசியில் முடங்கிக்கிடந்தால் பேச்சு எப்படி வரும்? காற்றுதான் வரும். கைபேசியிலேயே நேரத்தைச் செலவிடும் குழந்தைகள், மற்ற குழந்தைகளுடன் ஒன்றிணைய சிரமப்படும். சமூக மைய நீரோட்டத்தில் இருந்து விடுபட்டு தனிமைப்படும். இதன் தொடர்ச்சியாக மனச்சிதைவு வரை ஏற்படும் வாய்ப்பு உண்டு.

அடுத்தது, இளைஞர்கள். கைபேசியை உபயோகப்படுத்துவதில் இளம் வயதினர் அதிகம். சமூக ஊடகங்களில் ஒரு நிமிடத்துக்கு 510 விமர்சனங்கள், 1,36,000 புகைப்படங்கள், 2,93,000 நிலைத்தகவல்களை வெளியிடுகின்றனர். கைபேசியைக் கொண்டு உலகையே வாங்கிவிடலாம் என்று கனவு காண்கிறார்கள். படிப்பது, ஷாப்பிங் செய்வது, வங்கியில் பணம் கட்டுவது, பயணச்சீட்டு முன்பதிவு செய்வது என எதையுமே கைபேசியில் முடித்துவிடுகின்றனர். நல்ல விஷயம்தான். ஆனால் காலை கண்விழித்தது தொடங்கி இரவு தூங்கும் வரை... சிலசமயம் இரவு தூங்காமல்கூட கைபேசியிலும் சமூக ஊடகங்களிலும் மூழ்கியிருப்பதுதான் பெரும் தவறு. இதனால், சாப்பிடுவது, தூங்குவது, படிப்பது என்பதுபோன்ற வேலைகளைக்கூட செய்யாமல் அவர்களது அனைத்து செயல்பாடுகளும் பாதிக்கப்படுகின்றன.

சக மனிதர்களிடம் அன்பு, ஆசை, கோபம், வெறுப்பு, தன் அருகில் உள்ளவர்களை அழைப்பது அனைத்தும் சமூக ஊடகங்கள் மூலமாகத்தான் என்பது வருத்தமான ஒன்று. ஏறக்குறைய இதுவும் ஒருவகை அடிமைத்தனம்தான். குடிபோதைக்கு அடிமையாவது போலத்தான் இதுவும். பழக்கத்துக்கும் அடிமைத்தனத்துக்கும் வித்தியாசம் உண்டு. பழக்கம் என்பது தேவைப்படும்போது மட்டும் ஒருவிஷயத்தைப் பயன்படுத்துவது.

அடிமைத்தனம் என்பது ஒரு விஷயத்தில் இருந்து விடுபட முடியாமல் அன்றாட செயல்பாடுகளில் இருந்து துண்டிக்கப்பட்டிருப்பது. கைபேசியிலும் சமூக ஊடகங்களிலும் ஒருவர் அடிமையாக இருக்கிறார் என்பதை கீழ்க்கண்ட அறிகுறிகளை வைத்து அறியலாம். இவர்களால் ஒரு விநாடிகூட கைபேசி இல்லாமல் இருக்க முடியாது. கைபேசி இல்லை எனில் இனம்புரியாத பயத்தில் தவிப்பர். எதையோ இழந்தது போல இருப்பர். அலைபேசி அழைக்கும் முன்பே எடுத்துப் பார்ப்பார்கள். அலாரம் அடிப்பதற்கு முன்பு எழுந்து அலாரத்தை நிறுத்துவார்கள். கைபேசியை அடிக்கடி தொட்டுப் பார்ப்பார்கள். உடல் ரீதியாக கழுத்து, முதுகு, இடுப்பு, கண் தசைகள், தோள்பட்டை வலி, மூளை, நரம்பியல் பாதிப்பு, புற்றுநோய், காது, இதய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. கைகள் சுத்தமாக இல்லாவிட்டால், கைபேசி முலம் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தோல் பிரச்சினைகள், தொற்றுநோய், உடல் எடை குறைவது, அதிகரிப்பது ஆகிய பிரச்சினைகள் ஏற்படலாம். மனரீதியாக கோபம், மனப்பதற்றம், மனச் சோர்வு, மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

நாம் பயன்படுத்தும் கைபேசியின் அலைவீச்சு மற்றும் எவ்வளவு நேரம், எவ்வளவு தொலைவில் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்தும் மேற்கண்ட பாதிப்புகள் ஏற்படும். மேற்கண்டவற்றில் ஒருசில அல்லது பல அறிகுறிகள் உங்களிடம் காணப்படுவதாக உணர்கிறீர்களா? இந்தக் கையடக்க ஆபத்தில் இருந்து எப்படி விடுபடுவது? வெகு சுலபம்! முதல் வேலையாக உங்கள் கைபேசியின் இணைய இணைப்பை (மொபைல் டேட்டா) அணைத்து வையுங்கள். மின்னஞ்சல் பார்ப்பது, இணையத்தில் தகவல் அறிவது என தேவையான நேரத்தில் மட்டும் ஆன் செய்து பயன்படுத்துங்கள். கைபேசி மட்டுமே வாழ்க்கை அல்ல; அதற்கு வெளியே எவ்வளவோ இருக்கிறது. உங்கள் கடமைகள், பொறுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிடுங்கள். அதைவிட மகிழ்ச்சி வேறில்லை. நண்பர்கள், உறவினர்கள், அக்கம்பக்கத்தினருக்கு, ‘மெசேஜ்’, ‘வாட்ஸ்அப்’ அனுப்பாமல், நேரில் பேசுங்கள். நெருக்கமானவர்களிடம் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள். நிறைய படியுங்கள். பிடித்த வேலையில் ஈடுபடுங்கள். புது இடங்களுக்குச் செல்லுங்கள். புது உலகைக் காண்பீர்கள்! -

கட்டுரையாளர், மனநல ஆலோசகர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x