

த
லைசிறந்த தமிழ் அறிஞரும் சிறந்த கல்வியாளருமான வெ.ப.சுப்பிரமணிய முதலியார் (Ve.Pa.Subramaniya Mudaliyar) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
திருநெல்வேலி மாவட்டம் வெள்ளகால் கிராமத்தில் (1857) பிறந்தார். 5 வயது வரை பெற்றோருடன் வசித்தார். பின்னர் இவரது மாமாவான திருநெல்வேலி தளவாய் குமாரசாமி முதலியாரின் அரண்மனையில் வளர்ந்தார்.
திண்ணைப் பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார். நெல்லை அரசரடி மிஷன் பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். ராமாயணம் மகாபாரதம், திருவிளையாடல் புராணம் உள்ளிட்ட பலவற்றைக் கற்றுத்தேர்ந்தார். அம்மானை, தூது, மாலை, மடல் உள்ளிட்ட சிற்றிலக்கிய வகைகளையும் கற்றார். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஆழ்ந்த அறிவு கொண்டிருந்தார்.
தமிழ் இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்று இலக்கிய அறிவை பட்டை தீட்டிக்கொண்டார். சிறிது காலம் விவசாயத் தொழிலில் ஈடுபட்டார். பின்னர் கிறிஸ்தவக் கல்லூரியில் இன்டர்மீடியட் பயின்றார். அப்போது பிற மாணவர்களுக்குத் தமிழ் கற்றுத் தருவதற்காக கம்பராமாயணம், நன்னூல், இலக்கணக்கொத்து, தொல்காப்பியம் ஆகியவற்றை ஆழ்ந்து கற்றார்.
திருநெல்வேலி திரும்பியவர், தாலுகா அலுவலகத்தில் தற்காலிக எழுத்தராகப் பணியாற்றினார். சைதாப்பேட்டையில் உள்ள அரசு வேளாண்மைக் கல்லூரியில் பயின்று 1884-ல் பட்டம் பெற்றார். அரசுத் துறையில் பல பொறுப்புகளை வகித்தார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக 25 ஆண்டுகள் பணியாற்றினார். அறிவியல், தொழில்நுட்ப பாட நூல்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்த்தார். ‘இந்தியன் ஸ்டாக் ஓனர்ஸ் மேனுவல்’ என்ற நூலை ‘இந்து தேசத்துக் கால்நடைக்காரர் புத்தகம்’ என்ற பெயரில் வெளியிட்டார். கால்நடை மருத்துவம் குறித்து தமிழில் வெளியான முதல் நூல் இதுதான்.
தொடர்ந்து பல நூல்களை வெளியிட்டார். பின்னர் பம்பாய் சென்று அங்குள்ள கால்நடைக் கல்லூரியில் பயின்று, ‘ஜிவிபிசி’ பட்டம் பெற்றார். தமிழகம் திரும்பி, அரசு கால்நடை மருத்துவத் துறையின் இணை கண்காணிப்பாளராகப் பணியாற்றினார். 1915-ல் விருப்ப ஓய்வு பெற்று, தமிழ்ப் பணியோடு சமூகப் பணிகளையும் மேற்கொண்டார்.
திருநெல்வேலி தாலுகா போர்டு உறுப்பினராகவும், அதன் துணைத் தலைவராகவும், தென்காசி நீதிமன்ற இருக்கையின் தலைவராகவும் செயல்பட்டார். ‘ராவ் சாஹிப்’, ‘கில்லத்’ என்ற பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டன. சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் இவருக்கு ‘முதுபெரும் புலவர்’ பட்டம் வழங்கியது.
பல இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளிவந்தன. அண்ணாமலைச் செட்டியார், அழகிய சொக்கநாதப் பிள்ளை, மீனாட்சிசுந்தரக் கவிராயர் உள்ளிட்ட பலரது வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதினார்.
3 காண்டங்கள், 293 வெண்பாக்கள் கொண்ட இவரது ‘அகலிகை வெண்பா’ மிகவும் பிரபலமடைந்தது. இதுதவிர, பல வெண்பா, சரித்திர நூல்களைப் படைத்தார். இவரது பல நூல்கள், சென்னை பல்கலைக்கழகப் பாடமாக வைக்கப்பட்டன. சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் உருவாக்கிய ‘கலைச்சொற்கள் அகராதி’, வேளாண்மை கலைச்சொல்லாக்க நூல் தயாரிப்பிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.
வாசிப்பதையே சுவாசமாகக் கொண்டிருந்த இவர், ஏராளமான நூல்களைச் சேகரித்தார். இந்த நூலகம் திருநெல்வேலி ம.தி.தா.இந்துக் கல்லூரியில் செயல்படுகிறது. ‘தமிழ்ச்செம்மல்’, ‘தமிழாகரர்’ என்று போற்றப்பட்ட வெ.ப.சுப்பிரமணிய முதலியார் 89-வது வயதில் (1946) மறைந்தார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்