

த
லைசிறந்த இந்திய வரலாற்றாய்வாளரும், சிறந்த படைப்பாளியுமான கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி (K.A.Nilakanta Sastri) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 12). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைக்குறிச்சி என்ற ஊரில் பிறந்தார் (1892). கல்லிடைக்குறிச்சி அய்யா நீலகண்ட சாஸ்திரி என்பது இவரது முழுப் பெயர். சொந்த ஊரில் பள்ளிப் படிப்பு முடிந்த பிறகு, நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் இடைநிலை வகுப்பை (FA) முடித்தார். சென்னை தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் மேற்படிப்பைத் தொடர்ந்தார்.
முதுகலைப் பட்டத்தில் (எம்.ஏ) சென்னை மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார். 1913 முதல் 1918 வரை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தார். 1918-20 காலகட்டத்தில் வாரணாசியில் உள்ள இந்து பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக 5 ஆண்டுகள் பணியாற்றினார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் புதிதாகத் தொடங்கப்பட்டதும் அதன் கலைக்கல்லூரியின் முதல்வராகப் பொறுப்பேற்றார். 1929-ல் திருச்சி நேஷனல் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். அதே ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் தொல்லியல் பேராசிரியராகப் பதவியேற்று 1946 வரை பணிபுரிந்தார்.
ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே இந்தியாவின் வரலாறு குறித்து விரிவான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். சோழர்கள் குறித்து இவர் எழுதிய நூல் மிகவும் பிரசித்தம். இதில் 16-ம் நூற்றாண்டு முதல் சோழர்களின் வரலாறு, ஆட்சி நிர்வாகம் குறித்த விரிவான ஆராய்ச்சிகள் இடம்பெற்றுள்ளன.
‘ஏஜ் ஆஃப் நந்தாஸ் அன்ட் மயூராஸ்’, ‘தி பாண்டியன் கிங்டம் பிரம் எர்லியஸ்ட் டைம்ஸ் டு தி சிக்ஸ்டீன்த் செஞ்சுரி’, ‘சவுத் இந்தியன் இன்புளுயன்ஸ் இன் தி பார் ஈஸ்ட்’, ‘ஹிஸ்ட்ரி ஆஃப் ஸ்ரீ விஜயா’, ‘காம்பிரெஹென்சிவ் ஹிஸ்ட்ரி ஆஃப் இந்தியா’, ‘தி கல்சர் அன்ட் ஹிஸ்ட்ரி ஆஃப் தமிழ்ஸ்’, ‘சங்கம் லிட்ரேச்சர்’ உள்ளிட்ட ஏராளமான வரலாற்று ஆராய்ச்சி நூல்களைப் படைத்துள்ளார்.
தென்னிந்திய வரலாறு, அதன் பிரச்சினைகள், அவர்களது சமூக வாழ்வு குறித்த கால வரிசையிலான குறிப்புகள், தென்னிந்தியாவின் தமிழர் ராஜ்ஜியம், விஜய நகர வரலாறு, அதன் எழுச்சி, வீழ்ச்சி, தூரக் கிழக்கு நாடுகளிலும் பரவிய தென்னிந்தியரின் தாக்கங்கள் என விரிவான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு பல நூல்களைப் படைத்தார்.
இவருக்குப் பின் வந்த பல வரலாற்று அறிஞர்களுக்கு இவரது நூல்களும் கட்டுரைகளும் சிறந்த வழிகாட்டுதல்களாக அமைந்தன. இவரது நூல்கள் தமிழிலும் மேலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
1952 முதல் 1955 வரை இந்தியவியல் பேராசிரியராக மைசூர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். 1954-ல் மைசூர் மாநிலத்தின் தொல்லியல் துறையின் கவுரவ இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
1957-ல் பத்மபூஷண் விருது அளிக்கப்பட்டது. புகழ்பெற்ற வரலாற்றாளர் ஆர்.எஸ்.சர்மா, ‘க.அ.நீலகண்ட சாஸ்திரி ஒரு மீட்டுருவாக்குபவர் (revivalist) அல்லர் என்றும் அவரது புத்தகம் தென்னிந்திய வரலாறு ஆதாரப்பூர்வமானது’ என்றும் கூறியுள்ளார்.
20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த இந்திய வரலாற்றாய்வாளர் மற்றும் திராவிடவியலாளர் எனப் போற்றப்பட்டவரும் தென்னிந்திய வரலாற்றாய்வாளர்களில் குறிப்பிடத் தக்கவருமான கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி 1975-ம் ஆண்டு தமது 83-வது வயதில் மறைந்தார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்