சர் சி.வி.ராமன் 10

சர் சி.வி.ராமன் 10
Updated on
1 min read

உலகம் போற்றும் இந்திய அறிவியல் மேதை சந்திரசேகர வெங்கட ராமன் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

 திருவானைக்காவலில் பிறந்தவர். இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றபோது வயது 18. ஐ.எஃப்.எஸ். தேர்வில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.

 லண்டனில் இருந்து வெளிவரும் அறிவியல் இதழில் 18 வயது இளைஞனின் ஆய்வுக் கட்டுரை வெளியானது சர்வதேச ஆராய்ச்சியாளர்களை வியக்கவைத்தது. அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் அறிவியல் துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் இல்லாததால், கொல்கத்தாவில் நிதித் துறை துணை தலைமைக் கணக்கராக பணியில் சேர்ந்தார்.

 மகேந்திரலால் சர்க்கார் நிறுவிய இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் பகுதி நேரமாக வேலை செய்தார். இசைக் கருவி களின் அதிர்வுகள், ஒளிச் சிதறல் பற்றி ஆய்வு செய்தார்.

 கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரி யராக 16 ஆண்டுகள் பணியாற்றினார். பெங்களூர் இந்திய அறிவியல் கழக இயக்குநராகவும் இயற்பியல் துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.

 இங்கிலாந்தில் இருந்து கப்பலில் நாடு திரும்பும்போது, கடல் ஏன் நீல நிறமாக உள்ளது என்ற சிந்தனை அவருக்கு ஏற்பட்டது. கல்கத்தா திரும்பியதும் இதுதொடர்பாக தீவிர ஆராய்ச்சியில் இறங்கினார்.

 ‘திரவப் பொருட்களில் உள்ள கூட்டணுக்களால் ஒளிச் சிதறல் ஏற்பட்டு வெவ்வேறு அலை நீளங்களை உடைய புதிய நிறக்கதிர்கள் தோன்றுகின்றன. ஒளி ஊடுருவும் தன்மைக்கு ஏற்ப உண்டாகும் வேறுபாடுகளால் கடல் நீல நிறமாகத் தோன்றுகிறது’ என்று கண்டறிந்தார். ‘ராமன் விளைவு’ என அறிவியல் உலகம் போற்றும் இந்த கண்டு பிடிப்புக்காக 1930-ல் நோபல் பரிசு பெற்றார்.

 வெறும் 200 ரூபாய் செலவில், தானே உருவாக்கிய கருவி யைப் பயன்படுத்தி இந்த சாதனையை நிகழ்த்தினார். இந்தி யாவில் மட்டுமே படித்த ஒருவர் நோபல் பரிசு பெற்றது அதுவே முதல் முறை.

 ராமன் விளைவை அடிப்படையாகக் கொண்டு அடுத்த 12 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 1500 ஆராய்ச்சிக் கட்டுரை கள் வெளியாயின. இந்த ஆய்வுகள் உலக தொழில் துறை வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தன.

 லண்டன் ராயல் சொசைட்டி உறுப்பினராக 1924-ல் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1929-ல் பிரிட்டிஷ் அரசு ‘நைட்ஹுட்’, ‘சர்’ பட்டங்கள் வழங்கிச் சிறப்பித்தது. 1954-ல் பாரத ரத்னா வழங்கப்பட்டது.

 பெங்களூரில் இவரது சொந்த முயற்சியில் ஆரம்பிக்கப்பட்ட ராமன் ஆய்வு மையத்தில் இறுதிக் காலம் வரை பணி யாற்றினார். பல விஞ்ஞானிகளை உருவாக்கிய இந்த மேதை 82-வது வயதில் காலமானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in