Published : 11 Jul 2017 18:37 pm

Updated : 11 Jul 2017 18:37 pm

 

Published : 11 Jul 2017 06:37 PM
Last Updated : 11 Jul 2017 06:37 PM

நெடுஞ்சாலையில் கூடாது என்பதற்காக குடியிருப்புப் பகுதிக்குள் நுழைவதா?- மதுக்கடைக்கு எதிராக பெண்கள் ஆவேசம்

'மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு' என சினிமா காட்சிகளுக்குக் கீழ் திரையில் நிழலாடுவதை கட்டாயமாக்கும் அரசு நிஜத்தில் 100 வீடுகளுக்கு நடுவே ஒரு மதுபானக் கடையைத் திறந்து வைப்பது அயோக்கியத்தனம்... என்று பள்ளிக்கரணையில் உள்ள மயிலை பாலாஜி நகர் பகுதி மக்கள் கோஷமிடுவது நியாயமான கோஷமாகவே நமக்குத் தெரிகிறது.

உடன் பணி புரியும் நண்பர், பள்ளிக்கரணையில் உள்ள மயிலை பாலாஜி நகரில் ஆசை ஆசையாய் ஒரு வீடு வாங்கி வசித்து வருகிறார். எப்போது வீடு பற்றிக் கேட்டாலும் மழைக் காலங்களில் தண்ணீர் தேங்குகிறது மற்றபடி அது என் சொந்த வீடு என்று சொர்க்கத்துக்கு நிகராகவே வீட்டைப் பற்றி சிலாகித்துப் பேசுவார்.


ஒரு நாள் வாடகைக்கு வீடு பார்க்கணும் என்றார்.. என்ன சார் தூரம் அதிகம் என்று யோசிக்கிறீர்களா? என்றேன். இல்லை, வீட்டுக்கு பக்கத்துலேயே டாஸ்மாக் திறந்துவிட்டார்கள். சாயங்கால நேரத்துல அபார்ட்மென்ட் வாசலிலேயே உட்கார்ந்து குடிக்கிறார்கள் என்றார்.

இப்படி வீடு மாறிக் கொண்டிருந்தால் அது தொடர் கதையாக நீளும். நெடுஞ்சாலைகளில் அப்புறப்படுத்தப்பட்ட கடைகளை சரிகட்ட ஆங்காங்கே இப்படித்தான் குடியிருப்புப் பகுதிகளுக்கும் டாஸ்மாக் புகுந்து கொண்டிருக்கிறது. பொறுமையாக இருங்கள் பார்ப்போம் என்றேன்.

இரண்டு நாட்கள் கழித்து எங்கள் ஏரியாவில் போராட்டம் நடைபெற்றது என்றுகூறி அந்த வீடியோவையும் காட்டினார். சமூக ஆர்வலர் செல்வி அப்போராட்டத்தை முன்னெடுத்து நடத்திக் கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள அபார்ட்மென்ட் வாசிகள், குடிசைவாசிகள் என அனைவரும் ஒற்றுமையாக களத்தில் இருந்தனர்.

போலீஸ் அதிகாரி, சில காவலர்கள், தாசில்தார் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர்.

"ஐயா என் புருஷன் 800 ரூபாய் சம்பாதிக்கிறார். ஆனா இங்க கடை திறந்த பிறவு ரூ.200 கூட கொடுக்க மாட்டேங்குறார். வீட்டுக்கு பக்கத்திலேயே தோதா கடை இருப்பதால் நிறைய குடிக்கிறார்" என்றார் ஒரு பெண்.

"வீட்டு வேலைக்குதான் சார் போறேன். பகலில் கூட இந்தப் பக்கம் வர முடியல. போதையில கேவலமா பேசுறாங்க" என்றார்.

மற்றொரு பெண்மணியோ, "குடியிருக்கிற பகுதில கோயில் இருந்தால் பரவாயில்லை.. ஆனா குடிப்பதற்கு கடை வச்சா என்ன செய்ய முடியும்? என்றார்.

"இங்கதான் அங்கிள் எங்க ஸ்கூல் இருக்கு. ஈவினிங் டியூசன் போய்ட்டு வர்றப்ப பயமா இருக்கு" என மெல்லிய குரலில் மாணவி ஒருவர் புலம்பினார்.

இன்னும் பல புலம்பல்கள்.. அவஸ்தைகளை விவரிக்கும் விளக்கங்கள் அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்தன. அத்தனை விவரங்களை கைகளை இறுக்கக் கட்டியபடி கேட்டுக் கொண்டிருந்தார் காவல் உயர் அதிகாரி.

தாசில்தாரிடம் பேசத் தொடங்கினார் சமூக நல ஆர்வலர் செல்வி, "சார், நாங்க உங்களிடம் ஏற்கெனவே புகார் மனு கொடுத்துவிட்டோம். எங்களுக்கு இந்தக் கடையை இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும். தினமும் அச்சத்துடன் சென்றுவர முடியாது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. வெகு அருகிலேயே பள்ளிக்கூடம் இருக்கிறது. இருந்தும், இங்கு டாஸ்மாக் திறக்க எப்படி அனுமதித்தீர்கள்? சீக்கிரம் நடவடிக்கை எடுங்கள்" என்றார்.

எல்லாவற்றையும் பொறுமையுடன் கேட்டுக்கொண்ட அதிகாரி, ''உங்கள் மனுவை ஆட்சியர் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளேன். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். எங்களைக் கேட்டுக்கொண்டு மதுபானக் கடைகளைத் திறப்பதில்லை. நிச்சயம் மேலிடத்தில் வலியுறுத்துகிறேன்" என பதிலளித்தார்.

மக்கள் அவ்வளவு சீக்கிரம் சமாதானம் அடையவில்லை, "பொறுமையா என்றால்..? எத்தினி நாளுக்கு சார். ஏற்கெனவே நிறைய பொறுத்துவிட்டோம். அதிகபட்சம் இன்னும் 10 நாள் தான் பொறுப்போம்" என ஓங்கி ஒலித்தார் ஒரு பெண்.

கூட்டத்தில் இருந்த இன்னொரு நபர் 10 நாட்களில் தீர்வு கிடைக்காவிட்டால் என்ன செய்வது என காவல் அதிகாரியிடம் கேட்க அவரோ உங்கள் போராட்டத்தை இன்னும் தீவிரப்படுத்துங்கள் என யோசனை கூறினார்.

அப்ப நாங்க.. அடுத்து கடையை அடித்து நொறுக்குவோம் என ஆவேசமாக ஒருவர் கூற அதுவரை அமைதியாக இருந்த போலீஸ் அதிகாரி "நோ... சட்டத்தை நீங்கள் உங்கள் கைகளில் எடுக்கக் கூடாது. சமூக பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும்" என்றார்.

இது குறித்து போராட்டக் களத்தில் உரிமைக் குரல் எழுப்பிய பெண்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த செல்வியிடம் பேசினோம். "எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் அந்தப் பகுதியில் வசிக்கின்றனர். அவர்கள் கூறியதன் அடிப்படையிலேயே போராட்டத்தில் கலந்து கொண்டேன். கலால்துறையிடம் கடையை அகற்றப் பரிந்துரைப்பதாக தாசில்தார் கூறியிருக்கிறார். 10 நாட்களில் நடவடிக்கை எடுக்காவிட்டால் அப்பகுதி மக்களோடு கலந்து பேசி அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுப்போம்" என்றார்.

குடியிருப்புப் பகுதியில் பள்ளிக்கு அருகில் டாஸ்மாக் கடை திறந்தவர்களுக்கும் சமூகப் பொறுப்பு இருந்திருக்க வேண்டும் அல்லவா?!

இந்த பத்து நாட்களுக்கு வேண்டுமானால் போலீஸ் பாதுகாப்பு தருகிறோம். கடையை அவ்வப்போது இரண்டு காவலர்கள் கண்காணிப்பார்கள் என்றார் அந்த போலீஸ் அதிகாரி. அந்த வீடியோ காட்சி முடியும் தருவாயில் கடையை மூடாவிட்டால் தீக்குளிப்பேன் என்று ஒரு பெண் கூறியது பயத்தை ஏற்படுத்தியது.

தமிழகத்தில்தான் அதிகளவில் போராட்டங்கள் நடைபெறுகின்றன என்கிறது ஒரு புள்ளிவிவரம். போராட்டங்கள் அதிகமாக நடப்பது ஜனநாயக அடையாளம்தான், ஆனால் நாம் நடத்தும் போராட்டம் எத்தகைய வாழ்வாதாரப் பிரச்சினைக்கானது என்பதைப் பொறுத்தே அது பெருமை பெறும். மதுக்கடைகளை அகற்றக் கோரி அதிகளவில் போராட்டங்கள் நடக்கிறது என்றால் அதை அரசாங்கம் கவனிக்க வேண்டாமா?

தெருவோரப் போராட்டம் என்று ஒதுக்கிவிடக் கூடாது. செய்வீர்களா? ஏதாவது செய்வீர்களா?


நெடுஞ்சாலைகுடியிருப்புபகுதிநுழைவதாபெண்கள்டாஸ்மாக்ஆவேசம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x