விஷ்ணு டே 10

விஷ்ணு டே 10
Updated on
2 min read

வங்காளக் கவிஞர், இலக்கியவாதி

வங்காளத்தின் தலைசிறந்த இலக்கியவாதியும் சாகித்ய அகாடமி மற்றும் ஞானபீட விருது வென்ற படைப்பாளியுமான விஷ்ணு டே (Bishnu Dey) பிறந்த தினம் இன்று (ஜூலை 18). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* மேற்கு வங்க மாநிலம், கல்கத்தாவில் பிறந்தார் (1909). பள்ளிப் படிப்புக்குப் பின்னர் கல்கத்தாவில் மித்ரா கல்வி நிறுவனத்திலும், கல்கத்தா சமஸ்கிருத கல்லூரி மற்றும் பங்கபாஷி கல்லூரியிலும் பயின்றார். பின்னர் வேறொரு கல்லூரியில் ஆங்கிலத்தில் பி.ஏ. பட்டமும், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலமும் பயின்றார். படித்து முடித்த பிறகு கல்கத்தாவில் உள்ள ரிப்பன் கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார்.

* சிறுவயது முதலே இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டிருந்ததால். நிறைய பண்டைய மற்றும் நவீன இலக்கியங்களை வாசித்தார். 1920 மற்றும் 1930-ம் ஆண்டுகளில் இளம் கவிஞர்கள் அங்கம் வகித்த ‘கலோல்’ என்ற அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்தார்.

* பிரசிடன்சி கல்லூரி, மவுலானா ஆசாத் கல்லூரிகளில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். எழுத்தாற்றல் கொண்டிருந்த இவர் முதலில் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். மிகவும் பிரபலமான ‘பரிசய்’ என்ற இலக்கிய இதழின் இணை ஆசிரியராகச் செயல்பட்டார்.

* பண்டைய ஐரோப்பிய கலை, இலக்கியம் மற்றும் கலாச்சாரம் குறித்தும் ஆர்வம் கொண்டிருந்தார். அவை குறித்து நிறைய வாசித்தார். இவரது ஐரோப்பிய கலை, இசை குறித்த குறிப்புகளும் நிறைய இடம்பெற்றன.

* இதனால் இவரது படைப்புகள் சாதாரண மக்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியாதவையாகக் கருதப்பட்டன. ஆனால், பல அறிஞர்கள் இவரை, தன் காலத்துக்கு அப்பாற்பட்ட படைப்பாளி என்றும் நவீன, பண்டைய மற்றும் மேற்கத்திய, கிழக்கத்திய இசை, கலை, இலக்கியம் குறித்த இவரது ஆழ்ந்த அறிவு மிகவும் அரிதானது எனவும் கருதினர்.

* இவரது இறுதி காலத்திலும் அதற்குப் பின்னரும்தான் இவரது படைப்புகளை பெருமளவிலான வாசகர்கள் கொண்டாடிப் போற்றினர். இன்று இவர் வங்காளத்தில் ஆக்கபூர்வமான, முக்கியமான, முன்னணிக் கவிஞர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார்.

* பல மொழிகளை அறிந்திருந்ததால் அவற்றின் முக்கியமான படைப்புகளை வங்க மொழியில் மொழிபெயர்த்தார். ‘நிருக்தா’ என்ற இலக்கிய இதழை நடத்தி வந்தார். கல்கத்தா குரூப் சென்டர், சோவியத் ஃபிரென்ட்ஷிப் அசோசியேஷன், பிரகதி லேகக் ஷில்பி சங்கா, இந்தியன் பீப்பிள்ஸ் த்யேட்டர் அசோசியேஷன் உள்ளிட்ட அமைப்புகளில் உறுப்பினராகவும் செயல்பட்டார்.

* ‘ஊர்வஷி ஓ அர்டெமிஸ்’, ‘அனிஷ்தா’, ‘ருசி ஓ பிரகதி’, ‘நாம் ரகேச்சி கோமல் காந்திர்’, ‘தி பெயின்டிங் ஆஃப் ரவீந்திரநாத் தாகூர்’, ‘இன்டியா அன்ட் மாடர்ன் ஆர்ட்’, ‘இன் தி சன் அன்ட் தி ரைன்’ உள்ளிட்ட இவரது படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.

* இவரது ‘ஸ்மிருதி சத்த பபிஷ்யத்’ கவிதைத் தொகுப்பு வங்கக் கவிதைக் களத்தில் புதிய பாணியை உருவாக்கியது. இது இவருக்கு 1965-ம் ஆண்டில் வங்கமொழி இலக்கியத்துக்கான கேந்திரிய சாகித்ய அகாடமி விருதையும் 1971-ம் ஆண்டு ஞானபீட விருதையும் பெற்றுத்தந்தது.

நேரு நினைவுப் பரிசு, சோவியத் லான்ட் விருது உள்ளிட்ட பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். தாகூருக்குப் பிந்தைய வங்காளக் கவிஞர்களின் பிதாமகராகவும் இந்திய இலக்கிய சிற்பிகளில் ஒருவராகவும் போற்றப்பட்ட விஷ்ணு டே 1982-ம் ஆண்டு தமது 73-வது வயதில் மறைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in