

நம் அரசியல் தலைவர்கள் தங்கள் பேச்சின்போது தவறுதலாக எதையாவது கூறிவிட்டால், ஃபேஸ்புக் ‘புகைப்பட கமென்ட்’ வரை அந்த வார்த்தைப் பிரயோகம் அலசிக் காயப்போடப்படுவதைப் பார்த்திருக்கிறோம். கிட்டத்தட்ட அதைப் போன்ற ஒரு சம்பவம்தான் இது. ஆனால், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
சிலி தலைநகர் சாண்டியாகோவில், இபெரோ - அமெரிக்க உச்சி மாநாடு நவம்பர் 2007-ல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஸ்பானிய மொழி, போர்த்துக்கீசிய மொழி பேசும் ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் மாநாடு அது.
மாநாட்டின் 2-ம் நாளின்போது (நவம்பர் 10) ஸ்பெயின் பிரதமர் ஜோஸ் லூயி ரோட்ரிக்ஸ் ஜாப்பட்டெரோ உரையாற்றிக்கொண்டிருந்தார். அப்போது, வெனிசுலா அதிபர் ஹியூகோ சாவேஸ் அவரை இடைமறித்து அவ்வப்போது பேசிக்கொண்டிருந்தார்.
ஸ்பெயினின் முன்னாள் பிரதமர் ஜோஸ் மரியா அஸ்னார் தனது ஆட்சியைக் கவிழ்க்கச் சதி செய்தார் என்று சாவேஸ் குற்றம்சாட்டினார்.
வெளிநாட்டு முதலீடுகளை எதிர்ப்பதால் தென் அமெரிக்க மக்கள் ஏழ்மையில் உழல்வதாக ஜாப்பட்டெரோ பேசியதும் சாவேஸுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருந்தது. ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைந்த ஸ்பெயின் அரசர் முதலாம் ஜுவான் கார்லோஸ், “கொஞ்சம் வாயை மூடுகிறாயா?” என்று சாவேஸைப் பார்த்துக் கேட்டார்.
அவரது இந்தப் பேச்சு ஸ்பெயினில் உடனடியாகப் பிரபலமானது. இணையத்தில் மட்டும் அல்லாமல் டி-ஷர்ட் வாசகம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ரிங்டோன் என்று பல விதங்களில் இந்த வாசகம் பயன்படுத்தப்பட்டது. ஸ்பெயின் மன்னரின் வார்த்தைகளுக்கு தென் அமெரிக்க நாடுகளிடையே ஆதரவும் எதிர்ப்பும் எழுந்தன. ஒருகாலத்தில் ஸ்பெயினின் ஆதிக்கத்தில் வெனிசுலா இருந்தது குறிப்பிடத் தக்கது.