

நோபல் பெற்ற அமெரிக்க உயிரி வேதியியலாளர்
அமெரிக்காவைச் சேர்ந்த உயிரி வேதியியலாளரும் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான ஜான் ஹாவர்ட் நார்த்ரோப் (John Howard Northrop) பிறந்த தினம் இன்று (ஜூலை 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* நியுயார்க் நகரின் யாங்கர்ஸ் என்ற பகுதி யில் பிறந்தார் (1891). கொலம்பியா பல் கலைக்கழகத்தில் விலங்கியல் மற்றும் வேதியியல் பயின்று 1912-ல் பட்டம் பெற்றார்.
* 1913-ல் முதுகலைப் பட்டமும், 1915-ல் கரிம பாஸ்போரி ஸ்டார்ச் அமிலம் குறித்து ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து வேதியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். முதல் உலகப் போரின்போது அமெரிக்க ராணுவத்தில், ரசாயனப் போர் சேவைப் பிரிவில் கேப்டனாகப் பணியாற்றினார். பின்னர், ராக்ஃபெல்லர் இன்ஸ்டிடியூட்டில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார்.
* கார்போஹைட்ரேட்கள், டிரோசோஃபிலியா (Drosophilia) குறித்து ஆராய்ந்தார். சுற்றுச்சூழல் காரணிகள் மற்றும் பரம்பரைக் காரணிகளுக்கு இடையேயான தொடர்பையும் பரிசோதனை செய்தார். அசிட்டோனின் நொதித்தல் செயல்முறையையும் கண்டறிந்தார்.
* படிப்படியாக உயர்ந்து 1924-ல் ராக்ஃபெல்லர் இன்ஸ்டிடியூட்டின் உறுப்பினரானார். டிப்சின், சிமோட்டிரைப்சின், கார்பாக்ஸிபெப்டிடேஸ் மற்றும் பெப்சினோஜனைப் படிகமாக்குவதற்குப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் புரோட்டீனிலிருந்து என்சைம் செயல்பாட்டைப் பிரித்தெடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டார்.
* 1929-ம் ஆண்டில் இரைப்பைச் சாற்றிலிருந்து (gastric juice) தூய படிக வடிவில் பெப்சினைத் தனியாகப் பிரித்தெடுத்தார், புரோட்டீன்கள்தான் என்சைம்கள் என்ற முடிவுக்கு அப்போதுதான் இவரால் வரமுடிந்தது. இவரது ஆராய்ச்சிகளுக்குப் பின்னரே என்சைம்களின் புரோட்டீன் இயல்பு நிரூபணமானது.
* மேலும் புரோட்டீன்கள், வைரஸ்கள் மற்றும் ஆன்டிபயாடிக்குகள் குறித்தும் ஆராய்ந்து, பாக்டீரியோபேஜ் செயல்பாடு காணப்பட்ட ஒரு நியூக்ளியோ புரோட்டீனைத் தனித்துப் பிரிப்பதில் வெற்றி கண்டார். இந்த நுண்ணுயிரியின் செயல்பாட்டுக்கு நியூக்ளிக் அமிலம்தான் காரணம் என்பதையும் கண்டறிந்து கூறினார். வைரஸ்களின் தோற்றம் மற்றும் அவற்றின் மாறும் தன்மை குறித்தும் ஆராய்ந்தார்.
* புரோட்டீன்களின் இயற்பியல் சார்ந்த வேதியியல் பண்புகள், பாக்டீரியா பரவல், என்சைம்களின் எதிர்வினை செயல்பாடுகள் மற்றும் என்சைம்களின் வேதியியல் பண்புகள் உள்ளிட்ட தனது ஆராய்ச்சிகளைக் குறித்து பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியுள்ளார். ‘ஜர்னல் ஆஃப் ஃபிசியாலஜி’ இதழுக்குப் பல ஆண்டுகள் ஆசிரியராகச் செயல்பட்டார்.
* கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியல் துறை மற்றும் மருத்துவ இயற்பியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். என்சைம்கள், புரோட்டீன்கள் மற்றும் வைரஸ்களை ஆராய்ந்து, அவற்றை வெற்றிகரமாகத் தூய்மைப்படுத்தி படிகமாக்கியதற்காக (purifying and crystallizing) ஜேம்ஸ் பாட்செல்லர் சம்னர், வெண்டெல் மெரிடித் ஸ்டான்லி ஆகியோருடன் இணைந்து 1946-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார்.
* இது குறிப்பிட்ட என்சைம்களின் வேதியியல் தன்மையைத் தீர்மானிக்க வழிகோலியது. மேலும் ஸ்டீவென்ஸ் பரிசு, சாண்ட்லர் பதக்கம், அலெக்ஸ் ஹாமில்டன் பதக்கம் உள்ளிட்ட பரிசுகளையும் பதக்கங்களையும் வென்றார். ஹாவர்ட், கொலம்பியா, பிரின்ஸ்டன் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின.
* அறிவியல் ஆராய்ச்சிகள் தவிர, படகு சவாரி, கோல்ஃப் மற்றும் டென்னிஸ் ஆட்டத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார். உயிரி வேதியியல் களத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய ஜான் ஹாவர்ட் நார்த்ரோப் 1987-ம் ஆண்டு 96-வது வயதில் மறைந்தார்.