

வட மாநிலங்களில் 1996-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்ட சில தொகுதிகளுக்குச் சென்றேன். அதில் ஒன்று சிம்லா தொகுதி.
முழுக்க முழுக்க மலைப் பகுதி. தெருக்கள் வித்தியாசமாக இருக்கும். முதல் தெருவுக்கும் அடுத்த தெருவுக்கும் 100 அடி உயரம் வித்தியாசம் இருக்கும். பொருட்களைச் சுமந்து செல்வதும் நடந்து செல்வதும் சிரமம். சுமை கூலிக்காரர்கள் அதிகம். அவர்களும் தலைச் சுமையாகக் கொண்டுசெல்ல மாட்டார்கள். முதுகில் கட்டிக்கொண்டு கம்பு ஊன்றித்தான் செல்வார்கள்.
சுமை கூலித் தொழிலாளர்கள் சங்கத்தை மார்க்சிஸ்ட் கட்சி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. சிம்லா நகராட்சியிலும் கட்சியின் செல்வாக்கு அதிகம். அதனால், ஒரு தெருவிலிருந்து அடுத்த தெருவுக்குப் போக ‘லிப்ட்’ வசதி வைத்திருந்தார்கள். அதனைப் பொதுமக்களும் பயன்படுத்தினர்.
மதிய நேரத்தில் நான் ஊரைச் சுற்றி வந்தேன். தூரத்தில் ஒரு கோயில் தெரிந்தது. அங்கிருந்தது ‘ராம் துன்’ பாடிக்கொண்டு ஒரு பஜனை கோஷ்டி வந்துகொண்டிருந்தது. அவர்கள் அருகில் வந்தார்கள்.
பாடிக்கொண்டு நடுநாயகமாக வந்தவர் கையில் கொடி. அரிவாள் - சுத்தியல் - நட்சத்திரம் போட்ட செங்கொடி அது. அவர் சட்டையில் மார்க்சிஸ்ட் கட்சியின் சின்னம் ‘பேட்ஜ்’ ஆக இருந்தது. ஆர்மோனியம், டோல் வாசிப்பவர், கூட வந்தவர்கள் என்று எல்லோரும் சின்னத்தை ‘பேட்ஜ்’ ஆக அணிந்திருந்தார்கள். என்கூட எல்.ஐ.சி. தோழர் பட் என்பவரும் வந்திருந்தார்.
கேரள மாநிலத்தில் 56-ம் ஆண்டு கட்சி மாநாடு நடந்தது. அது டிசம்பர் மாதம். சபரிமலை பக்தர்கள் கூட்டம் அதிகம். ஒலவக்கோடு ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏ.கே.கோபாலன் ரயிலில் வருகிறார்.. அவரை வரவேற்கத் தொண்டர்கள் காத்திருந்தனர். ரயில் நிலையத்துக்குள் மெதுவாக வந்தது. திடீரென்று
‘‘ஜிந்தாபாத்.. ஜிந்தாபாத்..
ஏகேஜி ஜிந்தாபாத்!
ஐயப்பா.. ஐயப்பா..
சாமி சரணம் ஐயப்பா!
ஜிந்தாபாத்.. ஜிந்தாபாத்..
ஏகேஜி ஜிந்தாபாத்!’’
என்று இருமுடி கட்டிய ஐயப்பன் பக்தர்கள் கோஷம் போட்டனர்.
இதை நான் தோழர் ‘பட்’டிடம் கூறினேன். வயதில் மூத்தவரான ‘பட்’ சொன்னார்:
‘நாம் அறிவுஜீவிகள்.. நாம் மார்க்சியத்தைப் புரிந்துகொண்டிருக்கிறோம். அவர்கள் அதை உணர்ந்துகொண்டிருக்கிறர்கள். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் அதுதான் தோழர்.’