Last Updated : 21 Jul, 2017 11:20 AM

 

Published : 21 Jul 2017 11:20 AM
Last Updated : 21 Jul 2017 11:20 AM

மிஸ்டர் உல்டா

குடியரசு தலைவர் தேர்தலுக்குப்பிறகு தமிழகத்தில் ஆட்சியை கலைக்க பா.ஜ.க. முயற்சி செய்யாது:- வெங்கைய்யா நாயுடு திட்டவட்டம்

 

வெங்கைய்ய நாயுடுவை அசோக் நகரில் அவர் சொந்தக்காரார் வீட்டில் சந்தித்த உல்டா “ஆட்சி கலைப்பு இல்லை. திட்டவட்டம் அப்படினு சொல்றீங்களே... அது நெசமா இல்ல சும்மணங்காட்டியா?” என்று உல்டா கேட்க...

''டி.வி.யில வாத்தியார் படம் ஓடிக்கிட்டிருக்கு... அதை ஒரு நிமிஷம் பாரு...”” என்றார் நாயுடு. பார்த்தால், “ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில், ‘’நமக்கு வாய்த்த அடிமைகள் திறமைசாலிகள்.. என்ன வாய்தான் கொஞ்சம் நீளம்’’ என்று டயலாக் ஓடிக் கொண்டிருந்தது. டி.வி.யை அணைத்த நாயுடுகாரு, ‘’சொன்ன பேச்சைக் கேட்டு நல்ல பிள்ளைகளா இருக்கிறவங்களை, ஸ்கூல் வாத்தியார்கூட கிள்ள மாட்டாரே... எங்க பெரிய வாத்தியார் மோடி ஏன் ஆட்சியெல்லாம் கலைக்கப் போறாரு” என்று சிரித்தார்.

 

''ஆட்சி கலைப்பு இல்லன்னா செயல் தலைவர்தான் பீல் பண்ணுவார், பாவம்” என்று கவலையாக உல்டா சொல்ல... “அப்படியே தேர்தல் வந்தாலும், உங்க ஊரு செயல் தலைவரை ஆட்சிக்கு வர விடுவோமா?’ என்று மறுபடி சிரித்த அமைச்சர், “பீடி முதலாளி வீட்டில்கூட நாங்க ரெய்டு விட்றோம். ஆனா அறிவாலயம் பக்கம் அதிகாரிங்க போனாங்களா? வீணா டச் பண்ணி அவங்களை பெரிய ஆள் ஆக்கிடக் கூடாதுனு ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கோம், தெரியுமா?”” என்று மூக்கைச் சொரிந்தார்.

 

 “உண்மையில் உங்க பிளான்தான் என்ன?” என்று உல்டா கேட்க... அமைச்சர் உடனே, “ரெண்டு சபையிலும் சட்ட திருத்தம், மசோதானு வரிசையா வந்துகிட்டே இருக்கும். இதுக்கெல்லாம் கைதூக்க ஆள் தட்டுப்பாடு. இவங்கள வெச்சுதான் அதை எல்லாம் ஒப்பேத்தணும்” என்றார். “அப்புறம் எதுக்கு அவங்க மூணு அணியாவே இருக்காங்க? ஒண்ணா சேர்த்திட வேண்டியதுதானே... கூடவே ரெட்டை இலை சின்னத்தையும் வாங்கித் தந்துடலாம் இல்ல..?” என்று விவரமாக கேட்டதற்கு...

 

“ரொம்ப தப்பு உல்டா. அவங்க எப்பவும் மூணு கோஷ்டியா இருந்தாதான் எங்களுக்கு சௌகரியம். ‘நாளைக்கு பண்ணிடலாம். அடுத்த வாரம் முடிச்சிடலாம்’ அப்படினு இழுத்துகிட்டே இருக்கணும். ஆனா பண்ணிடக் கூடாது. கடன் பட்டார் நெஞ்சம் போல அவங்களை கலங்க வச்சிகிட்டே இருந்தாத்தான் நாங்க நிம்மதியா வண்டியை ஓட்ட முடியும்” என்று சொல்லிக் கொண்டு இருக்கும்போதே... அமைச்சரின் செல்பேசி ஒலித்தது. ”அடடே... தினகரன் தம்பிதான் பேசுது” என்றபடி ஆன் செய்தார்.

 

“இதுதானே மேட்டர்? நான் பாத்துக்குறேன். அதுக்கு நீங்கதான் போகணுமா, என்ன...? நான் வேற ஆள ஏற்பாடு பண்ணி அனுப்பிடறேன். நீங்க கவலைப் படாதீங்க“ என்று செல்போனை வைத்தார். “என்ன சொல்றாரு தினகரன்?”” என்று ஆவல் தாங்காமல் உல்டா கேட்க...

 

‘’அதுவா... திகார் ஜெயில் வார்டன் போன் பண்ணாராம். ஒரு ரூம் காலியா இருக்கு. ஜாமீன் ரத்து பண்ண சொல்லவா?’னு கேட்கிறாராம். தினகரன் தம்பி பாவம். அதுக்கு தமிழ்நாட்டுல முக்கியமான ரெண்டு மூணு வேலை இருக்காம். அவர் இங்கே இருந்தாதான் அவரோட ஆதரவு அணி எம்.எல்.ஏ எல்லாம் எங்க ஜனாதிபதி வேட்பாளருக்கு ஒழுங்கா ஓட்டு போடுவாங்களாம். நான் மறுபடி திகார் போயிட்டா ரிஸ்க் அப்படினு சொல்றாரு. அதான் பயப்பட வேண்டாம்... காலி ரூமுக்கு நான் வேற ஆளை அனுப்பிக்கறேன்னு சொன்னேன்” என்று உரக்க சிரித்தார் நாயுடு.

 

‘’நிஜமாவே ஜெயில் வார்டந்தான் பேசுனாரா... இல்லை பொன்னார், இல.கணேசன்னு யாராச்சும் மிமிக்ரி பண்ணிட்டாங்களா?” என்று உல்டா துருவ.... ’’என்னப்பா நீ... புரட்சி தலைவர், புரட்சித் தலைவி வளர்த்த கட்சி... அதை இவ்ளோ சீப்பா டபாய்ப்போமா?”” என்று தட்டிக் கொடுத்து அனுப்பினார் நாயுடுகாரு.

 

அரசியலுக்கு வந்தால் ரஜினிக்கு ஆபத்து - சுப்ரமணியசாமி

 சு.சாமியை விமான நிலையத்தில் உல்டா வழிமறித்தபோது, கூடவே ஒரு நண்பரும் கூடப் போயிருந்தார். ‘’ஏய் சாமி... நீ ரொம்ப நாளா தமில்நாடுப் பக்கம் வர்லே... அவனுக்கு வர பயமானு நிறைய பேர் கேக்கறாங்கோ” என்று பெங்காலி போட்டு உருட்ட... கண் சிவந்த சுவாமி, ‘’என்ன உல்டா... உன் ஃப்ரெண்டுக்கு மரியாதையே தெரியாதா?” என்று சீறினார். ‘’ஐயோ.. இவரும் உங்களை மாதிரி அரைவாசி தமிழர். ரொம்ப நாளா பஞ்சாப் பக்கம் இருந்துட்டு இப்பதான் தமிழ்நாடு வந்திருக்காரு” என்று சமாதானப்படுத்தினார்.

 

 “சரி, சரி... சசிகலாவை நான் ஆதரிக்கிறது பத்தி இங்கே என்ன நினைக்கிறாங்க?” என்றார் சாமி. ‘’சந்திரலேகா மேடம் முகத்துல சுர்லானு ஒரு ஆள் ஆசிட் அடிச்சதை இன்னும்கூட ஜனங்க ஞாபகம் வச்சிருக்காங்க. ஆனா, சசிகலாவை கடுமையா நீங்க எதுர்த்துக்கிட்டு இருந்ததுதான் உங்களுக்கே மறந்து போச்சு!” என்று உல்ட சொல்லிக்கொண்டிருக்கும்போதே... அங்கே வந்து நின்றார் சந்திரலேகா.

 

”வாங்க மேடம்... ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆபத்துனு சுவாமி சொல்றாரே... எந்த மாதிரி ஆபத்துனு கேட்டீங்களா?” என வாயைக் கிளறினார் உல்டா. கலகலவென சிரித்த லேகா, “அவர் அரசியலுக்கு வந்தால் நிறைய பேருக்கு ஆபத்து... அரசியல் பொழைப்பு போயிடும் இல்லையா? அந்த ஆபத்தைதான் சொல்றாரு... கரெக்டா சாமி?” என்றதற்கு, ‘ஆமா சாமி’யாக தலையாட்டினார் சுவாமி.

 

”ஆனா மிஸ்டர் சாமி.. நீங்க எது சொன்னாலும் உங்க கட்சித் தலைமை, அது அவர் சொந்தக் கருத்து அப்படின்னு சொல்லிடறாங்களே” என்று உல்டா மடக்க... “ஆமாம்... அவங்க சொல்றது சரிதான். பி.ஜே.பி.யில் சொந்தக் கருத்து சொல்றதுக்குன்னு ஒரு பிரிவு இருக்கு. அதோட ஒன்லி ஒன் பொறுப்பாளார் நான்தான். அதனால இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லே” என்று சாமி சிரித்தபடியே சொல்ல “ஆனா உங்க கமன்ட்ஸ் ஒண்ணும் ரஜினியை பயமுறுத்துற லெவல்ல இல்லியே... அந்த விஷயத்துல சீமான் ரேஞ்சைக்கூட உங்களால தொட முடியாது போலிருக்கே...” என்று சீண்டினார் உல்டா.

 

முகம் சுருங்கிய சாமி, ‘’அப்ப நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணு.... ரஜினி பத்தி சென்ஷேனல் கருத்து சொல்ல எனக்கு ஹிந்து வாசகார்களை டிப்ஸ் தரச் சொல்லு. ஒவ்வொரு டிப்ஸ்க்கும் நான் நூறு டாலர் தார்றேன்” என்றார். மயக்கம் வராத குறையாக உல்டா, ‘’அவ்ளோ டாலர் நிச்சயம் தருவீங்களா?” என்று சந்தேகமாகக் கேட்க... பாக்கெட்டில் கைவிட்ட சாமி, கை நிறைய முருகர் டாலர் எடுத்துக் காட்டி, ‘’திருச்செந்தூர் போனப்பா மூட்டை நிறைய வாங்கிட்டு வந்தேன். உனக்கும் ஒண்ணு எடுத்துக்கோ” என்றாரே பார்க்கலாம்.

 

காவல்துறையினார் தடியடிக்கு விஜயகாந்த் கண்டனம்

கோயம்பேடு தே.மு.தி.க. கட்சி அலுவலகம் போய் கேப்டனை பார்க்க போனபோது “வா உல்டா” என்று திருமதி. கேப்டன் வரவேற்றார் “கேப்டன் இல்லையா” என்றதும், “அவர் ரெஸ்ட்ல இருக்கிறார். சீக்கிரமே தேர்தல் வரும். கூட்டணி பத்தி பேசணும்... கிங் மேக்கர் எல்லாம் வருவாங்க... அதான் கிங் கொஞ்சம் ஓய்வு எடுக்கறார்” என்று திருமதி. கேப்டன் சொல்ல... “எப்படியோ... கேப்டன் தீவிர அரசியலில்தான் இருக்கிறார். காவல்துறை தடியடி முதல்கொண்டு தினம் ஏதாவது அறிக்கைகூட அவர் பேர்ல வருதே” என்று உல்டா சொல்ல... “என்ன நக்கலா? பொதுக்கூட்டம், நிருபர் சந்திப்பு, தொண்டர் சந்திப்பு, இஃதார் விருந்து இதெல்லாம்கூட தீவிர அரசியல்தான் தெரியுமா” என்று கண்ணை உருட்டினார் திருமதி. கேப்டன்.

 

“அப்போ... கிங்கா கிங்மேக்கரா என்றெல்லாம் இந்த முறை கருத்து கணிப்பு கிடையாது, அப்படித்தானே?” என்று உல்டா கேட்டதும்... “ஏன் கிடையாது? கருத்து கணிப்பு கட்டாயம் உண்டு. கேள்வி மட்டும் மாறும்” திருமதி பிரேமாஜி சொல்ல... உல்டா குழம்பிப் பார்த்தார். மந்தகாசமாகச் சிரித்த திருமதி கேப்டன், ‘’சிம்பிள்... உங்களுக்கு கிங் வேணுமா... குயின் வேணுமானு கேட்கப் போறோம். அதாவது... இந்த முறை தே.மு.தி.க. முதல்வர் வேட்பாளார் நான்தான்” என்று சொல்ல ... பயந்துபோன உல்டா, ‘’இதெல்லாம் ரெஸ்ட்ல இருக்கிற கேப்டனுக்குத் தெரியுமா?” என்றார்.

 

‘’அதெல்லாம் உனக்கு எதுக்கு... இன்னும் சொல்றேன் கேட்டுக்க... அவர் இந்த முறை தேர்தலில் போட்டியிட போறது இல்லை. கட்சிக்கு அவர். ஆட்சிக்கு நான். அதுமட்டுமல்ல... தே.மு.தி.க. வேட்பாளார் எல்லாமே லேடிஸ்தான். முதல்வர், அமைச்சர்கள், பேரவைத் தலைவர், துணைத் தலைவர், கொறடா எல்லாமே பெண்கள்தான்” என்று குஷியாக பிரேமலதா மேடம் சொல்ல... “சரி உங்க கட்சியோட ஆம்பிளை உறுப்பினார்கள் எல்லாம் சம்மதிச்சிட்டாங்களா” என்று சந்தேகத்தை கிளப்ப... “அவங்க எல்லாரையுமே நாங்க ரெஸ்ட்டுக்கு அனுப்பிட்டுதான் இந்த முடிவை எடுத்தோம்” என்று பதில் வந்தது.

 

“அப்போ கூட்டணி விஷயம் எல்லாம்” என்று உல்டா அடுத்த விஷயத்துக்கு போக... “கூட்டணிக்காக தே.மு.தி.க. வாசல்படி திறந்தே இருக்கும்” என்று திருமதி சொல்ல... உல்டா குழம்பிப்போய் “என்ன மேடம்... எல்லோரும் கதவுகள் திறந்து இருக்கும்ன்னு சொல்வாங்க. நீங்க வாசற்படின்னு புதுசா சொல்றீங்க” என்று கேட்க... “தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி ஆச்சுன்னா, உங்களை மாதிரி பத்திரிகைக்கார்ங்க, ‘கூட்டணி கதவு மூடப்பட்டது’னு தலைப்புச் செய்தி போடுவீங்க இந்த பிரச்சனையே வேண்டாம்னுதான், எங்க கட்சி ஆபிஸ் வாசற் கதவை கழட்டி எடுத்து விலைக்கு போட்டு அந்த பணத்தை கட்சி நிதியில் சோர்த்துட்டோம். வாசற் கதவே இல்லாத ஒரே கட்சி எங்க கட்சிதான். யார் வேணா பேச்சு வார்த்தைக்கு வர்லாம்” என்று பெருமையாக சொன்னார் பிரேமலதா மேடம்.

 

 “அப்படின்னா உடனே நான் கிளம்பறேன். இந்த நியூஸை நான் வைகோ, திருமாவுக்கெல்லாம் சொல்லணும்” என்று எழுந்த உல்டாவை பதறிப் போய் தடுத்தார் பிரேமலதா.

 

”தாராளமா போய்ச் சொல்லு. கூடவே இன்னொரு விஷயமும் சொல்லு. இந்த முறை கூட்டணியோட ஆதரவு மட்டும் இருந்தால் போதும். அவங்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யறோம்னு சங்கடப்படுத்த விரும்பலை. அவங்க யாரும் போட்டியிட்டு காசு செலவு பண்ண வேணாம். ஏன்... பிரசார கூட்டத்துக்குக் கூட வர வேணாம். தினம் அறிக்கை மட்டும் விட்டுகிட்டு வீட்டுலயே இருந்தா போதும். தேர்தல் முடிஞ்சதும் நாங்களே அவங்களை வெற்றிவிழாவுக்குக் கூப்பிடுவோம்” என்றார்.

 

‘’நெல்லு... உமி..! உமி.. நெல்லு!” என்று மந்திரம் மாதிரி சொல்லிக் கொண்டே நடந்தார் உல்டா..

 

ஜாசன்

மூத்த பத்திரிகையாளார்

தொடர்புக்கு: jasonja993@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x