Last Updated : 16 Jul, 2017 11:11 AM

 

Published : 16 Jul 2017 11:11 AM
Last Updated : 16 Jul 2017 11:11 AM

இர்வின் ஆலன் ரோஸ் 10

அமெரிக்காவைச் சேர்ந்த உயிரியலாளரும் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான இர்வின் ஆலன் ரோஸ் (Irwin Allan Rose) பிறந்த தினம் இன்று (ஜூலை 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* புரூக்ளின் நகரில் யூதக் குடும்பத்தில் பிறந்தார் (1926). சிறிது காலம் உள்ளூரில் உள்ள ஒரு ஹீப்ரு பள்ளி யில் பயின்றார். 13 வயதில், இவரது தம்பியின் உடல் நலனைக் கருதி குடும் பம் வாஷிங்டனில் உள்ள ஸ்போகான் என்ற இடத்துக்கு குடியேறியது.

* அங்கிருந்த அரசுப் பள்ளியில் படிப்பு தொடர்ந்தது. பின்னர் கோடை விடுமுறைகளில் உள்ளூர் மருத்துவ மனையில் பணியாற்றி வந்த இவர், அப்போதே மருத்துவப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என முடிவு செய்தார். பின்னர் வாஷிங்டன் மாநிலக் கல்லூரியில் பயின்றார்.

* இதனிடையே இரண்டாம் உலகப்போரில் கப்பற்படையில் சேர்ந்து ரேடியோ தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றினார். இதனால் இவரது படிப்பு சிறிது காலம் தடைபட்டது. 1948-ல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.

* அசாதாரண புத்திக்கூர்மை கொண்ட இவர், சிகாகோ பல்கலைக் கழகத்தில் தனது ஆராய்ச்சிகளைத் தொடங்கினார். சி-14 ரேடியோ ஐசோடோப்பைக் பயன்படுத்தி ரைபோ நியுக்ளியோடைட் என்சைம்களிலிருந்து உற்பத்தியாகும் டெக்சிசைடிடைன் உருவாகும் முறையைக் கண்டறிந்து கூறினார்.

* அங்கேயே முதுகலைப் பட்டமும் பெற்றார். 1952-ல் உயிரிவேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார். ஃபாக்ஸ் சேஸ் கான்சர் சென்டரில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. என்சைம் ஸ்டீரோகெமிஸ்ட்ரியின் தோற்றம் மற்றும் அதன் வினையூக்கி இடையேயான தொடர்பு, ஒவ்வொரு ரசாயன மாற்றங்களுக்குப் பின்னரும் என்சைம்கள் தங்களை எவ்வாறு மீட்டமைத்துக் கொள்கின்றன என்பன குறித்து அங்கு ஆராய்ந்தார்.

* ஆவ்ரம் ஹெர்ஷ்கோ என்ற தொழில்நுட்ப நிபுணர் மற்றும் அவரது மாணவர் ஆரோன் ஜே.சியானாவோவர் ஆகியோருடன் இணைந்து செல்களின் புரதம் அகற்றும் செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொண்டார். செல்கள் எவ்வாறு பழைய மற்றும் சேதமடைந்த புரோட்டீன்களை அடையாளம் கண்டு அவற்றை துகள்களாக மாற்றி புதிய புரோட்டீன்களாக மறுசுழற்சி செய்கின்றன என்பதைக் கண்டறிந்தார்.

* அடையாளம் காணப்பட்ட சேதமடைந்த புரோட்டீன்கள் புரோட்டியோசோம்ஸ் என்ற சேம்பருக்குக் கொண்டு செல்லப்பட்டு, துண்டாக்கப்பட்டு மறுசுழற்சி முறையில் புதிய புரோட்டீன்களாக மாற்றப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார். இதற்காக ஆரோன் ஜே.சியானாவோவர், ஆவ்ரம் ஹெர்ஷ்கோ ஆகியோருடன் இணைந்து 2004-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

* இந்தக் கண்டுபிடிப்பு சாதாரண உடலியங்கலியல் செல் சிதைவு குறித்த ஆராய்ச்சிகள் மேம்படுவதற்கு மட்டுமல்லாமல் புற்றுநோய் செல்களைத் தாக்கும் மருந்து மற்றும் சிகிச்சை முறையைக் கண்டறியவும் வழிகோலியது. இதன் நேரடி விளைவாக வெல்கேட் மைலோமா என்ற ரத்தப் புற்றுநோய்க்கான மருந்து கண்டறியப்பட்டது.

* யேல் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். 30 ஆண்டுகளுக்கு மேலாக ஃபிலடல்ஃபியாவில் உள்ள ஃபாக்ஸ் சேஸ் கான்சர் சென்டரில் மூத்த உறுப்பினராகச் செயல்பட்டார். பதவி ஓய்வுக்குப் பிறகு, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராக இணைந்தார்.

* அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இறுதிவரை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு உயிரிவேதியியல் களத்தில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கிய இர்வின் ஆலன் ரோஸ், 2015-ம் ஆண்டு தனது 89-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x