

இந்திய சுதந்திரத்துக்காக ஆயுதமேந்திப் போராடிய வீராங்கனை கல்பனா தத்தா (Kalpana Datta) பிறந்த தினம் இன்று (ஜூலை 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
# வங்காள மாகாணத்தில் (இன் றைய வங்கதேசம்) சிட்டகாங் மாவட்டத்தில் புர் என்ற கிராமத்தில் பிறந்தார் (1913). சொந்த ஊரில் மெட்ரிகுலேஷன் தேறினார். கல்கத்தாவின் பெத்தூன் கல்லூரியில் அறிவியலில் பட்டப் படிப்பில் சேர்ந்தார். சிறுவயதிலேயே விடுதலை வேட்கை கொண்டிருந்தார்.
# கல்லூரியில் பிரபல சுதந்திரப் போராட்ட வீராங்கனைகளாக மிளிர்ந்த வீணா தாஸ், ப்ரீதிலதா வதேதர் ஆகியோர் இடம்பெற்றிருந்த ‘சாத்ரி சங்கா’ (மாணவியர் சங்கம்) என்ற புரட்சிகர அமைப்பில் இணைந்தார்.
# படிப்பைப் பாதியிலேயே நிறுத்திய இவர், சூரிய சேன் தலைமையில் இயங்கி வந்த ஆயுதமேந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் உறுப்பினராகச் சேர்ந்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிகவும் பிரமிக்கவைத்த, துணிச்சலான நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்பட்ட, 1930 - சிட்டகாங் ஆயுதக் கொள்ளையில் அந்த இயக்கம் ஈடுபட்டபோது இவரும் அதில் முக்கியப் பங்கேற்றார்.
# ஆயுதங்களைப் பயன்படுத்தவும், வெடிமருந்துகள் தயாரிக்கவும் கற்றுக் கொண்டார். கல்கத்தாவிலிருந்து வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை மற்ற இடங்களுக்குக் கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்றார். சிறப்புத் தீர்ப்பாயத்தில் தண்டனை பெற்ற புரட்சிகர தலைவர்களை விடுவிப்பதில் ஈடுபட்டார்.
# அதற்காக நீதிமன்றத்தையும் அவர்கள் சிறை வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையையும் தகர்ப்பதற்காக கன்-காட்டன் எனப்படும் நைட்ரோசெல்லுலோஸ் வெடிமருந்தைத் தயாரித்தார். அடுத்த ஆண்டு, சிட்டகாங்கில் இருந்த ஐரோப்பிய கிளப் ஒன்றைத் தாக்கும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர், அந்தப் பகுதியை நோட்டம் பார்த்தபோது பிடிபட்டார்.
# ஜாமீனில் வெளிவந்த பிறகு, மற்றவர்களுடன் சேர்ந்து தலைமறைவானார். இரண்டாண்டுகள் தன் குழுவினருடன் சேர்ந்து தலைமறைவாக இருந்துகொண்டே பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்தார். யாரோ ஒருவன் காட்டிக் கொடுத்ததால், சுற்றி வளைத்த போலீஸாரிடம் சூரிய சேன் மாட்டிக்கொள்ள, இவர் சாமர்த்தியமாகத் தப்பிவிட்டார்.
# 1933-ல் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றார். இவரை விடுதலை செய்யக்கோரி நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டங்களாலும் காந்திஜி, ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் தலையீட்டாலும் 1939-ல் விடுவிக்கப்பட்டார். கல்கத்தா பல்கலைக்கழகத்தில் மீண்டும் படிப்பைத் தொடர்ந்து 1940-ல் பட்டம் பெற்றார். சிறையில் இருந்தபோது கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்ட இவர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.
# கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த பூரண் சந்த் ஜோஷியை மணந்தார். 1943 வங்காளப் பஞ்சத்தின்போது நிவாரண சேவைகளில் ஈடுபட்டார். மக்களுக்கு உணவு வழங்குதல், மருந்துப் பொருட்கள் அவர்களுக்கு சேர்வதை உறுதிசெய்யும் பொறுப்புகளை ஏற்றார்.
# எளிமையான வாழ்க்கையையே வாழ்ந்து வந்தார். ‘சிட்டகாங் ஆர்மரி ரைடர்ஸ்: ரெமினிசென்சஸ்’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலை எழுதினார். இந்திய விடுதலைக்குப் பிறகு, இந்திய புள்ளிவிவர நிறுவனத்தில் சேர்ந்தார். பதவி ஓய்வு பெறும்வரை அங்கேயே பணிபுரிந்தார்.
# இவரது வாழ்க்கை வரலாறு ‘கேலே ஹம் ஜீ ஜான் ஸே’, ‘சிட்டகாங்’ ஆகிய திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டது. விடுதலைப் போராட்டக் களத்தில் மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட, நலிவடைந்த மக்களின் முன்னேற்றத்துக்காகவும் முழுமூச்சுடன் பாடுபட்ட வீராங்கனை கல்பனா தத்தா, 1995-ம் ஆண்டு தமது 82-வது வயதில் மறைந்தார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்