

மறைந்த இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, ‘பாலமுரளி நாத மகோத் ஸவம்’ கடந்த 4-ம் தேதி கொண்டாடப் பட்டது. சென்னை நாரத கான சபா அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் சார்பில் டாக்டர் எம்.பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை தொடங்கப்பட்டது.
இந்த அறக்கட்டளை சார்பில், கர்னாடக இசைத் துறையில் நீண்ட காலம் பங்களித்து வரும் ‘சங்கீத கலாநிதி’ டி.வி.கோபால கிருஷ்ணனுக்கு டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் பெயரில் அமைந்த தேசிய விருது, ‘முரளி நாத லஹரி’ என்னும் பட்டத்துடன் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இளையராஜா, டாக்டர் எம்.பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளையை தொடங்கிவைத்தார். தனது இசை குருக்களில் ஒருவரான டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு விருது வழங்கியும் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது:
இறைவனின் விருப்பம்
‘‘தன் முயற்சியாலும் பயிற்சியாலுமே இசையில் உயர்ந்த இடத்துக்குச் சென் றவர் பாலமுரளி கிருஷ்ணா. ஆனால், அப்படியொரு முயற்சி, பயிற்சியை செய்ய வேண்டும் என அவருக்கு உணர்த் தியது இறைவன் அருள்தான். அவர் இசையமைத்த பொக்கிஷத்தை எல்லாம் முறையாகப் பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று அவரிடமே கூறியிருக் கிறேன். இதுபோன்ற இசை சார்ந்த பல நல்ல விஷயங்களை செய்வதற்கு அவரது குடும்பத்தினரே தற்போது ஒரு அறக்கட்டளை தொடங்கியுள்ளனர். அதை நானே தொடங்கி வைத்திருப்பதுகூட இறைவன் விருப்பம்தான்’’ என்றார்.
பாரத ரத்னாவுக்கு முயற்சி
பாலமுரளி கிருஷ்ணாவுடனான தனது இனிமையான நினைவுகளை டி.வி.கோபாலகிருஷ்ணன், பகிர்ந்து கொண்டார். தொழிலதிபர் நல்லி குப்பு சாமி பேசும்போது, ‘‘பாலமுரளி கிருஷ்ணா வுக்கு ‘பாரத ரத்னா’ விருது கிடைக்க அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்’’ என்றார்.
பாலமுரளி கிருஷ்ணாவின் பஞ்சரத்ன கீர்த்தனைகள் அடங்கிய குறுந்தகட்டை சுதா ரகுநாதன் வெளியிட்டார். முன்னதாக, சுதா ரகுநாதன், உன்னி கிருஷ்ணன் மற்றும் டாக்டர் கிருஷ்ணகுமார், பின்னி கிருஷ்ணகுமார் உள்ளிட்ட பாலமுரளி கிருஷ்ணாவின் சீடர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடினர். நிகழ்ச்சியை இசைக்கவி ரமணன் தொகுத்து வழங்கினார்.