Last Updated : 11 Jul, 2017 10:41 AM

 

Published : 11 Jul 2017 10:41 AM
Last Updated : 11 Jul 2017 10:41 AM

குன்றக்குடி அடிகளார் 10

ஆன்மிகத் தலைவர், தமிழறிஞர்

சமயப் பணியையும் தமிழ்மொழி வளர்ச்சியையும் இரு கண்களாகக் கொண்டு அருந்தொண்டாற்றிய குன்றக்குடி அடிகளார் பிறந்த தினம் இன்று (ஜூலை 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* மயிலாடுதுறையை அடுத்த நடுத்திட்டு என்ற கிராமத்தில் பிறந்தார் (1925). இவரது இயற்பெயர் அரங்கநாதன். சிறு வயதில் சிதம்பரத்தை அடுத்த திருவேட்களம் என்ற ஊரில் வாழ்ந்து வந்தபோது, தமிழறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளையிடம் தினமும் ஒரு திருக்குறளை ஒப்புவித்து சிறுவர்கள் காலணா பெற்றுச் செல்வார்கள்.

* இவரும் அவ்வாறே ஒப்புவித்து வந்தார். இதனால் திருக்குறள் பற்றும் தமிழில் ஆர்வமும் பிறந்தது. இளம்பருவத்தில் விபுலானந்தருடன் இணைந்து தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள் உட்பட பல போராட்டங்களில் கலந்துகொண்டார்.

* பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் தருமபுரம் ஆதீனத்தில் கணக்கராக வேலைக்குச் சேர்ந்தார். இவரது ஆற்றலைக் கண்ட அங்கிருந்த தம்பிரான் இவரைத் துறவறம் பூணுமாறு அறிவுறுத்தினார். சிறுவயது முதலே சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த இவரும் உடனடியாக சம்மதித்தார்.

* 1945-ல் துறவறம் பூண்டு தருமபுரம் சைவ மடத்தில் துறவியாக இணைந்தார். ‘கந்தசாமித் தம்பிரான்’ என அழைக்கப்பட்டார். சைவ சித்தாந்தங்கள் தொடர்பான அனைத்தையும் பயின்றார். பல்வேறு சமயப் பணிகளுடன் சொற்பொழிவு ஆற்றியும் வந்தார்.

* பட்டிமன்றம் என்பதை ஆக்கபூர்வமாக, எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் பயன்படுத்தினார். திருவண்ணாமலை சைவ மடத்தின் ஆதீனப் பொறுப்பு இவரை நாடி வந்தது. அப்போது ‘தெய்வசிகாமணி அருணாச்சல தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என்ற பெயர் இவருக்கு சூட்டப்பட்டது. 1949-ம் ஆண்டு குன்றக்குடி மடத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின்னர் ‘குன்றக்குடி அடிகளார்’ என்று நேசத்துடன் அழைக்கப்பட்டார்.

* 1952-ல் சமயச் சான்றோர்கள், தமிழறிஞர்களை ஒன்றுதிரட்டி பெரிய மாநாடு ஒன்றை நடத்தினார். அதன் விளைவாக ‘அருள்நெறித் திருக்கூட்டம்’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் செயலாக்கப் பிரிவாக ‘அருள்நெறித் திருப்பணி மன்றம்’ என்ற அமைப்பும் தொடங்கப்பட்டது.

* சமயப் பணிகளை மட்டுமல்லாமல் சமூக ஏற்றத் தாழ்வுகளைப் போக்கும் சீர்திருத்தப் பணிகளையும் மேற்கொண்டார். ஆதி திராவிடர்களை கோவில்களுக்குள் அனுமதித்தார். சமஸ்கிருத வேத மந்திரங்களுக்குப் பதிலாக தமிழில் வழிபாடு, பூஜைகள் நடத்த வலியுறுத்தினார்,

* இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார். 1967-ல் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மணிமொழி, தமிழகம், அருளோசை, மக்கள் சிந்தனை, அறிக அறிவியல் முதலிய இதழ் களையும் நடத்தி வந்தார். திருக்குறள் தொடர்பான இவரது படைப்பு கள், திருக்குறளின் ஆழத்தையும், செறிவையும் பிரதிபலித்தன. ‘திருவள்ளுவர்’, ‘திருவள்ளுவர் காட்டும் அரசியல்’, ‘குறட்செல்வம்’, ‘திருக்குறள் பேசுகிறது’ உள்ளிட்ட நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

* ‘அப்பர் விருந்து’, ‘தமிழமுது’, ‘திருவாசகத்தேன்’, ‘நாயன்மார் அடிச்சுவட்டில்’, ‘நமது நிலையில் சமயம் சமுதாயம்’, ‘திருவருட்சிந்தனை’, ‘நாள் வழிபாட்டுக்குரிய தினசரி தியான நூல்’ உள்ளிட்ட பல சமய நூல்களையும், ‘சிலம்பு நெறி’, ‘கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்’, ‘பாரதி யுக சாந்தி’ உள்ளிட்ட பல இலக்கிய நூல்களையும் எழுதியுள்ளார்.

* கிராமப் பொருளாதார வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு 1972-ல் குன்றக்குடி கிராமத் திட்டத்தைத் தொடங்கினார். வெளி நாடுகளில் தமிழகத்தின் பண்பாட்டுத் தூதராகப் போற்றப்பட்டார். தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதியாகச் செயல்பட்ட ஆன்மிகத் தலைவரான குன்றக்குடி அடிகளார் 1995-ம் ஆண்டு 70-வது வயதில் மறைந்தார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x