

விடுதலைப் போராட்ட வீரரும் இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்களுள் ஒருவருமான பிதான் சந்திர ராய் (Bidhan Chandra Roy) பிறந்த தினம் இன்று (ஜூலை 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* பிஹார் மாநிலம், பான்கிபூரில் பிறந்தார் (1882). தந்தை, துணை கலெக்டராகப் பணியாற்றி யவர். பள்ளிக் கல்வியை பாட்னாவில் முடித்தார். கல்கத்தா பிரசிடென்சி கல்லூரியிலும், பாட்னா கல்லூரியிலும் பயின்று பட்டம் பெற்றார்.
* பெங்கால் பொறியியல் கல்லூரி யிலும் கல்கத்தா மருத்துவக் கல்லூரியிலும் விண்ணப்பித்தி ருந்த இவருக்கு இரண்டிலுமே இடம் கிடைத்தன. கல்கத்தா பல் கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார்.
* மருத்துவ மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். ஒரே நேரத்தில் மருந்தியல் மற்றும் அறுவை சிகிச்சை மருத்துவத்துக்கான எம்.ஆர்.சி.பி. மற்றும் எஃப்.ஆர்.சி.எஸ் படிப்புகளை 2 ஆண்டு கள், 3 மாதங்களிலேயே முடித்து சாதனை படைத்தார்.
* கல்கத்தா மருத்துவக் கல்லூரி உட்பட பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1928-ல் இந்திய மருத்துவ நிறுவனத்தைத் தொடங்கி நிர்வகித்து வந்தார். 1931-ல் கல்கத்தா மேயராக நியமிக்கப்பட்டார்.
* காந்திஜியுடன் இணைந்து சுதந்திரப் போராட்டங்களிலும் பங்கேற்றார். சக அரசியல் நண்பர்களால் ‘பிதான் தா’ (அண்ணன்) என நேசத்துடன் அழைக்கப்பட்டார். நாட்டு மக்களுக்கு உடலும் மனமும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே சுயராஜ்ஜியக் கனவு நனவாகும் என்று நம்பினார்.
* வறுமையில் தவித்த மக்களின் நலவாழ்வுக்காக ஜாதவபூர் காசநோய் மருத்துவமனை, சித்தரஞ்சன் சேவா சதன், கமலா நேரு மருத்துவமனை, இந்திய மனநல சுகாதார மையம், விக்டோரியா இன்ஸ்டிடியூஷன், சித்தரஞ்சன் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றைத் தொடங்கினார். சுதந்திரத்துக்குப் பிறகு வங்காளத்தின் முதலமைச்சராக இவர்தான் பதவி ஏற்க வேண்டும் என்று கட்சி விரும்பியது. தன் சேவைகளுக்குப் பதவி இடையூறாகிவிடும் என்பதற்காக அந்தப் பதவியை மறுத்துவிட்டார்.
* அடுத்த ஆண்டு காந்திஜியின் ஆலோசனைப்படி முதல்வர் பதவியை ஏற்றார். 1948 முதல் 1962-ல் மரணமடையும்வரை தொடர்ந்து 14 ஆண்டுகள் மேற்கு வங்கத்தின் முதல்வராகச் செயல்பட்டார். அவர் பதவி ஏற்ற சமயம் அங்கு உணவுப் பஞ்சம், வேலையில்லாத் திண்டாட்டம், கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து வந்துகொண்டே இருந்த அகதிகள் பிரச்சினை என ஏராளமான பிரச்சினைகள் இருந்தன.
* தனது தலைசிறந்த நிர்வாகத் திறனுடன் அத்தனைப் பிரச்சினைகளையும் அபாரமாகக் கையாண்டார். இவரது ஆட்சிக் காலத்தில் அம்மாநிலம் அபார வளர்ச்சி கண்டது. ‘மேற்கு வங்காளத்தின் சிற்பி’ எனப் போற்றப்பட்டார். தன் வீட்டையே மருத்துவமனைக்கு நன்கொடையாக அளித்தார். முதல்வராக இருந்தபோதும் ஏழை மக்களுக்கு தினமும் இலவசமாக மருத்துவம் பார்த்தார்.
* இவரது சேவையைப் பாராட்டி 1961-ல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. மருத்துவம், அரசியல், நிர்வாகம், கல்வி உள்ளிட்ட களங்களில் முத்திரை பதித்த, பிதான் சந்திர ராய் 1962-ம் ஆண்டு ஜூலை மாதம் அவரது பிறந்த நாள் அன்றே, 80-வது வயதில் மறைந்தார்.
* இந்தியாவில் இவரது பிறந்த நாள் தேசிய மருத்துவர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. அறிவியல், கலை, இலக்கியத்தில் சாதனை படைப்போருக்கு இவரது நினைவாக பி.சி.ராய் விருது வழங்கப்பட்டு வருகிறது.