

புகழ்பெற்ற டென்னீஸ் வீரர் போரிஸ் பெக்கரின் பிறந்தநாள் இன்று (நவம்பர் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...
ஜெர்மனியில் பிறந்தவர். தந்தை டென்னிஸ் மைதான கட்டிடக் கலைஞர். தந்தையுடன் உதவிக்குச் சென்ற இடத்தில் டென்னிஸ் இவரை இழுத்துக் கொண்டது. 8 வயதிலேயே போட்டிகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார்.
ஸ்டெபிகிராஃபுடன் சேர்ந்து பயிற்சி செய்வார். பின்னாளில் ஜெர்மனியின் சாம்பியனாக விளங்கிய அவரும் அப்போது வளர்ந்துகொண்டிருந்த வீராங்கனை. ஜெர்மன் டென்னிஸ் கூட்டமைப்பில் பயிற்சி பெற 10-வது கிரேடுடன் தனது பள்ளிப் படிப்பை கைவிட்டார் போரிஸ். 16 வயதில் தொழில்முறை ஆட்டக்காரர் ஆனார்.
தங்கள் பிள்ளை பட்டம் பெற்று தொழில் செய்யவேண்டும் என்பது பெற்றோரின் கனவு. பள்ளிப் படிப்பை அவர் கைவிட்டதில் அவர்களுக்கு ஏக வருத்தம். ஆனால், தனது அபார விளையாட்டுத் திறமையால் அவர்களது மனதை மாற்றினார்.
ஆட்டங்களில் போரீஸ் பாணி அதிரடியாக இருக்கும். மொத்த செட்களிலும் ஆதிக்கம் செலுத்துவார். 17 வயதில் விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றது டென்னிஸ் ஆட்டத்தில் புதிய வரலாறு!
அமெரிக்க ஓபன் டென்னிஸ், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளார். 1988, 1989-ம் ஆண்டுகளில் தொடர்ந்து 22 முறை ஒற்றையர் ஆட்டங்களில் வென்றது உட்பட மொத்தம் 49 ஒற்றையர் போட்டிகளில் வென்றுள்ளார். தலா 3 விம்பிள்டன் மற்றும் ஏ.டீ.பி., 6 கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ளார். உலகத் தரவரிசைப் பட்டியலில் 12 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார்.
1992-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் மைக்கேல் ஸ்டிச்சுடன் இணைந்து இரட்டையர் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றார். யானைக்கும் அடி சறுக்கும் இல்லையா! உள் விளையாட்டு அரங்கத்திலும் புல் தரை மைதானங்களிலும் வேகம் காட்டும் இந்த வீரரால் கடைசி வரை களிமண் தரை மைதானத்தில் மட்டும் சிறப்பாக விளையாட முடியவில்லை. போரிஸ் இதை பலமுறை சொல்லி வருத்தப்படுவார்.
1999-ம் ஆண்டு ஓய்வு பெற்றபோது அவரது கையிருப்பு 25 மில்லியன் டாலர்கள். தற்போது டென்னிஸ் விளையாட்டு சாதன தொழில் புரிகிறார்.
டென்னிஸ் விளையாட்டில் குறிப்பிடத்தக்க சாதனைகள், பங்களிப்பு செய்தவர்களைக் கவுரவிக்கும் நோக்கில் அமெரிக்காவின் நியூபோர்ட்டில் அமைக்கப்பட்டுள்ள ‘சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேம்’ அமைப்பில் இவரது பெயர் 2003-ல் சேர்க்கப்பட்டது.
சொந்த மண்ணில் அல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ் உட்பட 14 நாடுகளில் பட்டங்களை வென்றுள்ளார். ஓய்வு பெற்றுவிட்டாலும், அரிதாக வேர்ல்டு டீம் டென்னிஸ் போட்டிகளில் தலைகாட்டுகிறார்.