Last Updated : 08 Jul, 2017 10:26 AM

 

Published : 08 Jul 2017 10:26 AM
Last Updated : 08 Jul 2017 10:26 AM

கிரிராஜ் கிஷோர்

இந்தி இலக்கியவாதி

பிரபல இந்தி படைப்பாளியும் சாகித்ய அகாடமி விருது வென்றவருமான கிரிராஜ் கிஷோர் (Giriraj Kishore) பிறந்த தினம் இன்று (ஜூலை 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* உத்தரபிரதேச மாநிலம், முஸாஃபர் நகரில் பிறந்தவர் (1937). பள்ளிப் படிப்பு முடித்தவுடன் இளங் கலைப் பட்டமும் 1960-ல் சமூகப் பணியியலில் முதுகலைப்பட்ட மும் பெற்றார். சிறுவயது முதலே இலக்கியத்தில் ஈடுபாடு கொண்டி ருந்த இவர், இந்தி, ஆங்கில இலக்கியங்களை வாசித்தார்.

* கான்பூர் ஐஐடி.யில் வேலை கிடைத்தது. இவர், தொழில்நுட்ப ஆசிரியர் அல்லாத இந்தி ஆசிரியர் என்பதால் ஏளனப் பேச்சுக்கும், சிறுமைப்படுத்துதல்களுக்கும் ஆளானார். அப்போது இவருக்கு காந்திஜி தென்னாப்பிரிக்காவில் பட்ட கஷ்டங்களும் அவற்றையெல்லாம் மீறி காந்திஜி எவ்வாறு வெற்றிபெற்றார் என்பன குறித்தெல்லாம் நினைவுக்கு வந்தன.

* இதுவே மாபெரும் தூண்டுகோலாக அமைந்து. மெல்ல மெல்ல இவரது பேச்சு, மொழித் திறன், பழகும் தன்மை, சிறந்த ஆளுமையால் கவரப்பட்ட அனைவரும் மரியாதையுடன் நடத்தத் தொடங்கினார்கள். 1975 முதல் 8 ஆண்டுகள் பதிவாளராகப் பணியாற்றினார். கான்பூர் ஐஐடி.யில் ஆக்கபூர்வ படைப்பு மற்றும் வெளியீடு (Creative Writing and Publication) மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

* எழுத்தாற்றல் கொண்டிருந்த இவர், முதலில் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். பின்னர், நாடகங்கள், ஓரங்க நாடகங்கள், குறு நாடகங்கள், நாவல்கள், விமர்சனங்கள், கட்டுரைகள் என இலக்கியத்தின் பல களங்களிலும் முத்திரை பதித்தார்.

* ‘நீம் கே ஃபூல்’, ‘சார் மோடி பேயாப்’, ‘பேப்பர் வெயிட்’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகள், 5 தொகுதிகளாக வெளிவந்த ‘மேரி ராஜ நீதிக் கஹானியா’, ‘நர்மேக்’, ‘பிரஜா ஹி ரெஹ்னே தோ’ உள் ளிட்ட நாடகங்கள், ‘ஹமாரே மாலிக் சப்கே மாலிக்’, ‘லோக்’, ‘சிடியாகர்’, ‘இந்த்ர சுனே’ உள்ளிட்ட நாவல்கள், ‘மோகன் கா துக்’ என்ற சிறுவர்களுக்கான நாடகம், ‘லிக்னே கா தர்க்’, ‘ஸரோகார்’, ‘கத்-அகத்’, ‘சமர்ப்பண்’ உள்ளிட்ட கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை.

* தென்னாப்பிரிக்காவில் காந்திஜியின் அனுபவங்கள், போராட்டங்கள் குறித்த அடுக்கடுக்கான நிகழ்வுகளுடன், மகாகாவிய வடிவில் எழு தப்பட்ட இவரது ‘பஹலா கிர்மிடியா’ என்ற நாவல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு நாடு முழுவதும் பிரபலமடைந்தது.

* இதை எழுத இவர் 8 ஆண்டுகள் ஆய்வு மேற்கொண்டார். தென்னாப்பிரிக்கா உட்பட பல இடங்களுக்கும் சென்று காந்திஜியுடன் தொடர்புடைய பலரைச் சந்தித்து தகவல்களைத் திரட்டினார். இந்த நாவலுக்காக இவருக்கு உத்தரபிரதேசத்தின் ‘பாரதேந்து புரஸ்கார் விருது’ கிடைத்தது. ‘டாயீ கர்’ என்ற நாவலுக்காக இவருக்கு 1992-ல் சாகித்ய அகாடமி பரிசு கிடைத்தது.

* சாகித்ய அகாடமியின் செயல் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். இவரது படைப்புகள், விரிவுரைகள், வெளியீடுகளில் காந்திஜியின் வாழ்க்கை குறித்தும் அவரது போதனைகள் குறித்தும் ஏராளமான விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

* 2007-ல் இவருக்கு பத்ம விருது வழங்கப்பட்டது. மத்திய பிரதேச மாநிலத்தின் வீர்சிங் தேவ் புரஸ்கார், உத்தரபிரதேச மாநிலத்தின் வாசுதேவ் சிங் தங்கப்பதக்கம், சாகித்ய பூஷண் விருது என ஏராளமான விருதுகளை வென்றுள்ளார்.

* ‘அகார்’ என்ற இந்தி காலாண்டு இதழை நடத்தி வருகிறார். இந்தி இலக்கியத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிவரும் முதிர்ந்த படைப்பாளியான கிரிராஜ் கிஷோர் இன்று 81-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x