

தலைசிறந்த இந்திய வானியற்பியல் அறிஞரும் பிரபஞ்ச இயலாளருமான ஜயந்த் விஷ்ணு நார்ளீகர் (Jayant Vishnu Narlikar) பிறந்த தினம் இன்று (ஜூலை 19). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் பிறந்தார் (1938). வாரணாசியில் பள்ளிக் கல்வி முடித்தார். பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். கல்வி உதவித் தொகை பெற்று, மேற்படிப்புக்காக கேம்பிரிட்ஜ் சென்றார்.
* அங்கு இளங்கலைப்பட்டமும் முதுகலைப் பட்டமும் பெற்றார். மேலும் கணிதக் கோட்பாடுகளைப் பயன்படுத்தி, சிருஷ்டியில் பொருட்கள் வெளிப்படுவதை விளக்கும் உறுதியான நிலைக் கோட்பாடு (steady-state theory) குறித்து ஆராய்ந்து 1963-ல் முனைவர் பட்டம் பெற்றார்.
* கேம்பிரிட்ஜில் முக்கியப் பாடமாகக் கணிதம் பயின்றபோது, இணைப் பாடங்களான வானியல் மற்றும் வானியற்பியல் துறையில் இவரது ஆர்வம் அதிகரித்தது. அவற்றில் ஆழ்ந்த நிபுணத்துவம் பெற்று, ஸ்மித் பரிசு மற்றும் ஆடம்ஸ் பரிசை வென்றார். அண்டவியல் மற்றும் வானியற்பியல் களங்களில் தன் வழிகாட்டியான சர் ஃப்ரெட் ஹோயலுடன் இணைந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
* இருவரும் இணைந்து ‘ஹோயல் - நார்ளீகர்’ கோட்பாடு எனத் தற்போது குறிப்பிடப்படும் பொதுவடிவப் புவியீர்ப்புக் கோட்பாட்டை (conformal gravity theory) மேம்படுத்தினார்கள். கேம்பிரிட்ஜில் கோட்பாட்டு வானியல் அமைப்பின் நிறுவன ஊழியர் - உறுப்பினராகவும் செயல்பட்டார்.
* 1972 ல் இந்தியா திரும்பினார். டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிலையத்தில் இணைந்து பணியாற்றினார். இவரது தலைமையின் கீழ் கோட்பாட்டு வானியற்பியல் குழு, சர்வதேசத் தரம் வாய்ந்ததாக வளர்ச்சியடைந்தது. புவியின் மேற்பரப்பு மற்றும் மேக்சிஸ் கோட்பாடு, குவாண்டம் பிரபஞ்சவியல் மற்றும் வானியற்பியல் உள்ளிட்ட களங்களில் இவரது ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் குறிப்பிடத்தக்கவை.
* 1988-ல் பல்கலைக்கழக மானியக் குழு, இவருக்கு வானியல் மற்றும் வானியற்பியலுக்கான இன்டர் - யுனிவர்சிட்டி மையத்தின் (ஐயுசிஏஏ) நிறுவன இயக்குநர் பதவி வழங்கியது.
* 41 கி.மீ. உயரத்தில் மீவளி மண்டலத்தில் நுண்ணுயிரிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றின் தோற்றம் குறித்த ஆய்வுக் குழுவுக்கு இவர் தலைமை ஏற்றார். பல்வேறு நாடுகளின் கணிதம் மற்றும் அறிவியல் அமைப்புகளோடு தொடர்பு கொண்டிருந்த இவர், அங்கெல்லாம் அதன் முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
* இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கின. மேலும் பிரான்ஸ் வானியல் கழகம், லண்டன் ராயல் வானியல் கழகம், உள்ளிட்ட பல அமைப்புகளின் விருதுகளும் கிடைத்தன. அறிவியல் பாடத்தில் அனைவருக்கும் ஆர்வம் ஏற்படச் செய்யும் வகையில் தனது அறிவியல் கருத்துகளை ஆங்கிலம், இந்தி, மராட்டி மொழிகளில் நூல்களாக எழுதினார்.
* இவரது சுயசரிதை நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. பத்மபூஷண், பத்மவிபூஷண், மகாராஷ்டிர பூஷண், ராஷ்டிரபூஷண் விருது, இந்திய தேசிய அறிவியல் அகாடமியின் இந்திராகாந்தி விருது, யுனெஸ்கோவின் காளிங்கா பரிசு உள்ளிட்ட பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.
* எவ்விதப் பதற்றமும் இல்லாமல் அமைதியாக தனது ஒவ்வொரு இலக்கிலும் வெற்றிபெறும் சாதனை விஞ்ஞானியாகப் புகழ் பெற்றுள்ளார். அரை நூற்றாண்டுக்கும் மேலாக வானியற்பியல், வானியல் களங்களில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை வழங்கிவரும் ஜயந்த் விஷ்ணு நார்ளீகர் இன்று 80-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.