இந்திரா பார்த்தசாரதி 10

இந்திரா பார்த்தசாரதி 10
Updated on
2 min read

தமிழ் எழுத்தாளர், நாவலாசிரியர்

சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல தமிழ் இலக்கியப் படைப்பாளியான இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy) பிறந்தநாள் இன்று (ஜூலை10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* சென்னையில் (1930) பிறந்தவர். கும்பகோணத்தில் வளர்ந்தார். அங்கேயே பள்ளிக் கல்வியை முடித்தார். பள்ளிப் பருவத்தில் தி.ஜானகிராமனின் மாணவர் இவர். குடந்தை அரசுக் கல்லூரியில் இளங்கலைப் பட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

* சிறு வயது முதலே தமிழ், ஆங்கில இலக்கியத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். நிறைய வாசித்தார். நிறைய எழுதவும் ஆரம்பித்தார். முதன்முதலாக ஆனந்த விகடன் வார இதழில் இவரது ‘மனித இயந்திரம்’ சிறுகதை வெளிவந்தது. தனது மனைவி பெயரை இணைத்துக்கொண்டு ‘இந்திரா பார்த்தசாரதி’ என்ற பெயரில் எழுதினார்.

* ‘தீபம்’, ‘கல்கி’, ‘கணையாழி’ உள்ளிட்ட இதழ்களில் எழுதிவந்தார். இவரது முதல் 2 நாவல்களான ‘கால வெள்ளம்’, ‘தந்திர பூமி’ ஆகியவை நல்ல வரவேற்பு பெற்றதால், சிறந்த படைப்பாளியாக அங்கீகாரம் பெற்றார்.

* ‘நிலம் என்னும் நல்லாள்’ என்ற தலைப்பில் ஒரு நாவல் எழுதினார். ஒரு நண்பரின் ஆலோசனையை ஏற்று, ‘மழை’ என்ற பெயரில் அதை நாடகமாக எழுதினார். பிறகு, ‘போர்வை போர்த்திய உடைகள்’, ‘அவுரங்கசீப்’, ‘நந்தன் கதை’, ‘கோயில்’, ‘ராமானுஜர்’ என பல நாடகங்களை எழுதினார்.

* எதார்த்த நிகழ்வுகளை தனித்துவம் வாய்ந்த முறையில் கையாண்டு எழுதுவது இவரது பாணி. இவரது எழுத்துகள் உளவியல் சிக்கல்களை மையமாகக் கொண்டிருக்கும். நகர வாழ்க்கையின் பரபரப்பான சூழல், நாகரிகத்தின் விளைவுகள், உறவுகள், உறவுகளின் விரிசல்கள் என நகர்ப்புற வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்கள் இவர் கதைகளில் பிரதிபலித்தன.

* கூர்மையான அரசியல் பார்வையும், அங்கதமும் இவரது எழுத்தின் முக்கிய அம்சங்கள். இவரது பல படைப்புகள் அரசியல் சீர்கேடுகளையும், அரசியல் தந்திரங்களையும் அங்கதச் சுவையுடன் விமர்சிக்கின்றன. தமிழில் நகர்சார் மொழியை அறிமுகம் செய்தவர்களில் முக்கியமானவர்.

* ஆய்வுத் துறையிலும் சிறந்த பங்களிப்பை வழங்கியவர். ஆழ்வார்கள் குறித்து ஆய்வு செய்து ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்து டெல்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். ராமானுஜர் பற்றிய இவரது நூலும் ஆழ்ந்த ஆராய்ச்சியின் விளைவாகப் பிறந்ததாகும்.

* இவர் ஓர் ஆசிரியரும்கூட. திருச்சி தேசியக் கல்லூரியில் 1952 முதல் மூன்றாண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். டெல்லியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1962 முதல் டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகச் சேர்ந்தார். தொடர்ந்து இணைப் பேராசிரியர், பேராசிரியராக 40 ஆண்டு காலம் அங்கு பணியாற்றினார்.

* போலந்தின் வார்சா பல்கலைக்கழகத்தில் இந்திய தத்துவம், பண்பாட்டு பாடப் பிரிவுக்கான வருகைதரு பேராசிரியராக 1981 முதல் 1986 வரை பணியாற்றினார். ஓய்வுபெற்ற பிறகு, புதுவை பல்கலைக்கழக நாடகத் துறையில் நான்காண்டு காலம் பணியாற்றினார்.

* இவர் 17 புதினங்கள், 6 சிறுகதைத் தொகுப்புகள் என நிறைய எழுதியுள்ளார். 2010-ல் ‘பத்ம’, ‘சரஸ்வதி சம்மான்’ விருதுகளைப் பெற்றார். இவரது ‘குருதிப்புனல்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. பாரதிய பாஷா பரிஷத் விருதையும் பெற்றார். தற்போதும் படைப்புக் களத்தில் பங்களித்துவரும் முதுபெரும் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி இன்று 88-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in