

பொது விநியோகத் திட்டத்தில் பழைய குடும்ப அட்டைக்கு பதில் புதிய ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் தொடங்கி வைத்தது.
ஆனால் ஜூன் கடந்து ஜூலை மாதமும் வந்துவிட்டது இன்னும் ஸ்மார்ட் கார்டுகள் பெரும்பான்மையான மக்களிடம் சென்றடையவில்லை.
ஸ்மார்ட் கார்டுகள் வழங்கபடாமல் இருப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழக எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலின், "ஏழை எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கவும், முகவரிக்கான முக்கிய அடையாள ஆவணமாகவும் திகழும் ரேஷன் கார்டுகள் விஷயத்தில் அதிமுக அரசு தொடர்ந்து மெத்தனமாக இருந்து வருவது கடும் கண்டனத்திற்குரியது" என்று தெரிவித்திருந்தார்.
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறும்போது "இதுவரை ஒரு கோடியே 2 லட்சம் பேருக்கு மட்டுமே ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டிருக்கின்றன. நியாய விலைக் கடை அதிகாரிகள் மற்றும் தொழில் நுட்ப குறைப்பாடுகளால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது” என்றார்.
ஸ்மார்ட் கார்டு பெறுவதில் என்ன தொழில் நுட்ப சிக்கல்?
ஸ்மார்ட் கார்டு விண்ணப்பிதற்காக அரசு தரப்பில் அளிக்கப்பட்டுள்ள >https://www.tnpds.gov.in/pages/registeracard/register-a-card.xhtml என்ற இணையப் பக்கத்தில் ஓரளவு தொழில் நுட்பப் புரிதல் உள்ளவர்களால் மட்டுமே எளிதாக ஸ்மார்ட் கார்டு விண்ணப்பத்திற்கான பதிவை நிரப்ப முடியும் வகையில் உள்ளது.
தொழில் நுட்பம் சார்ந்த புரிதல் இல்லாத பலரை இந்த இணையப் பக்கம் திணற வைக்கவே செய்கிறது.
இப்பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள தகவலை நிரப்புவதற்கு ஆங்கிலம், தமிழ் என இரண்டு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் எளிமையாக இந்த விண்ணப்பத்தை எளிதாக நிரப்ப முடியும் அளவில் தமிழில் முடிவதில்லை.
தமிழில் விண்ணப்பத்தை நிரப்புவது கடினமான வகையில் உள்ளது. தமிழில் உள்ள எழுத்துருக்கள் (fonts) கணினியில் பழக்கப்பட்டவர்களால் கையாளமுடியும். எளிதாக விண்ணப்பத்தை நிரப்பவும் முடியும். கணினியை எப்போதாவது பயன்படுத்துபவர்களுக்கு அது எளிதாக இல்லை என்பதே உண்மை.
பல இணைய, பொதுச்சேவை மையங்களில் ஸ்மார்ட் அட்டைகள் சம்பந்தப்பட்ட சேவைகளுக்கு ரூ.60 முதல் 100 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சாமானிய மக்கள் அல்லலுக்கு உள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து இல்லதரசி ஜெயந்தி கூறும்போது, "என்னுடைய குடும்ப அட்டை காணாமல் போனதால் எங்கள் பகுதியிலுள்ள நியாய விலைக் கடைகளில் புதிய அட்டைக்காக விண்ணபிக்கச் சென்றபோது அவர்கள் புதிய அட்டை எல்லாம் இனி கிடையாது. அதற்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றனர். மேலும், அது தொடர்பான தகவலை பெற்றுக் கொண்டு ஒரு மாதத்துக்குள் ஸ்மார்ட் கார்டு வரும் என்றனர்.
ஆனால் ஒரு மாதம் ஆகியும் ஸ்மார்ட் கார்டு வரவில்லை. அது தொடர்பான குறுஞ்செய்தியும் எனக்கு வரவில்லை. குடும்ப அட்டையும் தொலைந்து விட்டதால் என்னால் அரசு வழங்கும் உணவுப் பொருட்களையும் வாங்க முடியவில்லை. இதனால் கடுமையான நெருக்கடிக்கு உள்ளானேன்.
இதுகுறித்து நியாய விலைக் கடைக்கு சென்று கேட்டபோது உங்களுடைய புகைப்படம் தவறாகப் பதிவாகியுள்ளது. இணைய சேவை மையத்துக்கு சென்று மீண்டும் ஸ்மார்ட் கார்டுக்கு பதிவு செய்யுங்கள் என்றனர்.
எனக்கோ தொழில் நுட்பம் சார்ந்த அனுபவம் கிடையாது. எனது கணவர் பணிக்குச் செல்வதால் அவரையும் என்னால் அழைக்க முடியாது. இணைய சேவைகளுக்கு சென்று ஸ்மார் கார்டு பற்றி கூறத் தெரியாமல் பல முறை முழித்திருக்கிறேன்.
நேர விரயம், மன உளைச்சல் கடந்து சிலர் உதவி செய்ததால் ஒருவழியாக ஸ்மார்ட் கார்டுக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளேன். பத்து நாட்களில் ஸ்மார்ட் கார்டு வரும் என்று சொல்லி இருக்கிறார்கள். இப்போது நம்பிக்கையுடன் ஸ்மார்ட் கார்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன். அது வந்தால்தான் வீட்டுக்குத் தேவையான பொருட்களை எளிதாக வாங்க முடியும்" என்றார்.
ஜெயந்தி மட்டுமல்ல அவரைப் போன்று ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நியாய விலைக் கடையில் வழங்கும் உணவுப் பொருட்களை நம்பித்தான் அவர்களது பொருளாதார நெருக்கடிகளை சமாளித்து வருகின்றனர்.
இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டும் ஸ்மார்ட் கார்டுகளை விரைவில் வழங்க துரித நடவடிக்கையில் இறங்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக வலுத்து வருகிறது.