

மலையாள நடிகர் திலீப் கைதைப் பொறுத்தவரை சில விஷயங்களைப் பேச வேண்டியிருக்கிறது.
1.கேரளக் காவல் துறை எந்தப் பத்திரிகைக்கும் பதில் சொல்லாமல் விசாரணையை நடத்தியது. மொத்தம் 19 வகையான ஆவணங்களைத் தயார் செய்த பின்தான் தகவல் வெளியில் வந்தது.
2. பெரும்பாலான மலையாளப் பத்திரிகைகள் நடிகையின் பெயரை செய்திக் குறிப்பின்போது எழுதாமல் தவி்ர்த்தன. அவர் புகழ்பெற்ற நடிகையாய் இருந்தும்கூட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரைப் பெரிய அளவில் எழுதவில்லை. சில விதிவிலக்குகளும் இருந்தன.
3. ஒரு புகழ்பெற்ற மனிதனைக் கைது செய்ய கேரளக் காவல் துறை தயங்கவில்லை. ஆனால் இது அரசியல்வாதிகளுக்கு நடக்குமா எனத் தோன்றுகிறது. தமிழகத்தில் இதுவும் நடக்காது.
4.பணியிடத்தில் பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டம் ஒருங்கிணைக்கப்பட்ட, ஒருங் கிணைக்கப்படாத துறை இரண்டுக்கும்தான். அதன்படி திரைப்பட உலகில் கமிட்டிகள் அமைக்கப்பட்டுவிட்டனவா? பாலியல் வன்முறை என்பது இச்சம்பவத்தைப் போல் கடத்தி வன்முறை செய்வது மட்டுமல்ல. எல்லா வித அத்துமீறல் களும்தான். அப்படி அது நடைமுறைப் படுத்தப்பட்டால் மிகப் பெரிய நட்சத்திரங்களும் மிஞ்ச மாட்டார்கள் என நினைக்கிறேன். இது குறித்து நடிகர் சங்கம் மற்ற திரைத் தொழிலாளர் அமைப்புகளின் நிலைப்பாடு என்ன?
5.திலீப் மேல் காவல் துறை அடக்குமுறை செய்கிறது எனச் சொல்லிக்கொண்டிருந்த மலையாள நடிகர் சங்கம் திலீப்பின் பெயரை உறுப்பினர் பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறது. இதற்காகக் குரல் கொடுத்த நடிகைகள் பார்வதி, ரம்யா நம்பீசன் இன்னும் பலர் குறிப்பிடத்தக்கவர்கள். பெண்களுக்காக ‘விமன் இன் சினிமா கலெக்டிவ்’ எனும் இயக்கம் மலையாளத் திரை யுலகில் இயங்குகிறது என்பது மெச்சத்தக்கது. அது இப்பிரச்சினைக்காகப் பேசியது. அது மட்டுமல்லாமல் திரைத் துறையில் இருப்போர் பெண் விரோத மொழியைப் பயன்படுத்துவதை எதிர்த்துவந்தது. பிரித்வி ராஜ், துல்கர் சல்மான் போன்ற நடிகர்கள் பெண்ணை இழிவுசெய்யும் வசனங்களைப் பேச மாட்டோம் எனவும், பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்தனர். பெண்கள் மீதான வன்முறையை எதிர்ப்பதில் ஆண்களின் தோழமை முக்கியமானது.
6.பாதிக்கப்பட்ட நடிகை துணிவுடன் வழக்கைப் பதிவு செய்தது மிக முக்கியமானது.