

அறிவியல் தமிழ் அறிஞர்
அறிவியல் தமிழ் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியவரும் ‘அறிவியல் தமிழ்த் தந்தை’ எனப் போற்றப்படுபவருமான மணவை முஸ்தபா (Manavai Mustafa) பிறந்த தினம் இன்று (ஜூன் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகில் உள்ள பிலார் கிராமத்தில் பிறந்தவர் (1935). பள்ளிப்படிப்புக்குப் பிறகு திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். பாண்டிச்சேரி வானொலி நிலைய அறிவியல் நிகழ்ச்சி ஆலோசகராகப் பணியாற்றினார்.
* பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியத்தைத் தமிழில் கொண்டு வந்த குழுவுக்குத் தலைமை ஏற்றார். ‘யுனெஸ்கோ கூரியர்’ இதழைத் தமிழில் வெளியிடுவதில் தீவிர முயற்சி செய்து, 35 ஆண்டுகள் அதன் ஆசிரியராகச் செயல்பட்டார். 1977 முதல் 1986 வரை திரைப்படத் தணிக்கைக் குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.
* தமிழ் அறிவியல் கருத்தரங்கை 1986-ல் முதன்முதலில் சென்னையில் நடத்தினார். அறிவியல், தொழில்நுட்பம், கணினி துறைச் சார்ந்த 8 கலைச்சொல் அகராதிகளை வெளியிட்டார்.
* அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்ற நிறுவனத்தைத் தொடங்கி, அறிவியல் தமிழ் பணியாற்றி வந்தார். தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாக இயக்குநராக 40 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழ்நாடு அரசு உயர்கல்வி - தமிழ் ஆக்கப் பணிக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார்.
* அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க இணைச் செயலாளர், சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் இந்தியக் குழுவின் இணைச் செயலாளர், பாரதிய ஞானபீடப் பரிசு தேர்வுக்குழு உறுப்பினர், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் தமிழ் வளர்ச்சித்துறை ஆலோசகர், தமிழ்மொழி மேம்பாட்டு வாரிய உறுப்பினர், செம்மொழி தமிழாய்வு நிறுவன சென்னை உறுப்பினர் என பல்வேறு முக்கியப் பொறுப்புகள் வகித்தவர்.
* இவர் எழுதிய ‘இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்’ என்ற நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூல்களுக்கான இரண்டாம் பரிசும், ‘மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்’ என்ற நூலுக்கு சிறந்த நூல்களின் சிறப்பு வெளியீடுகள் என்ற வகைப்பாட்டில் முதல் பரிசும் கிடைத்தது.
* கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி, செம்மொழி களஞ்சிய பேரகராதி, செம்மொழி உள்ளும் புறமும், தமிழில் இஸ்லாமிய இலக்கிய வடிவங்கள், மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம், அறிவியல் தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி ஆகிய இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை.
* மேலும் மாதிரி லட்சாதிபதி, ஜெர்மானிய இந்திய இயல் அன்றும் இன்றும், புதிய கண்டுபிடிப்புகளின் வரலாறு உள்ளிட்ட பல மொழிபெயர்ப்பு நூல்களைப் படைத்துள்ளார். சிறப்பு சிறுகதைகள், அறிவியல் செய்தி பரிமாற்றம், காசிம் புலவர் திருப்புகழ் உள்ளிட்ட நூல்களைத் தொகுத்து வெளியிட்டார். கூகுளில் பயன்படுத்தப்படும் கணினித் தமிழ் சொற்களைத் தந்தவர் இவர்தான். தம் வாழ்நாளில் சுமார் 8.5 லட்சம் கலைச்சொற்களை உருவாக்கியிருக்கிறார்.
* கலைமாமணி, திரு.வி.க விருது, தமிழ் தூதுவர், வளர்தமிழ்ச் செல்வர், அறிவியல் தமிழ் வித்தகர் விருது, ராஜா சர் முத்தையா செட்டியார் விருது, சிகாகோ தமிழ் மன்றத்தின் சேவா ரத்னா விருது உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட பட்டங்களும் விருதுகளும் பெற்றுள்ளார்.
* ‘அறிவியல் தமிழ்ச் சிற்பி’ என்ற பெருமைக்குரியவரும் வாழ்நாள் முழுவதும் தமிழ் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவருமான மணவை முஸ்தபா 2017-ம் ஆண்டு 82-வது வயதில் மறைந்தார்.