Last Updated : 31 Dec, 2013 04:35 PM

 

Published : 31 Dec 2013 04:35 PM
Last Updated : 31 Dec 2013 04:35 PM

புத்தாண்டு உறுதிமொழி: பாஸ்வேர்டை மாற்றுவோம்!

புத்தாண்டு பிறக்கப்போகிறது. புத்தாண்டு மாற்றத்துக்கான காலம் எனும் நம்பிக்கையில், இந்த ஆண்டு முதல் இதை செய்யலாம் என தனிப்பட்ட உறுதிமொழிகளை எடுத்துக்கொள்வதற்கான நேரம் இது.

புத்தாண்டு உறுதிமொழிகளை புத்தாண்டு பரபரப்பு அடங்கிய கையோடு மறந்து விடுவதுதான் வாடிக்கையாக இருக்கிறது. என்றாலும், வழக்கமான உறுதிமொழிகளோடு இந்த ஆண்டு புதிதாக ஒரு சூளுறை மேற்கொள்ளலாம். அது 'பாஸ்வேர்டை மாற்றுவோம்' என்பதுதான்.

இதைக் காலத்தின் கட்டாயம் என்றும் சொல்லலாம். காரணம் விடைபெற இருக்கும் 2013-ம் ஆண்டு தொழில்நுட்ப உலகை பொறுத்தவரை பாஸ்வேர்டு விழுப்புணர்வு ஆண்டாக அறியப்படலாம். அந்த அளவுக்கு 2013-ல் பாஸ்வேர்டு திருட்டுகள் நடைபெற்று இருக்கின்றன.

அடோப் உள்ளிட்ட பல இணைய நிறுவங்களின் லட்சக்கணக்கான பயனாளிகளின் பாஸ்வேர்டை தாக்காளர்களால் திருடப்பட்டது பற்றி இணைய உலகில் பரபரப்பாக பேசப்பட்டது. சமீபத்தில் கூட பேஸ்புக், கூகுள் உடபட பல நிறுவனங்களின் லட்சக்கணக்கான பாஸ்வேர்டுகள் தாக்காளர்களின் கைகளின் சிக்கியது பற்றி செய்தி வெளியாகியுள்ளது.

இப்படி கொத்துக் கொத்தாக பாஸ்வேர்டுகள் களவுபோவது பற்றி நிபுணர்கள் கவலையோடு விவாதித்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க மேற்கொள்ள முன் வைக்கப்படும் பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமானது பயனாளிகள் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்ற வேண்டும் என்பதுதான். அடிக்கடி மாற்றாவிட்டாலும் பரவாயில்லை, மிகப்பெரிய அளவில் பாஸ்வேர்டு திருட்டு நடைபெற்ற செய்தி வெளியானால், முதலில் பாஸ்வேர்டை மாற்றியாக வேண்டும். அதிலும் குறிப்பாக தாக்குதலுக்கு இலக்கான சேவையின் பயனாளி என்றால் இதை நிச்சயம் செய்தாக வேண்டும்.

பொதுவாகவே ஒரே பாஸ்வேர்டை வைத்திராமல், அடிக்கடி பாஸ்வேர்டை மாற்றிக்கொண்டே இருப்பது இணைய விஷமிகள் அவற்றை எளிதில் யூகித்து கைவரிசை காட்டாமல் இருக்க உதவும் என்கின்றனர். இதை இதுவரை யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், இப்போது பாஸ்வேர்டு களவு போகும் வேகத்தை பார்த்தால் அலட்சியம் ஆபத்தில் முடியும் என்றே சொல்லத் தோன்றுகிறது.

எனவே, புத்தாண்டு உறுதி மொழியாக பாஸ்வேர்டு மாற்றத்தை மேற்கொள்ளுங்கள். பாஸ்வேர்டு மாற்றும்போது பாதுகாப்பான பாஸ்வேர்டுக்காக அடிக்கடி வலியுறுத்தப்படும் குறிப்புகளை கவனமாக பின்பற்றுங்கள். அதாவது வழக்கமான பாஸ்வேர்டு மற்றும் எல்லோரும் பின்பற்றும் பாஸ்வேர்டு உத்திகளை தவிர்த்து விடுங்கள். அதோடு ஒரே பாஸ்வேர்டை ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகளில் பயன்படுத்துவதையும் கைவிடுங்கள். பலரும் சுலபமாக இருக்கிறது என்று ஒரு சேவையில் பயன்படுத்தும் பாஸ்வேர்டையே மேலும் பல சேவைகளில் பயன்படுத்துகின்றனர். பல சேவைகள் இமெயில் அல்லது சமூக வலைதள பாஸ்வேர்டையே பயன்படுத்த ஊக்குவிக்கின்றன. இது எளிதாக இருக்கலாம். ஆனால் ஆபத்தானது. குறிப்பிட்ட ஒரு சேவையில் பாஸ்வேர்டு திருடப்பட்டால் அதன் மூலம் தாக்காளர்கள் உங்களின் மற்ற சேவைகள் அனைத்துக்குள்ளும் நுழைந்து விடும் அபாயம் இருக்கிறது.

எனவே பல பாஸ்வேர்டுகளை பயன்படுத்தும் நிலை இருந்தால் , ஒவ்வொன்றுக்கும் ஒரு பாஸ்வேர்டை உருவாக்கி கொள்வதே நல்லது.

பாஸ்வேர்டை மாற்றுங்கள். இணையப் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளுங்கள்.

சைபர்சிம்மனின் வலைத்தளம்>http://cybersimman.wordpress.com/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x