Published : 05 Aug 2016 05:39 PM
Last Updated : 05 Aug 2016 05:39 PM

யூடியூப் பகிர்வு: தெலங்கானாவின் பாரம்பரிய விழா - போனலு!

தெலங்கானாவில் வருடந்தோறும் ஜூலை மாதத்தின் பின்னிரண்டு வாரங்களில் கொண்டாடப்படும் விழா 'போனலு'. 1800களின் பின்பகுதி அது. அந்த காலகட்டத்தில் ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத்தில் ப்ளேக் நோய் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காவு வாங்கியது.

கொத்துகொத்தாக மக்கள் மடிந்த நிலையில் உஜ்ஜயினி மகாங்காளி என்னும் உள்ளூர் தெய்வத்தால் நோய் குணமாகியது என்று நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையின் நீட்சியாக இன்றும் பெண்கள் குறிப்பிட்ட மாதத்தில் தலைக்கு குளித்து, தங்களை அலங்கரித்துக் கொள்கின்றனர். பானையில் உணவை நிரப்பி தலை மேல் வைத்து கோயிலுக்கு எடுத்துவருகின்றனர். அந்த உணவு 'போனம்' என்று அழைக்கப்படுகிறது. இந்த வார்த்தை உணவு என்பதன் சமஸ்கிருத வார்த்தையான 'போஜனம்' என்ற சொல்லில் இருந்து வந்திருக்கக்கூடும்.

வழக்கமாக இவர்களின் ஊர்வலம் கோல்கொண்டா கோட்டையில் இருந்து தொடங்குகிறது. பின்னர் கோயிலில் உணவு சமைக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. அருகில் இருக்கும் நாகினா பாக் பொழுதுபோக்கு இடத்தை விட, ஆன்மீக சுற்றுலா இடமாக மாறிவிட்டது.

இது பெண்களுக்கான விழா மட்டுமல்ல. இந்த விழாவில் ஆண்களும் கலந்துகொள்கின்றனர். காலங்காலமாக பூசாரிகளாக வாழும் சில ஆண்கள், 'போத்தராஜுக்கள்' என்று அழைக்கப்படுகின்றனர். இவர்கள் உடல் முழுக்க வேடமிட்டு காளியம்மன் கோயில் வரை நடனமாடிக்கொண்டே செல்கின்றனர். குதுப் ஷாஹி மன்னரால் ஒரு மசூதிக்கும் கோயிலுக்கும் இடையில் மாகாளி அம்மன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

கோயிலில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் பரிபூரணமாக நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர். போனத்தைத் தலையில் சுமந்து வரும் பெண்களுக்கு கோயிலுக்குள் நுழைய முன்னுரிமை அளிக்கப்படுகிறது.