

அயர்லாந்தின் புகழ்பெற்ற எழுத்தாளர்
புலம்பெயர்ந்த அயர்லாந்து படைப்பாளியும் 20-ம் நூற்றாண்டின் செல்வாக்குப் படைத்த எழுத்தாளர்களில் ஒருவருமான ஜேம்ஸ் ஜாய்ஸ் (James Joyce) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
அயர்லாந்தின் தலைநகரான டப்ளினில் ரத்கர் என்ற பகுதியில் பிறந்தார் (1882). இவரது முழுப்பெயர் ஜேம்ஸ் அகஸ்டின் அலோசியஸ் ஜாய்ஸ். தந்தை வர்த்தகர்.
* ஜேம்ஸ் உள்ளூரிலேயே ஆரம்பக்கல்வி கற்றார். அறிவுக்கூர்மை மிக்க மாணவராகத் திகழ்ந்தார். டப்ளின் பல்கலைக்கழகக் கல்லூரியில் பயின்றார். ஆங்கிலம், ஃபிரஞ்ச், இத்தாலி மற்றும் நார்வே மொழிகளைப் பயின்றார். தனது அபார நினைவாற்றல், இசைத் திறன், விளையாட்டுத் திறன்களால் ஆசிரியர்களைக் கவர்ந்தார்.
* 1900-ல், முதன்முதலாக ‘வென் வி டெட் அவேகன்’ என்ற நூலைப் பாராட்டி விமர்சனம் எழுதினார். இந்தச் சந்தர்ப்பத்தில் தொடர்ந்து நிறைய கட்டுரைகளும், இரண்டு நாடகங்களும் எழுதினார். கவிதைகளும் எழுதத் தொடங்கியிருந்தார். பட்டப்படிப்பு முடித்தவுடன் மருத்துவம் பயில்வதற்காக பாரீஸ் சென்றார்.
* மருத்துவம் பயில்வதில் தனக்கு நாட்டம் இல்லை என்பதைப் புரிந்துகொண்டு, மேற்கொண்டு தொடராமல் சொந்த ஊர் திரும்பினார். 1904-ம் ஆண்டில் ஐரோப்பாவில் குடியேறினார். இத்தாலி, பாரீஸ் மற்றும் சூரிச்சில் வாழ்ந்தார். இத்தாலியில் ட்ரியஸ்ட் நகரில் ஆங்கில ஆசிரியராகவும், 1906-ல் ரோம் நகரில் ஒரு வங்கியிலும் பணியாற்றினார். பின்னர் மீண்டும் ட்ரியஸ்ட் திரும்பி ஆசிரியர் வேலையைத் தொடர்ந்தார்.
* 1912-ல் ‘காஸ் ஃபிரம் ஏ பர்னர்’ என்ற கவிதையை எழுதி வெளியிட்டார். வாழ்க்கையில் பணம், புகழ் ஈட்ட, பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார். ஆனால், அனைத்தையும்விட ஒரு படைப்பாளியாகவே இவர் உயர்ந்தார். மெல்ல மெல்ல அந்நிலையில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
* முழு நேர எழுத்தாளராக மாறினார். இவரது நாவல்கள், கவிதைகள் மற்றும் சிறுகதைகள் லண்டனிலிருந்து வெளிவரும் ‘ஹாரியட் வேவர்ஸ் ஈகோயிஸ்ட்’ உள்ளிட்ட பிரபல இதழ்களில் தொடராக வெளிவந்தன.
* இவரது உளவியல் மற்றும் புனைக்கதைகள் அனைத்தின் கதைக் களங்களும், இவரது சொந்த நகரான டப்ளினையே மையமாகக் கொண்டிருந்தன. கதைகளுக்கான கருப்பொருட்களையும்கூட சொந்த ஊரே இவருக்கு வழங்கியது.
* கதை மாந்தர்களும் ஏறக்குறைய இவரது உறவினர்கள், எதிரிகள், நண்பர்களைச் சித்தரிப்பதாகவே அமைந்திருந்தன. புராணங்களையும் வரலாற்று நூல்களையும் படைத்தார். ஒரு குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்தவர் என்று இல்லாமல் ஐரோப்பா முழுவதிலும் வாழ்ந்தவர்.
* ‘பினகன்ஸ் வேக்’, ‘டப்ளினர்ஸ்’ உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்பு, ‘ஏ போட்ரியாட் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் ஆஸ் ஏ யங் மேன்’, ‘யூலிசிஸ்’, ‘ஸ்டீஃபன் ஹீரோ’ உள்ளிட்ட படைப்புகள் இவருக்கு உலகப் புகழை ஈட்டித்தந்தன. குறிப்பாக இவரது ‘ஏ போட்ரியாட் ஆஃப் தி ஆர்ட்டிஸ்ட் ஆஸ் ஏ யங் மேன்’ படைப்பு இவரது ‘மாஸ்டர் பீஸ்’ எனப் போற்றப்பட்டது.
* அயர்லாந்தின் மிகவும் செல்வாக்குப் படைத்த, கொண்டாடப்படும் எழுத்தாளர்களில் ஒருவராகப் போற்றப்பட்டார். சொந்த ஊரிலும் ஐரோப்பாவின் பல நாடுகளிலும், பல்வேறு பொது இடங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டன. நாவல், சிறுகதை, கவிதை, நாடகம், பத்திரிகை என முக்கிய படைப்புக் களங்களில் தடம் பதித்த, ஜேம்ஸ் ஜாய்ஸ் 1941-ம் ஆண்டு ஜனவரி மாதம் 59-வது வயதில் மறைந்தார்.