

முதல்வர் பதவியைப் பாதுகாத்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமிக்குச் சில யோசனைகள்
1. மு.க.ஸ்டாலினை எங்காவது பார்க்க நேர்ந்தால் தப்பித் தவறிக்கூட சிரித்துவிடக் கூடாது. அதற்கு பதில் கண்களைத் துருத்தி, நாக்கை நீட்டி, முகத்தை அகோரமாக்கி அவருக்குப் பழிப்பு காட்ட வேண்டும். இது சின்னம்மாவுக்கு தெரியவந்தால் நிச்சயம் பதவி நிரந்தரமாகும்.
2. பன்னீர் செல்வமாவது பட்ஜெட் கொண்டுவரும் பெட்டியில்தான் அம்மாவின் படத்தை ஒட்டினார். அவரை மீறி விசுவாசம் காட்ட விரும்பினால், சின்னம்மா உருவம் பொறித்த ஸ்டிக்கரை நெற்றியில் ஒட்டிக்கொள்ளலாம்.
3. தினமும் மன்னார்குடி குடும்ப உறுப்பினர்களின் வீடுகளில் தவறாமல் அட்டெண்டன்ஸ் கொடுக்க வேண்டும். அங்குள்ள நண்டு சிண்டுகளிடம்கூட ஆசிபெற்றால் உயர்வுகள் உறுதி.
4. எம்எல்ஏக்களை எக்காரணம் கொண்டும் தனியாக விட்டுவிடாதீர்கள். அதிலும், காற்று வாங்கக்கூட மெரினா பக்கம் அவர்கள் போய்விடாமல் கவனமாக இருக்க வேண்டும். திடீரென ஜெயலலிதா சமாதிக்குப் போய் அவர்கள் தியானப் புரட்சியில் ஈடுபடவோ, திடீர் பேட்டி கொடுக்கவோ வாய்ப்புள்ளது. அத்தகைய சந்தேக உறுப்பினர்களை கூவத்தூருக்கு பார்சல் செய்துவிடவும்.
5. முடிந்தால் சட்டப்பேரவை கூட்டத்தையே கூவத்தூர் ரிசார்ட்டில் கூட்ட முயலுங்கள். எதிர்க்கட்சிகள் வராவிட்டால் என்ன? உள்ளே நடந்தது ஒருத்தருக்கும் தெரிந்துவிடக் கூடாது. அதுதானே முக்கியம்!
6. முதுகை வளைத்துக் கும்பிடுவது ஓல்டு ஸ்டைல். இப்போது தரையை அடித்து சத்தியம் செய்வதுதான் டிரெண்ட். அதைப் பின்பற்றலாம். சத்தியம் செய்த பின், மறக்காமல் கையில் உள்ள தூசியைத் துடைத்துக்கொண்டு ஏதேனும் மந்திரங்கள் தெரிந்தால் முணுமுணுக்கலாம். மந்திரம் தெரியாவிட்டால், மனசுக்குள் ஒண்ணாம் வாய்ப்பாடுகூட சொல்லலாம்.
7. சென்னை மன்னை. சொல்லில் ஏறக் குறைய பெரிய வித்தியாசம் இல்லை என்பதால், தலைநகரை மன்னைக்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கலாம்.