

காந்திஜியின் வாழ்க்கையில் இருந்து உந்துதல் பெற்று உருவான குறும்படம் இது. இல்லாமை, வறுமை ஆகியவற்றை எதிர்த்து போராடவேண்டியது எவ்வளவு முக்கியமானதோ அதைவிட முக்கியமானது அவற்றை நேர்மையான வழியில் எதிர்கொள்வது என்பதுதான் இக்குறும்படம் சொல்லும் செய்தி.
இந்த காலத்திற்கு சற்றும் பொருந்தாத கருத்தாயிற்றே என்ன சார் இது? என்றுதானே கேட்கத் தோன்றுகிறது. அவசரப்படாதீர்கள். எந்த காலத்திற்கும் பொருந்தும் கருத்துக்கள் என்று சில இருக்கத்தான் செய்கின்றன. அது நவீன வாழ்க்கையில் உருவான நூதன மோசடிகளை விட அழகானவை. வலிமையானவை. அதிலும் குழந்தைகள் மனதில் தோன்றும் உயர்ந்த எண்ணங்கள் டொனால்ட் ட்ரம்ப் கட்ட நினைக்கும் தடுப்புச் சுவர்களையும் உடைத்தெறியும் வலிமைமிக்கவை.
பணம் பெருகப் பெருக நாம் ஒன்றும் ஒருநாளைக்கு பத்துவேளையாக சாப்பிடப் போவதில்லை. இறக்கும்போது சேர்த்துவைத்த எந்த கார்டனையும் எஸ்டேட்களையும் கூடவே எடுத்துச் சென்றுவிட போவதுமில்லை.
மத நல்லிணக்கம், மனிதநேயம், மக்கள் ஒற்றுமை என்றெல்லாம் பேசிவிட்டு மறுநாளே அதற்கு உல்டாவாக நடப்பதுதான் இன்றைய நாட்டு நடப்பு என்பது சிறிய விபத்துதான். சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக நடந்துகொள்ளும் அரசியல்வாதிகளிடத்தில் மக்கள் எப்போதும் கவனமாக இருப்பார்கள் என்பதுதான் உலக நியதி.
ஒரு டன் அளவுக்கு போதனை செய்வதை விட ஒரு அவுன்ஸ் அளவு பின்பற்றுதலே சிறந்தது என்றார் மகாத்மா காந்திஜி. இன்றைக்கும் உலகமெல்லாம் நேசிக்கும் ஒரே தலைவராக காந்திஜி விளங்குவதற்கு அவர் சாதனைகளைவிட சோதனைகளும் வாழ்க்கையும்தான் ஒரு முக்கிய காரணம் என்பதை அவரது வரலாறு சொல்கிறது.
ஒரு சிறு சம்பவம். காந்தியும் அவருக்கு உதவியாயிருந்த மகாதேவ் தேசாயும் மற்றும் சில நண்பர்களும் கத்தியவார் எனும் ஊருக்கு அங்கு நடைபெறும் காங்கிரஸ் மாநாட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். தன்னோடு தொடர்வண்டியில் வந்துகொண்டிருந்த தனது உதவியாளரிடம் இன்னும் எத்தனை டிக்கட்டுகள் கைவசம் உள்ளது எனக் கேட்க அவர் இன்னும் நிறைய உள்ளதாகக் கூறினார். ஆனால் அதன்பிறகு மோர்பி நகரில் வண்டிநிற்க யாருமே ஏறக்காணோம். அந்த டிக்கட்கள் அப்படியே இருந்தன. ''மோர்பி நகர் நண்பர்கள் நிச்சயம் வருகிறார்களா இல்லையா என சரியாக விசாரித்துக்கொண்டு இந்த டிக்கட்களை வாங்கியிருக்கலாம் இப்படி மக்கள் பணம் வீணாகிவிட்டதே'' என காந்தி வருந்தினாராம். சிறு சம்பவம்தான். இழப்பும் சிறியதுதான். ஆனால் ''மக்கள் பணம் ஆயிற்றே'' என்று கவலைப்படும் அந்த நேர்மை எவ்வளவு பெரியது.
இந்த சின்னஞ்சிறு படத்தில் வரும் சிறுவன் உண்மை, நேர்மை என்று நடந்துகொள்வது காந்திஜியின் உந்துதலையும் தாண்டி தற்செயலானதாகவும் இருக்கலாம். ஆனால் குறும்பட இயக்குநர் அண்டாலிப் அக்தர் இப்படத்தை இயக்க காந்தி உந்துதலாயிருந்திருக்கிறார் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. நாலரை நிமிட குறும்படத்தில் நல்ல செய்தியை சொல்லும் வல்லமை அக்தரின் தேர்ந்த இயக்கத்தில் வெளிப்பட்டுள்ளது.
<br /><br /></p>