Published : 11 Jun 2016 05:48 PM
Last Updated : 11 Jun 2016 05:48 PM

யூடியூப் பகிர்வு: குடிசைப்பகுதியில் மாற்றத்துக்கான முகம்!

நிமிர்ந்து நிற்கும் மாநகர் டெல்லியின் ஓர் ஓரத்தில் அமைந்திருக்கிறது அந்த குடிசைப்பகுதி. கோண்டா நகரத்தின் அருகில் இருக்கும் அம்பேத்கர் பஸ்தி, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபட்ட அம்பேத்கரின் பெயராலேயே அமைந்திருக்கிறது.

ஆர்.கே.புரத்தின் பின்புறத்தில், சுமார் 2,500 குடும்பங்களோடு மறைந்திருக்கிறது இந்தப்பகுதி. மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கும் இங்கு பொதுக்கழிப்பறையே 2015 -ல் தான் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது.

அக்டோபர் 2015 -ம் வாக்கில் இங்கு ஓர் உடற்பயிற்சி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சரி அதனால் என்ன என்று கேட்கிறீர்களா?

உடற்பயிற்சி நிலையம் குடிசை வாழ் மக்களின் இயக்கத்தையே மாற்றி அமைத்திருக்கிறது. முன்காலங்களில் இயல்பாகவே இப்பகுதியில் கல்வியைக் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருந்திருக்கிறது. அங்கு வசிக்கும் இளைஞர்கள் தங்கள் ஓய்வு நேரங்களில் தேவையில்லாத செயல்களில் ஈடுபட, அதை மாற்ற முயன்றிருக்கிறது இந்த ஜிம்.

ஆண்களும் பெண்களும் வேறு வேறு நேரங்களில் பயன்படுத்துகிற விதத்தில் ஜிம் அமைக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பு.

இது குறித்து பேசிய ஜிம் உரிமையாளர் ராமன் சிங், "பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்போடு கூடிய உடற்பயிற்சிகளை வழங்கி வருகிறோம். ஆண்களுக்கான கதையே வேறு. அம்பேத்கர் பஸ்தியில் வசிக்கும் ஆண்களை போதை மருந்துப் பொருட்களிடமிருந்து கவனத்தை திருப்ப முயல்கிறோம்.

பெயர்களே இல்லாத தெருக்களில் வசித்து வந்தவர்கள், பல்வேறு சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் கஞ்சாவையும், மதுவையும் பயன்படுத்துவது சர்வசாதாரணமாக புழக்கத்தில் இருந்தது. அதனால் நாங்கள் பயனுள்ள நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று முடிவு செய்தோம். உடனே உடற்பயிற்சி நிலையத்தை ஆரம்பிக்க அவர்கள் அனைவரும் இப்போது உடற்பயிற்சியில் பிஸியாக இருக்கிறார்கள்" என்கிறவரின் குரலில் உற்சாகமும், நம்பிக்கையும் நிறைந்து வழிகிறது.

காணொளியைக் காண