Last Updated : 11 Sep, 2016 09:09 AM

 

Published : 11 Sep 2016 09:09 AM
Last Updated : 11 Sep 2016 09:09 AM

ஹெல்த் கலாட்டா: முடிஞ்சா இவன புடி

கைதட்டல் அமர்க்களமாக இருந்தது.

பத்து பேருக்கு நடுவே ஒரு பெரியவர். வெட்கத்தில் நெளிந்தார். பலகீனமான சிரிப்பு. தள்ளாத வயதிலும் ‘ஹெல்த்’ மீது அவருக்கிருந்த தாகம்தான் இந்த அமர்க்களத்துக்குக் காரணம்.

‘ஒரு நிமிஷம். எல்லாரும் நல்லா கவனிங்க..’

‘ஆல் இஸ் வெல்’ கிளப் நடத்தும் பல்கிவாலா அனைவரையும் ஈர்த்தார்.

‘சார்.. பேரு கிள்ளி.. 84 வயசு. இப்பவும் அவருக்கு துள்ளித் திரியணும்னு ஆச. ‘மில்க்கி கலக்கி’ பத்தி கேள்விப்பட்டு வந்துருக்கார்.. நம்ம கிளப்ல சேந்து நாலு நாள்தான் ஆகுது.. அவரோட எக்ஸ்பீரியன்சு பத்தி அவரே சொன்னா நல்லாருக்கும்..’

பல்கிவாலா இழுத்துவிட.. கொஞ்சம் முன்னே தள்ளி வந்த கிள்ளி பம்மியபடி பேசினார்-

குல்பி ஐஸ் வியாபாரம் பாக்குறேன்.. போன வாரம் தி.நகர் பக்கமா ஐஸ் வித்துட்ருந்தப்ப, ஒரு தம்பி வந்துச்சு.. என் னைய மட்டும் விட்டுட்டு, போறவன் வர்றவனுக்லாம் பிட் நோட்டிசு குடுத்துச்சு.. வலியப் போயி நானா அத வாங்குனேன்..

‘பத்தே நாள்ல உங்க வெயிட்ட குறைக்கலாம்.. கூட்டலாம்’னு அந்த நோட்டிசுல போட்ருந்துச்சு..

‘வெவரம் சொல்லுப்பா.. ஏடாகூடமா எதுனா செய்வீங்களா?’னு கேட்டேன்.

‘கிளப்புக்கு வாங்க சார்.. சத்துப் பவுடர பால்ல போட்டு கலக்கிக் குடுப் போம். அப்புறமா நெறய தண்ணி குடிக்கச் சொல்லுவோம். தண்ணிக்கு தன்னால ஒடம்பு கரையும்’னு சொன்னாப்ல..

காலங்காத்தாலயே கறியக் கடிக்குற குடும்பம். பத்து வயசுலியே ஒடம்பு பந்து கணக்கா உருண்டுக்கிருச்சு.. சாப்பாட்டுல எந்த கொறயும் வச்சதில்ல.. நடுராத்திரில உசுப்பி எதயாச்சும் உருட்டிக் குடுத்தா இம்மி சத்தம் கேக்காம சாப்ட்ருவேன். இப்பம் நூறு கிலோ சொச்சம் இருக்கேன். எம்பதுக்கு மேல வயசாயிருச்சே.. பத்து நாள்ல ஒரு பத்து கிலோ கொறஞ்சா, நம்ம பாடியும் ஸ்லிம்மாயிடும்.. ஐஸ் வண்டியும் வெரசா ஓடுமேனு பாத்தேன்..

குல்பி வித்த காசக் குடுத்து கிளப்ல மெம்பராயிட்டேன்.

சுத்தி நின்ன பத்துப் பேரயும் ஒரு ரவுண்டு திரும்பிப் பாத்தார் கிள்ளி.

கிளப்ல திரியுற கூட்டம்லாம் மதி மயங்கி கத கேக்கிற கூட்டமாத்தான் இருக்கும்போலனு தோணுச்சு.

அதுக்குள்ள பல்கிவாலாவுக்கு பொறுக்கல.

‘கிள்ளி சார்.. கிளப்புக்கு வந்த கத இருக்கட்டும்.. மில்க்கி கலக்கி குடிச்ச எக்ஸ்பீரியன்சு பத்தி கேக்கத்தான் அவங்கள்லாம் ஆர்வமா இருக்காங்க.. இங்க சேந்தது, நாம பேசுனது எல்லாத்தப் பத்தியும் சொல்லுங்க.’

குல்பி விக்கிற கிள்ளிக்கு பல்கி வாலாவோட நோக்கம் புரிஞ்சுருச்சு.

‘ஆகா.. நம்மள வச்சு பத்து பேருகிட்ட இந்த பல்கி பஜன பண்ணப் பாக்குதே. ம்ம்.. கட்டெறும்புகிட்ட சர்க்கரை கணக்கா சிக்கிட்டோம். அது உருட்டத்தான செய்யும்’னு மனச தேத்திக்கிட்டு பேச்சை தொடர்ந்தார் -

பல்கி சார வந்து பாத்தேன்.. என்னைய மிஷின்ல ஏத்தி வெயிட் பாத்தார்.

‘அய்யோ.. நூறு கிலோ முன்னூறு கிராம் இருக்கீங்க சார்’னு பதறுனாரு.

அவரு மூஞ்சில அப்படி ஒரு கலவரம். இப்டி அக்கற இல்லாம சத போட்டுட்டமேனு எனக்குள்ள ஒரு குத்த உணர்ச்சி.

ரூமுக்குள்ள கூட்டிட்டுப் போயி.. ‘என்ன ச்சார் இப்டி இருக்கீங்க.. நாள் பூராம் அலஞ்சு திரிஞ்சு ஐஸ் விக்கிறீங்க.. ஒழைக்கிற ஒடம்ப இப்டி கன்னாபின்னானு கலச்சு வச்சுருக் கீங்களே’னு கேட்டுக்கிட்டே அவரோட அசிஸ்டண்ட கூப்ட்டாரு.

‘தம்பி.. சாருக்கு மூலிகை டீ கொண்டா.’

ஒரு பெரிய பேப்பர் கப் நெறயா கம்மி சூட்டுல கட்டஞ்சாயா மாதிரி ஒண்ண கொண்டாந்து அந்த அசிஸ்டெண்ட் வச்சாரு.

‘கொஞ்சங் கொஞ்சமா கா வாய், அர வாயா குடிச்சிக்கிட்டே பேசுங்க சார்.. டெய்லி என்ன சாப்டுவீங்க.. எம்புட்டு சாப்டுவீங்க..’னு பல்கி சார் கேட்டார்.

‘கவுச்சி இல்லாம சாப்புட மாட்டேன்.. சாப்பிடறதுக்கு காலநேரம் பாக்க மாட்டேன்..’னு சுருக்கமா சொன்னேன்.

‘இப்பவரைக்கும் இருந்தத மறந்து ருங்க.. இனிமே எம்பேச்ச மட்டுந்தான் கேக்கணும்’னாரு பல்கி. அவரு உரிமயா எங்கிட்ட கேட்டது ரொம்பப் புடிச்சிருந்துச்சு..

‘காலைல ஆறு மணிக்கு வாங்க.. கொஞ்ச நேரம் ஒடம்ப அப்டி இப்டினு ஆட்டி அசைக்கணும். அப்டமன் ஷேக்கிங். அதுக்குனு ஒரு டிரெய்னர் வச்சுருக்கோம். பெரிய கப்ல மூலிகை டீ தருவோம். அத குடிச்ச அரை மணி நேரத்துல பால்ல சத்து பவுடர், புரோட்டின் பவுடர் கலந்து குடிக்கக் குடுப்போம். இதே மாதிரி வீட்லயும் ராத்திரிக்கு குடிக்கணும். வீணாப்போன சோறு, கொழம்பு, காய்லர்ந்து உங்களுக்கு விடுதலை கெடச்சுரும். சரியா?’ பல்கி சார் படபடன்னு சொன்னார்.

அவரு சொன்ன மாதிரியே நாலு நாளா கட்டஞ்சாயா, மில்க்கி கலக்கி, தண்ணிலதான் ஓடிட்ருக்கேன்..

லேசாக தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் கிள்ளி. ஆனா, பல்கி பரபரன்னு இருந்தார்.

‘கிள்ளி சார்.. இந்த டயட்டோட எஃபெக்ட் என்னனு சொல்லுங்க.. எல்லாரும் ரொம்ப ஆர்வமா இருக்காங்க பாருங்க.’

கூட்டங்கலையாம பல்கி பாத்துக்கிட்ட தால, எம்பேச்சு நிக்காம போச்சு. ‘நாலாவது நாள் வெயிட் பாத்தேன்.. 900 கிராம் கொறஞ்சுருந்துச்சு.’

கிள்ளி சொல்லி முடிப்பதற்குள்.. பல்கி பாய்ந்தார்.

‘எல்லாரும் நல்லா கைதட்டுங்க.. 900 கிராம் கொறஞ்சுருக்கார். நாலே நாள்ல 84 வயசுல இருக்குற ஒருத்தர், இவ்ளோ வெயிட் குறைச்சுக்க முடியுதுன்னா, மத்தவங்க இன்னும் நம்பிக்கையா இந்த மில்க்கி கலக்கி குடிக்கலாம்னு புரிஞ்சுக்கிட்டீங்களா!’

மொத்தக் கூட்டமும் வலியச் சிரித்தது.. வலுக்க கைதட்டியது.

கிள்ளி தொடர்ந்தார்.. ‘ஆனா.. மொத நாளே மூணு தரம் லூஸ் மோஷன் ஆயிடுச்சு.’

மீண்டும் பல்கி பாய்ச்சல் -

‘கிள்ளி சாருக்கு மொத நாள் மட்டுமில்ல.. நாலு நாளும் லூஸ் மோஷன் ஆயிருக்கு. எல்லாரும் ஜோரா கைதட்டுங்க.’

மொத்தக் கூட்டமும் கைதட்டி ஆர்ப்பரித்தது.

‘அடச்சே.. லூஸ் மோஷனுக்குலாமா கைதட்டுவீங்க?’

கிள்ளிக்கு விளங்கவில்லை.

பல்கி விளக்கினார்.

‘கிள்ளி சார். ஒங்க ஒடம்புல இருக்குற கெட்ட சக்திய மொதல்ல கரச்சு வெளியேத்துறதுதான் நம்ம டயட்டோட சக்சஸ்.. லூஸ் மோஷன் ஆனா நீங்க பாஸு.. கான்ஸ்டிபேஷன் ஆனா கஷ்டம்.. அதுக்கு வேற டயட்டு.’

கிள்ளிய சாட்சியா வச்சு பத்து பேர இம்ப்ரஸ் பண்ணினதுல பல்கிக்கு படு குஷி.

ஆளாளுக்கு கேள்வி கேக்க ஆரமிச்சாங்க..

‘பல்கி சார்.. எனக்கு பாடிலாம் ஷேப்பாத்தான் இருக்கு.. டம்மிதான் குப்புறப் படுக்க விடமாட்டேங்குது.. எதாச்சும் செஞ்சாகணுமே.’

‘மதி சார்.. டோண்ட் ஒர்ரி. நம்ம டயட்டோட ஸ்பெஷாலிட்டி.. ஒடம்புல அங்கங்க இருக்குற கொழுப்ப கரச்சுட்டு அப்புறமாத்தான் டம்மிக்கு வரும்.. நீங்க எஸ்ட்ராவா லேகியம் எடுக்க வேண்டியிருக்கும்.’

‘லேகியமா?’

‘ஆமாங்க சார்.. மில்க் செய்யுற வேலைய கொஞ்சம் ஸ்பீட்-அப் பண்ணி வெயிட் லாஸ், ஃபேட் லாஸ்னு எக்கச்சக்க வேலய பாக்கணுமே. அஞ்சு டைப் லேகியம் நம்மகிட்ட இருக்கு.’

பல்கி பேச்சில் பாயாஸம் இனித்தது. மெம்பர்ஸ் உற்சாகமானார்கள்.

‘பல்கி சார்.. எனக்கு மேரேஜ் பிக்ஸ் ஆயிருக்கு.. எனக்கு என்னமாதிரி டயட் சஜஸ்ட் பண்றீங்க?’

‘மில்க்கி கலக்கிலயே சூப்பர் டர்போ கலக்கின்னு ஒரு டயட் இருக்கு. வித் லேகியம். அத டிரை பண்ணுங்க.. மூணே வாரத்துல ஃபேஸ்ல கலர் சேஞ்ச் ஆயிடும். வெயிட் லாஸோட சேத்து சிகப்பழகுக்கும் கேரண்டி.. தாம்பத்யமும் இனிக்கும்.’

‘நிஜம்ம்ம்மாவா சார்?’

விழிகள் விரித்து வியந்த மெம்பரைப் பார்த்து தம்ப் உயர்த்திக் காட்டினார் பல்கி.

‘டேய்.. இதே கண்டிஷன்ல சாரை ஒரு போட்டோ எடுத்து ஃபைல்ல வச்சுக்க.. மூணு வாரம் கழிச்சு எடுக்குற போட்டோவ பாத்து அவரே அசந்து போகணும்.’

குறுக்கே பாய்ந்த அசிஸ்டெண்ட், மொபைல் கேமராவில் போட்டோ எடுத்தார்.

அதுக்குள்ள அடுத்த மெம்பர் கேட்டார் -

‘பல்கி சார்.. மில்க்கி கலக்கி குடிச்சுட்டு

நாலு லிட்டர் தண்ணி குடிக்கச் சொல்

றீங்க.. அதான் கொஞ்சங் கஷ்டமாருக்கு.. பாத்ரூமுக்கு அலைய முடியல.. ஆபீசுல ஒருமாதிரியா பாக்காங்க.’

‘அதப் பத்திலாம் கவலப்படாதீங்க சேகர்.. ஒங்க ரிசல்ட்ட பாத்துட்டு அவங்க தன்னால வழிக்கு வருவாங்க.. அவங்களயும் அப்டியே இங்க கூட்டியாங்க.’

‘அவங்களயும் பாத்ரூமுக்கு அலைய வெக்கலாமா சார்?’

வெள்ளந்தியான கேள்விக்கு, பல்கியே சிரித்துவிட்டார்.

‘எல்லாரும் இப்டி சிரிச்சு பேசிக் கிட்ருந்தாலே நோய் ஓடிப்போய்டும். நம்ம டயட்ட புடிச்சுக்கிட்டீங்கன்னா வயசு கொறஞ்சு போகும்.’

‘பல்கி சார்.. வயசு எப்டி சார் கொறயும்?’

‘அச்சச்சோ.. உங்களுக்கு மெட்டபாலிக் ஏஜ் பத்தின நாலெட்ஜ் இல்லைனு நெனய்க்கிறேன்.’

பல்கி இன்னும் எவ்ளோ பேசுவா ரோங்கிற அச்சத்துல மெம்பருங்களுக்கு கொட்டாவியே வந்துருச்சு.

அந்த நேரத்துல, சரசரன்னு எண்ட்ரி குடுத்தார் சக்தி. அவரும் அந்த கிளப்ல பார்ட்னர்.

‘குட்மானிங் சார்.. குட்மானிங்..’

திடீரென பல்கியும் அவருடைய அசிஸ்டெண்டும் போட்ட கோரஸில், உள்ளே புகுந்த கூட்டம் முகம் மலர்ந்து நிமிர்ந்தது.

கனத்த சரீரத்தோட நாலஞ்சு பேர்.. நடந்து நடந்து நஞ்சுபோன ஷூவோடயே கிளப்புக்குள்ள நொழஞ்சுட்டாங்க..

அம்புட்டு பேரும் காலங்காத்தால நடேசன் பார்க்குல வாக்கிங் போய்க்கிட்ருந்தவங்களாம்.. பனியன்லாம் தொப்புதொப்னு நனஞ்சிருந்துச்சு..

வெயிட் பாக்குற ஜனம் பாதி, எத்தத் தின்னா பித்தம் தெளியும்னு அலையுற ஜனம் மீதி.. அதுல நாலஞ்சு பேரு சக்தி விரிச்ச வலைல விழுந்துட்டாங்கபோல. அவங்களுக்கு அட்டையக் குடுத்து அப்டியே அணைக்கட்டி தள்ளிட்டு வந்துட்டார்

சக்தி. அதோட அவரு பார்ட்டு ஓவர்.

இனி பாயஸத்தக் கிண்டவேண்டியது பல்கியோட வேலை.

‘கிள்ளி சார்.. கொஞ்சம் இப்டி வாங்க

சார்.. ஒங்க எக்ஸ்பீரியன்ச கேக்க இவங்கள்லாம் ரொம்ப ஆர்வமா இருக்காங்க.’

‘அடங்கொப்புரான.. திரும்பவும் மொதல்லர்ந்தா..’

‘முடிஞ்சா இவனப்புடி’

துள்ளிக் குதித்து கிளப்பை விட்டு ஓடினார் கிள்ளி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x