

‘பாரத ரத்னா’ பெற்ற அசாம் முதல்வர்
விடுதலைப் போராட்ட வீரரும், நவீன அசாமை உருவாக்கியவருமான ‘பாரத ரத்னா’ கோபிநாத் பர்தோலாய் (Gopinath Bordoloi) பிறந்த தினம் இன்று (ஜூன் 10). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* அசாம் மாநிலம் நவ்காவ் மாவட்டத்தில் ரோஹா என்ற இடத்தில் (1890) பிறந்தார். அதே ஊரில் ஆரம்பக்கல்வி பெற்றார். 12 வயதில் தாயை இழந்தார். அறிவுக்கூர்மை மிக்க மாணவரான இவர், இன்டர்மீடியட் தேர்வில் கல்லூரியில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றார்.
* கல்கத்தா பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெற்றார். குவாஹாட்டியில் சட்டம் பயின்றார். பள்ளி தலைமை ஆசிரியராக சிறிதுகாலம் பணியாற்றினார். பின்னர் வக்கீல் தொழி லைத் தொடங்கினார். 1920-ல் லாலா லஜபதிராய் தலைமையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்ற பிறகு, அரசியலில் ஈடுபாடு ஏற்பட்டது.
* காங்கிரஸ் கட்சித் தொண்டராக 1922-ல் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். வக்கீல் தொழிலைத் துறந்து, ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றார். அசாம் முழுவதும் சென்று, அந்நியப் பொருட்களைப் புறக்கணிக்குமாறும், கதர் ஆடையைப் பயன்படுத்துமாறும், ஒத்துழையாமை இயக்கத்துக்கு முழு ஆதரவு வழங்குமாறும் பிரச்சாரம் செய்தார்.
* சிறிதுகாலம் மீண்டும் வக்கீல் தொழிலைக் கவனித்தார். காந்திஜி உள்ளிட்ட தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு அவர்களோடு இணைந்து பணியாற்றினார். தனிநபர் சத்தியாகிரத்தில் ஈடுபட்டதால் ஓராண்டு சிறைத் தண்டனை பெற்றார். அரசியலில் இருந்து சற்று விலகியிருந்து, சமூக மேம்பாட்டுப் பணிகளில் கவனம் செலுத்தினார்.
* குவாஹாட்டி நகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதில் முனைப்புடன் ஈடுபட்டார். இவரது முயற்சியால் குவா ஹாட்டி பல்கலைக்கழகம், அசாம் மருத்துவக் கல்லூரி மற்றும் பல தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. ஏராளமான தனியார் பள்ளிகள், கல்லூரிகள் தொடங்குவதற்கும் உதவினார்.
* அசாம் முதல்வராக 1938-ல் பதவி ஏற்றார். முதல் காங்கிரஸ் அரசு அங்கு அமைந்தது. இவரது நிர்வாகத் திறன், அரசியல் நிபுணத்துவம், நேர்மை, அறிவுக்கூர்மை, தேசபக்தி, அனைவரிடமும் நேசத்துடன் பழகும் தன்மை ஆகிய நற்பண்புகளால் நாடு முழுவதும் பிரபலமானார்.
* நிலவரியை ரத்து செய்தார். போதைப் பொருட்களைத் தடை செய்தார். 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கேற்றதால் மீண்டும் சிறைத் தண்டனை பெற்றார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, கிழக்கு பாகிஸ்தானுடன் இணையாமல் இந்தியாவின் ஒரு பகுதியாகவே அசாம் நீடிக்கும் என்பதை, சர்தார் வல்லபாய் படேலுடன் இணைந்து உறுதி செய்தார்.
* இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின்போது, கிழக்கு பாகிஸ்தானில் இருந்து தப்பி வந்த அகதிகளுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்தார். அப்பகுதியில் மத நல்லிணக்கம், அமைதியை ஏற்படுத்த கடுமையாக உழைத்தார்.
* அசாம் தொழில் முன்னேற்றத்துக்காகப் பல திட்டங்களை வகுத்து செயல்படுத்தினார். அனைத்து துறைகளிலும் அசாமை முன் னேற்றுவதை தன் வாழ்நாள் இலக்காகக் கொண்டு செயல்பட்டார். சிறையில் இருந்தபோது, ‘புத்ததேவ்’, ‘ராமச்சந்திரா’, ‘அன்னசக்தி யோக்’ உள்ளிட்ட நூல்களை எழுதினார்.
* ‘அசாம் சிங்கம்’, ‘லோகப்ரிய’ என்றெல்லாம் கொண்டாடப்பட்ட கோபிநாத் பர்தோலாய் 60-வது வயதில் (1950) மறைந்தார். அசாம் முன்னேற்றத்துக்கான இவரது பங்களிப்புகளைப் போற்றும் விதமாக, இவரது மறைவுக்குப் பிறகு 1999-ல் இவருக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்கப்பட்டது.