Published : 25 May 2017 10:42 am

Updated : 28 Jun 2017 20:08 pm

 

Published : 25 May 2017 10:42 AM
Last Updated : 28 Jun 2017 08:08 PM

இதுதான் நான் 77: சினிமாவுக்கு ஏது மொழி!

77

எப்படி ஜாலியா படம் பார்க்க வர்றாங்களோ, அதே மாதிரி படம் பார்த்துட்டு ஜாலியா வீட்டுக்குத் திரும்பணுங்கிற மாதிரி என் படங்கள் இருக்கணும்னு விரும்புவேன். ‘‘நீங்க சீரியஸான படமும் பண்ணணும்’’னு சில பேர் கேட்குறப்ப, அவங்களிடம், ‘‘சீரியஸான படங்களெல்லாம் திங்கள் கிழமை மாதிரி.

அதாவது, ஹாலிடே முடிஞ்சு ஆபீஸ், ஸ்கூல்னு பரபரப்பா தொடங்குற நாள் மாதிரி. ஜாலியான படங்கள் எல்லாம் ஞாயித்துக்கிழமை மாதிரி. ரெண்டு நாட்களுமே நமக்கு முக்கியம்தான். இருந்தாலும், ஞாயித்துக்கிழமைன்னா ரொம்ப ஜாலியா இருப்போமே. அந்த மாதிரியே என் படங்கள் இருக்கட்டுமேன்னு… சிரிச்சிட்டே சொல்வென். சீரியஸான படம் பண்ணணும்னு கண்டிப்பா எனக்கும் ஆசையிருக்கு. அதுக்கு பணம் போட்டு படம் தயாரிக்கிறவங்களும் ஒப்புக்கணும்.


அதே மாதிரி நான் ஜாலியான படங்கள் மட்டுமில்லை; சீரியஸான படங்களும் பார்ப்பேன். அதுவும் இங்கிலீஷ்ல வந்த சீரியஸான படங்கள் நிறைய பார்த்திருக்கேன். ஆரம்பத்தில் அர்த்தம் தெரியாமத்தான் அந்தப் படங்களைப் பார்த்திருக்கேன். சில படங்கள் புரியும். சில படங்களை மொழி தெரியாமப் பார்க்குறப்ப, நான் ஒரு மாதிரியா அந்தக் கதையை புரிஞ்சிப்பேன். இப்போ இங்கிலீஷ் புரிஞ்ச பிறகு, திரும்பவும் அதே படத்தைப் பார்க்கிறப்ப வேற கதையா இருக்கும்.

இங்கிலீஷ் படங்களைப் பற்றி பேசுறப்ப, இன்னொரு விஷயம் நினைவுக்கு வருது. இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல படிச்சாலும் எப்பவும் ஸ்கூல்ல தமிழ்லதான் பேசிப்போம். அப்படியே ஃபிரெண்ட்ஸுங்க யாராவது ஒருத்தன், ரெண்டு பேர் இங்கிலீஷ்ல பேசினாலும், ‘டேய் பீட்டர் விடுறியா..?’ன்னு கிண்டல் அடிப்போம்.

ஒருமுறை அப்பாவோடு ஷூட்டிங்ல இருந்தப்ப, ஒரு பெரிய நடிகர் பக்கத்தில் இருந்தவர்கிட்ட என்னோட அப்பாவை ‘ஹீ இஸ் பிக் ஷாட்…’ன்னு அறிமுகம் செஞ்சார். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு அப்பா என்னிடம், ‘பிக் ஷாட்னா என்னடா பிரபு?’ன்னு கேட்டார். ‘அதுவா அப்புஜி! நீங்க பாட்டு கொரியோகிராஃப் பண்றப்ப கட் ஷாட் இல்லாமல் லெங்த் ஷாட்டா வெக்கிறீங்கள்ள... அதனாலதான் உங்களை பிக் ஷாட்டுனு சொல்லிப் பாராட்டுறாங்கன்னு சொன்னேன். ‘ஓ… அப்படியாடா!’ன்னு அப்பா கேட்டுக்கிட்டார்.

ரெண்டு நாட்களுக்கு அப்புறம் ஒரு மத்தியான நேரத்தில் படப்பிடிப்புல ஆடிட்டிருந்தப்போ, அப்பா என்னை முறைச்சிப் பார்த்துட்டே இருந்தார். ‘நாம ஒழுங்காத்தானே ஆடுறோம்; ஏன் அப்பா முறைக்கிறார்’னு நினைச்சிக்கிட்டே, பக்கத்தில் ஆடுனவங்கள்ட்ட, ‘கரெக்ட் மூவ்மெண்ட்தானே!’ன்னு கேட்டேன். அவங்க கரெக்ட்ன்னு சொன்னாங்க. திரும்பவும் அப்பா என்னைப் பார்த்து முறைச்சார். ஆடி முடிச்சப் பிறகு என்னைக் கூப்பிட்டு ‘என்னடா நீ ஸ்கூல்ல இங்கிலீஷ் படிச்சே… வேஸ்ட்’ன்னு திட்டுனார்.

‘நான் எப்போ, எங்கே இங்கிலீஷ் பேசினேன்... புரியலையேன்னு’ பேசாம அவர் முன்னாடி நின்னுட்டிருந்தேன். அப்புறம் அவரே, ‘டேய்… பிக் ஷாட்னா பெரிய ஆளுன்னு அர்த்தம். இப்போதான் இவர்கிட்ட கேட்டேன்னு, பக்கத்தில் இருக்கிறவரை கை காட்டிச் சொன்னார். எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. ஒரு மாதிரியா இருந்தது. ‘போடா…’ன்னு அதட்டி அனுப்பிட்டார். அங்கிருந்து ஒரே ஓட்டம்தான். அப்போ எனக்கு அவ்வளவுதான் இங்கிலீஷ்ல அறிவு!

இதை நண்பர்கள்ட்ட சொன்னேன். அவங்க விழுந்து விழுந்து சிரிச்சானுங்க. பத்து வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும்கூட சொல்லி சொல்லி கலாட்டா பண்ணியிருக்காங்க. இப்போ விட்டுடாங்க.

டான்ஸ் மாஸ்டரா தெலுங்கு படங்கள் பண்ண ஆரம்பிக்கும்போது எனக்கு தெலுங்கு தெரியாது. அங்கே போய் ரெண்டு, மூணு வருஷத்துக்கு அப்புறம்தான் கத்துக்கிட்டேன். அதுக்கு முன்னாடி அப்பா தெலுங்கு படங்கள் பண்ணும்போது, ‘இந்த பாட்டை கம்போஸ் பண்ணி வைங்க?’ன்னு அசிஸ்டெண்ட்ஸ் எங்கக்கிட்ட சொல்லிட்டுப் போவார். நாங்க அதுக்கு பயங்கரமா டான்ஸ் ஆடி ஸ்டெப்ஸ் போட்டு வைப்போம். வந்து பார்த்துட்டு ‘பாட்டோட மீனிங் என்ன இருக்கு. நீங்க என்ன ஆடியிருக்கீங்க?’ன்னு திட்டுவார். உதாரணத்துக்கு ஒரு பாட்டுல, ‘அம்மா உன் கையாள சாப்பாடு போடு உயிர் வாழ்வேன்’னு வந்தாலும் டான்ஸ்தான். ‘தெய்வமே உன் கருணையை என் மேல காட்டுப்பா’ன்னு சொன்னாலும் அதுக்கும் பயங்கர டான்ஸ்தான். காதலன் - காதலி பாட்டு பாடுறதுக்கும் செம டான்ஸ்தான். மீனிங்கே பார்க்குறது இல்லை. என்ன பண்றது, அப்போ நம்ம ஏஜ்… நம்ம அறிவு அப்படி!

எப்பவுமே படத்துல வர்ற வசனம் சிம்புளா ஈஸியா இருக்கும். ஆனா, பாட்டுல வார்த்தைங்க அப்படி இருக்காது. உவமை, ஒப்பீடு, சந்தம்னு ஒரு பாட்டுக்குள்ள நிறைய விஷயம் இருக்கே. அதெல்லாம் எதுவுமே அந்த நேரத்துல பார்க்காம ‘பீட்’டுக்கு என்ன தோணுதோ, அதை அப்படியே ஆடிடுவோம். அப்பா சொன்னதுக்கு அப்பறம்தான் பாட்டுக்கு அர்த்தம் கேட்டு, டான்ஸ் ஆட ஆரம்பிச்சேன். தெலுங்கு கத்துக்கிட்டதுக்குப் பிறகு அதெல்லாம் ஈஸியாயிடுச்சி. இருந்தாலும் பழைய காலம் மாதிரி அர்த்தத்துக்கு ஏத்த மாதிரி ஆடுறது இல்லை. ஏதோ 20, 25 சதவீதம்தான் அர்த்தத்தோட ஆடுறோம். மத்தபடி அடி டான்ஸ்தான்.

மலையாள மொழியில நான் அதிகம் பாட்டுங்க பண்ணியதில்லை. கன்னடம் தாய்மொழிங்கிறதுனால தெரியும். ஆனா பிறந்து, வளர்ந்தது எல்லாமே தமிழ்நாடு. அதனால இப்பவும் கன்னடத்துல சில வார்த்தைங்க புரியாது. அதுவும் நாங்க பேசுறது கிராமத்து கன்னட பாஷை. பெங்களூரு, மைசூருனு சிட்டியில இருக்கிறவங்க அதைக் கேட்டு கிண்டல் பண்ணுவாங்க. நம்ம நடிகர் அர்ஜுன் சார் சிட்டி கன்னடம். சில சமயத்தில் கன்னடத்துல அவர்கிட்ட பேசுறப்ப சிரிச்சிக் கலாட்டா பண்ணுவார்.

ஹிந்திக்கு போனேன். ஆரம்பத்துல எல்லாம் கொஞ்சம்கூட ஹிந்தி தெரியாது. ‘ஹிந்தி தெரியாம எப்படி சார் படம் பண்றீங்க? அதிசயமா இருக்கே!’ன்னு கேட்பாங்க. சினிமாவுக்கு ஏது மொழி? எல்லாமே ஒரு ஃபீல்தான். எமோஷனலை சரியா புரிஞ்சிட்டு எடுத்தாப் போதும்னு நினைக்கிறேன். ஹிந்தியில இருக்குற நடிகர், நடிகைங்க பெரும்பாலும் இங்கிலீஷ் பேசுறதுனால ஈஸியா மேனேஜ் பண்ணிடுறேன். அதே மாதிரி ஹிந்தியில் படம் பண்றதுக்கு முன்னாடி வசனம் முழுக்க ஏ டு இசட் என்ன அர்த்தம்னு புரிஞ்சிப்பேன். அப்புறம்தான் ஷூட்டிங் போவேன். இப்போ ஹிந்தி நல்லாப் புரியுது. ஆனா, அதிகம் பேச வராது. சில பேர் ‘ஹிந்தியில பேசுங்க?’ன்னு கேட்பாங்க. ‘நான் பேசுவேன். ஆனா, அதை கேட்க நீங்க இருக்கணுமே!’ன்னு சிரிச்சிட்டே சொல்வேன்.

இப்படி வேலை, சூழல்னு ஒவ்வொரு இடத்துலயும் மேனேஜ் செஞ்சு வந்தாலும் எப்பவும் நம்ம தாய்மொழிதான் முக்கியம்னு தோணும். ஆனா, நம்ம ஊர்ல இங்கிலீஷுக்குத்தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்குறோம். இதுவே ஜப்பான், சீனாவுல எல்லாம் அவங்க தாய்மொழிக்குத்தான் முதல்ல முக்கியத்துவம் கொடுக்குறாங்க. இங்கிலீஷுக்கு பெருசா முக்கியத்துவம் கொடுக்குறதே இல்லை. ஆனா, அவங்க பயங்கரமா முன்னேறியிருக் காங்களே. ஸ்பெயின், சில யூரோப் நாடுகளுக்கு போறப்ப அவங்களுக்கு இங்கிலீஷ் நல்லா தெரிஞ்சாலும் அதை பேசுறதில்லை. நாம் ஏதாவது சந்தேகம் கேட்டு இங்கிலீஷ்ல பேசினாலும், அதுக்கு அவங்க பதில் சொல்றது இல்லை. அந்த அளவுக்கு அவங்களோட மொழி மேல பற்றா இருக்காங்க.

என்னோட பசங்க இங்கிலீஷ் பேசுறாங்களா? இல்லையான்னு நான் கவலைப்பட்டதே இல்லை. இப்போ இதை எழுதிட்டிருக்கப்பக்கூட அவங்கக்கிட்ட ‘உங்களுக்கு எந்த மொழி ரொம்ப பிடிக்கும்?’ன்னு கேட்டேன். அவங்க கொஞ்சம்கூட யோசிக்காம, ‘தமிழ்’னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்தது!

அதே மாதிரி தமிழும், தாய்மொழியும் தவிர மத்த எந்த மொழி பேசும்போதும் கொஞ்ச நேரம் கழிச்சு எனக்கு வாய் வலிக்கும். அசவுகரியமாவே இருக்கும். அது ஏன்?

- இன்னும் சொல்வேன்…


பிரபுதேவா தொடர்சுயசரிதைசொந்தக் கதைவியாழன் வாழ்க்கைவாழ்க்கை தொடர்நடிகரின் கதைடான்ஸ்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x