Published : 08 Aug 2016 10:18 AM
Last Updated : 08 Aug 2016 10:18 AM

ரோஜர் பெடரர் 10

ரோஜர் பெடரர் - சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர்

சுவிட்சர்லாந்தை சேர்ந்த உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் (Roger Federer) பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* சுவிட்சர்லாந்தின் பேசல் நகரில் (1981) பிறந்தார். இவரது தாய் தென்ஆப்பிரிக்காவில் பிறந்தவர். குழந்தைப் பருவம் முதலே டென்னி ஸில் ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளிப் பருவத்தில் தீவிர டென்னிஸ் பயிற்சி மேற்கொண்டார்.

* தொழில்முறை ஆட்டக்காரராக 1998-ல் களம் இறங்கியவர், அடுத்த ஆண்டில் உலகத் தரவரிசையில் 100-வது இடம் பிடித்தார். மிலன் உள்விளையாட்டு அரங்கப் போட்டிகளில் முதல்முறையாக தனிநபர் கோப்பையை வென்றார். 2003-ல் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை விம்பிள்டனில் வென்றார்.

* ஒரே ஆண்டில் (2004) மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். 2006, 2007-ம் ஆண்டுகளிலும் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று உலகத் தரவரிசைப் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதை 302 வாரங்கள் தக்கவைத்துக்கொண்டார் 2008 ஒலிம்பிக்கில் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றார்.

* ஒற்றையர் ஆண்கள் பிரிவில் இதுவரை 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இதன்மூலம் ஏற்கெனவே 14 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பீட் சாம்ப்ராஸின் சாதனையை முறியடித்துள்ளார். ஆஸ்திரேலியா, பிரெஞ்ச், விம்பிள்டன், அமெரிக்கா ஆகிய 4 இடங்களிலும் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற 7 ஆண் வீரர்களில் ஒருவர் இவர்.

* ஆண்கள் ஒற்றையர் கிராண்ட்ஸ்லாமில் 27 முறை இறுதிப்போட்டி வரை முன்னேறியது இதுவரை யாரும் நிகழ்த்தாத சாதனை. தொடர்ந்து 23 முறை அரையிறுதிக்கு முன்னேறினார்.

* தொடர்ந்து 65 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்றது, காலிறுதிக்கு 48 முறை முன்னேறியது, பெரும்பாலான போட்டிகளில் வென்றது (307), தொழில்முறையில் 88 டென்னிஸ் டைட்டில்கள் போன்ற சாதனைகள் இவரை டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாக உயர்த்தின.

* டென்னிஸ் உலகத் தரவரிசையில் தற்போது 3-வது இடத்தில் இருக்கிறார். ரசிகர்களால் ‘பெட் எக்ஸ்பிரஸ்’, ‘சுவிஸ் மேஸ்ட்ரோ’ என்று புகழப்படுகிறார். பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். தன் பெயரில் அறக்கட்டளை தொடங்கி, பின்தங்கிய மக்களின் கல்வி, விளையாட்டுக்கு உதவுகிறார். சுவிட்சர்லாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளின் குடியுரிமையும் பெற்றவர்.

* ‘தாய்’ நாடான தென் ஆப்பிரிக்காவில் குழந்தைகள் சிறந்த கல்வி, விளையாட்டு, சுகாதாரம் பெற ஆப்பிரிக்கா - சுவிஸ் சாரிட்டி என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்க ஓபன் போட்டியில் தான் பயன்படுத்திய டென்னிஸ் ராக்கெட்களை ஏலம்விட்டு, அதில் கிடைத்த தொகையை, கத்ரினா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கினார்.

* சுனாமி பேரழிவின்போது தமிழகம் வந்து, பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு, பல உதவிகளைச் செய்தார். யுனிசெஃப் நிறுவனத்தின் நல்லெண்ணத் தூதராக நியமிக்கப்பட்டார். எய்ட்ஸ் விழிப்புணர்வுக் கூட்டங்களில் பங்கேற்றார். பிரபல வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற போட்டியை நடத்தி, ஹைதி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவினார்.

* முழங்கால் வலி காரணமாக, தற்போது நடந்துவரும் ரியோ ஒலிம்பிக் மற்றும் இதர போட்டிகளில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ளார். இன்று 35-வது வயதில் அடியெடுத்து வைக்கும் இந்த சாதனையாளர், நல்ல உடற்தகுதியுடன் அடுத்த ஆண்டில் புத்துணர்ச்சியுடன் களமிறங்குவேன் எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x