

வங்காள இலக்கியவாதி, சமூக ஆர்வலர்
பிரபல வங்காள எழுத்தாளரும் பழங்குடி மக்களின் நலனுக்காகப் பாடுபட்ட சமூக ஆர்வலருமான மகாஸ்வேதா தேவி (Mahasweta Devi) பிறந்த தினம் இன்று (ஜனவரி 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* பிளவுபடாத வங்காளத்தின் டாக்காவில் பிறந்தார் (1926). அப்பா பிரபல வங்கக் கவிஞர். அம்மாவும் எழுத்தாளர். எனவே இயல்பாகவே இவருக்கும் இலக்கியம், சமூகம் சார்ந்த ஆர்வம் பிறந்தது. டாக்காவில் ஆரம்பக்கல்வி பெற்றார். இந்தியப் பிரிவினைக்குப் பிறகு குடும்பம் டாக்காவிலிருந்து கிழக்குவங்கத்தில் குடியேறியது.
* ரவீந்திரநாத் தாகூரின் சாந்தி நிகேதனில் உள்ள பாட பவனாவில் மேல்நிலைப் பள்ளி கல்வியும், விஷ்வபாரதி பல்லைக்கழகத்தில் ஆங்கிலத்தில் பி.ஏ. பட்டமும், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டமும் பெற்றார். இவரது முதல் நாவல், ஜான்சிர் ராணி 1956-ல் வெளிவந்தது.
* 1964-ம் ஆண்டு முதல் பிஜோய்கர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அதோடு, பத்திரிகைகளிலும் கட்டுரைகள் எழுதி வந்தார். வங்க மொழியிலேயே எழுதி வந்தார். சமூக அக்கறை கொண்ட படைப்புகளாக இருந்ததால் அனைத்துத் தரப்பினரிடையேயும் வரவேற்பைப் பெற்றன.
* 1984-ல் ஓய்வு பெற்ற இவர், அதன்பிறகு முழுமூச்சுடன் எழுத்துப் பணிகளில் ஈடுபட்டார். பிகார், மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வனப் பகுதிகளில் வாழும் பழங்குடியினரின் வாழ்க்கை முறை குறித்து ஆராய்ந்தார்.
* பல்வேறு வகைகளில் அவர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறைகளைக் குறித்தும் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் பத்திரிகைகளில் எழுதியதோடு, போராட்டங்களும் நடத்தி அவர்களின் குரலாகவே செயல்பட்டார். பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அவர்களது வாழ்க்கை முறை, துன்பங்கள், இடையூறுகள் ஆகியவற்றை நேரடியாகப் பார்த்து அவற்றைத் தன் படைப்புகளில் பதிவுசெய்துள்ளார்.
* சபார் பழங்குடியின மக்கள் இவரைத் தாயாகப் போற்றினர். ‘தி மதர் ஆஃப் தி சபார்ஸ்’ என்று வர்ணிக்கப்பட்டார். 100-க்கும் மேற்பட்ட நாவல்கள், 20-க்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள், வெளிவந்துள்ளன. இவரது படைப்புகள் ஆங்கிலத்திலும், தமிழ் உட்பட பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
* இந்தியாவில் பெண்கள் நிலை, அவர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளைக் குறித்த இவரது ‘பிரெஸ்ட் ஸ்டோரீஸ்’ சிறுகதைத் தொகுப்பு இவருக்கு உலகப்புகழ் பெற்றுத் தந்தது. ‘ஹஜார் சவுரஷிர் மா’, ‘அம்ரிதாஷன்சார்’, ‘அக்னி கர்பா’, ‘பிஷ்-ஏகுஷ்’, ‘சோட்டி முண்டா இவான் தார் திர்’, ‘மூர்த்தி’ உள்ளிட்ட இவரது படைப்புகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
* ஆரன்யெர் அதிகார்’ சிறுகதைத் தொகுப்புக்காக 1979-ம் ஆண்டு இவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. 1986-ல் இவரது சமூகப் பணிகளுக்காக பத்ம விருது வழங்கப்பட்டது. பத்ம விபூஷன் விருதும் பெற்றவர். 1996-ம் ஆண்டு ஞானபீட விருது வென்றார்.
* 1997-ல் ஆசிய நோபல் பரிசு, ராமன் மகசேசே விருது, மேற்குவங்க அரசின் வங்க விபூஷண் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். 60 ஆண்டுகளுக்கும் மேல் சமூக அக்கறை கொண்ட ஒரு சிறந்த படைப்பாளியாகச் செயல்பட்டவர்.
* தன் படைப்புகள் மூலமாக மட்டுமல்லாமல், வாழ்நாள் முழுவதும் சமதர்மம், சமூக நீதிக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வந்தவரும் வங்க இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவருமான மகாஸ்வேதா தேவி கடந்த 2016-ம் ஆண்டு மறைந்தார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்