Published : 05 Jul 2016 11:42 am

Updated : 14 Jun 2017 14:14 pm

 

Published : 05 Jul 2016 11:42 AM
Last Updated : 14 Jun 2017 02:14 PM

எம்ஜிஆர் 100 | 100 -அவர் புகழுக்கு முடிவேது?

100-100

M.G.R.மீது ஏதோ ஒரே நாளில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திடீரென பற்று வந்துவிடவில்லை. ‘‘அரசியல் களத்தில் எதிரெதிர் அணியில் இருந்தாலும் எம்.ஜி.ஆரின் செயல்பாடுகளையும் மனிதாபிமான நடவடிக்கைகளையும் அறிந்து படிப்படியாக அவர் மீதான மதிப்பு உயர்ந்தது. அவரது மனிதாபிமான நடவடிக்கைகள் காரணமாக இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல; ஈழத் தமிழர்களும் அவரை தெய்வமாக வணங்குகிறார்கள்’’ என்று கூறும் வைகோ, தனது அனுபவங்களைத் தொடர்கிறார்!

பெரும்பாலோருக்குத் தெரியாத, அறிந்து கொள்ள முடியாத வாய்ப்பு வைகோ வுக்கு கிடைத்துள்ளது. 2004-ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்ட இல்லத்துக்கு வைகோ சென்றார். அப்போது, எம்.ஜி.ஆர். பயன் படுத்திய பொருட்களை பார்வையிட்டார். அவர் பயன்படுத்திய ஒரு நாட்குறிப்பில் இசை சம்பந்தப்பட்ட இலக்கணங்களையும், குறிப்புகளையும் அவர் எழுதி வைத்திருப்பதை யும் அவரது இசை ஞானத்தையும் அறிந்து வைகோ அசந்துவிட்டார். இங்கே ஒரு வருத்தமான விஷயம் என்னவென்றால், கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அந்த நாட்குறிப்பு மட்டுமின்றி, எம்.ஜி.ஆர். பயன்படுத்திய பல பொருட்களும் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.

ஈழத் தமிழர் பிரச்சினை தொடர்பாக 1987-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ம் தேதி, இந்திய - இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ‘‘இந்த ஒப்பந்தத்தில் விடுதலைப் புலிகளுக்கு விருப்பம் இல்லை. எம்.ஜி.ஆருக் கும் இந்த ஒப்பந்தத்தில் உடன்பாடு இல்லை. சென்னை கடற்கரையில் ராஜீவ் காந்தியுடன் கலந்துகொண்ட பொதுக்கூட்டத்தில்கூட எம்.ஜி.ஆர். பட்டும் படாமலும்தான் பேசினார்’’ என்று வைகோ கூறுகிறார்.

பின்னர், அமெரிக்காவில் மருத்துவப் பரிசோதனைக்காக எம்.ஜி.ஆர். சென்றார். அவர் அங்கிருக்கும் சமயத்தில், இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய அமைதிப்படை விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியது. ‘‘அந்தச் சமயத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியும் அமெரிக்காவுக்கு அரசு முறை பயணம் சென்றார். டென்னிஸ் விளை யாட்டில் இந்தியாவுக்கு புகழ் தேடித்தந்த விஜய் அமிர்தராஜ், அமெரிக்க அரசு வட்டாரத்தில் செல்வாக்கு மிக்கவர்.

இந்திய அமைதிப்படை யின் தாக்குதலை நிறுத்தச் சொல்லி விஜய் அமிர்தராஜ் மூலம் ராஜீவ் காந்திக்கு எம்.ஜி.ஆர். கடிதம் அனுப்பியிருக்கிறார். உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனைக் காக வந்திருக்கும் நிலையிலும் எம்.ஜி.ஆரின் இந்தச் செயல், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையையும் மதிப்பையும் ஏற்படுத்தியது’’ என்கிறார் வைகோ.

அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். இருந்தபோது நடந்த இன்னொரு நிகழ்ச்சியையும் வைகோ நினைவுகூர்கிறார். அந்த நேரத்தில் சென்னை யில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கிட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதை அறிந்து அவரது வீட்டுக்குச் சென்ற வைகோவை போலீஸார் கைது செய்து இரவு 1 மணிக்கு விடுவித்தனர். மீண்டும் நேராக கிட்டு வீட்டுக்கு சென்ற வைகோவை போலீஸார் மறுபடியும் கைது செய்து காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் ரிமாண்ட் செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

மாலையில் அவரை போலீஸார் திடீரென விடுவித்தனர். காரணம் கேட்ட வைகோவுக்கு இன்ப அதிர்ச்சி! ‘‘நீங்கள் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., உங்களை விடுவிக்கச் சொல்லி அமெரிக்காவில் இருந்து உத்தரவிட் டுள்ளார். கிட்டுவை பார்வையாளர்கள் சந்திப் பதை போலீஸார் தடுக்க வேண்டாம் என்றும் முதல்வர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்’’ என்று போலீஸ் அதிகாரிகள் கூறியபோது வைகோ வின் மதிப்பில் எம்.ஜி.ஆர். மேலும் உயர்ந்தார்.

எம்.ஜி.ஆர். பற்றி கிட்டு கூறியதைக் கேட்டு வைகோ கண்கலங்கிய சம்பவமும் உண்டு. அப்போது, வைகோ திமுகவில் இருந்தார். சென்னை அடையாறில் உள்ள கிட்டுவை அவர் ஒருநாள் சந்தித்தார். ‘‘முதல்வர் எம்.ஜி.ஆரிடம் விடுதலைப் புலிகள் நெருக்க மாக உள்ளனர். திமுக தலைமை யோடும் நீங்கள் நெருக்க மாக இருக்க லாமே?’’ என்று கிட்டுவிடம் உரிமையோடு கேட்டார்.

அப்போது கிட்டு சொன்ன பதில் வைகோவை கலங்கடித்துவிட்டது. கிட்டு அமைதி யாக தன் வயிற்றைத் தடவிக் காட்டி, ‘‘இங்கே இருக்கிற பொடியன்களுக்கு (புலிகள் இயக்க இளைஞர்கள்) வயிறு இருக்கிறதே, சாப்பிட ணுமே அண்ணே? இரண்டு நாட்கள் முன்பு முதல்வர் எம்.ஜி.ஆரைப் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்று எங்கள் கஷ்டத்தைச் சொன்னேன். உடனே அவர் பெரிய தொகை கொடுத்தார்.

முகத்தைப் பார்த்து பசி அறியும் தாயைப் போல எம்.ஜி.ஆர். எங் களுக்கு உதவுகிறார். அதனால்தான் அவரோடு நெருக்கமாக இருக்கிறோம். மற்றபடி, திமுக மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை’’ என்று கிட்டு சொன்னதைக் கேட்டு கண்கலங்கிய வைகோ, உணர்ச்சிப் பெருக்குடன் கிட்டு வைப் பார்த்து கைகுவித்து, ‘‘தவறாகக் கேட்டுவிட்டேன்’’ என்றார். அப்போது வைகோ வின் மனதில் எவரெஸ்ட் சிகரமாய் உயர்ந்தார் எம்.ஜி.ஆர்.!

மாறிவிட்ட அரசியல் சூழலில் 1989-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததற்குப் பிறகு, இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை சந்திக்க வன்னிக் காட்டுக்குச் செல்ல வைகோ முடிவு செய்தார். ‘‘பட்டுக்கோட்டை வழியாகக் கோடியக்கரை சென்று, விடுதலைப் புலிகள் உதவியுடன் படகில் புறப்பட்டு கடற்படை கப்பல்களிடம் இருந்து தப்புவதற்காக 180 கிலோ மீட்டர் சுற்றி, நாயாறு பகுதி கடற்கரையில் இறங்கினோம். அங்கிருந்து அடர்ந்த காடுகள் வழியாக இரண்டு நாட்கள் நடந்து சென்று வன்னிக் காட்டில் பிரபாகரனை சந்தித்தேன். அப்போதுதான் எம்.ஜி.ஆர். பற்றி அவர் என்னிடம் கூறினார்’’ என்று மனதில் அழியாத நினைவுகளை வெளியிடுகிறார் வைகோ!

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்று வித்த ஆரம்ப காலத்தில், எம்.ஜி.ஆர். மீது பிரபா கரனுக்கு பெரிய பற்று கிடையாது. திரைப்படங் களில் அவரது சண்டைக் காட்சிகளை பார்த்து ரசித்திருக்கிறார். ‘‘தமிழகம் வந்த சில காலத் துக்குப் பிறகுதான் எம்.ஜி.ஆர். என்ற பிரம்மாண் டத்தை நேரில் கண்டு நான் உணர்ந்தேன்’’ என்று வைகோவிடம் கூறிய பிரபாகரன், அதற்கான காரணங்களையும் அடுக்கியிருக்கிறார்!

முதல்வர் எம்.ஜி.ஆருடன் ஆலோசிக்கிறார் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன்.

‘‘ஆரம்ப காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு மத்திய அரசும் உதவி செய்திருக்கிறது. அப் போது புலிகள் இயக்கம் தடை செய்யப்பட வில்லை’’ என்று கூறும் வைகோ, சில விநாடிகள் கண்களை மூடி பிரபாகரன் தன்னிடம் கூறியதை நினைவுகூர்கிறார்.

எம்.ஜி.ஆரை ஒருமுறை அவரது வீட்டில் பிரபாகரனும் ஆன்டன் பாலசிங்கமும் சந்திக்கச் சென்றனர். இருவருக்கும் விருந்தளித்து உப சரித்துவிட்டு, ‘‘நான் உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டிருக்கிறார். புலிகள் இயக்கத்துக்கு அப் போது நிதி தேவைப்பட்டது. ‘என்ன பெரிதாக கொடுத்துவிடப் போகிறார்’ என்று நினைத்த பிரபாகரன், ஒரு குறிப்பிட்ட தொகையை எம்.ஜி.ஆரிடம் கோரியுள்ளார். ‘‘நாங்கள் எதிர் பார்க்காத ஒரு பெரும் தொகையை எம்.ஜி.ஆர். தங்களுக்குக் கொடுத்ததாக வன்னிக் காட்டில் பிரபாகரன் என்னிடம் தெரிவித்தார். தன்னை எப்போது வேண்டுமானாலும் பிரபாகரன் சந்திக்க வசதியாக ஒரு தொலைபேசி எண்ணை யும் ஒரு அடையாள அட்டையையும் அவரிடம் எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார்’’ என்கிறார் வைகோ!

பின்னர், பிரபாகரன் கூறிய கருத்து வைகோவை தூக்கிவாரிப் போடவைத்திருக் கிறது. ‘‘இந்திரா காந்தி மறைவுக்குப் பிறகு ராஜீவ் காந்தி பிரதமரானதும் அதுவரை எங்களுக்கு வழங்கிவந்த உதவிகள் தொடர்பாக பேசவேண்டும் என்று வெளியுறவு அமைச்சகம் அழைத்ததால் டெல்லி சென்று சந்தித்தோம். ஆனால், ‘இனி எந்த உதவியும் செய்ய முடியாது’ என்று அரசு கைவிரித்துவிட்டது’’ என்று வைகோவிடம் பிரபா கரன் கூறியிருக் கிறார்.

தொடர்ந்து அவர் கூறியதைக் கேட்ட வைகோவின் மனதில் எம்.ஜி.ஆர். விஸ்வரூபம் எடுத்து நின்றார். ‘‘அந்த நேரத்தில் டெல்லி வந்திருந்த முதல்வர் எம்.ஜி.ஆரை பிரபாகரன் சந்தித்தார். மத்திய அரசு நான்கு கோடி ரூபாய் தருவதாகச் சொல்லி பின்னர், மறுத்ததை பிரபாகரன் மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., ‘அந்த தொகையை நான் தருகிறேன்’ என்று கூறி, தமிழக அரசு மூலம் வெளிப்படையாகவே நான்கு கோடி ரூபாயை வழங்கியதாக பிரபாகரன் என்னிடம் கூறினார்’’ என்று உணர்ச்சிபூர்வமாக கூறுகிறார் வைகோ!

‘‘ஈழத் தமிழர்களுக்காக அவர் செய்த உதவி களைப் பார்க்கும்போது, எம்.ஜி.ஆர். இருந்திருந் தால் தமிழ் ஈழம் மலர்ந்திருக்கும். சுமார் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் அநியாயமாக கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்’’ என்று சொல்லி ஏக்கப் பெருமூச்சு விடுகிறார் வைகோ. அந்தப் பெருமூச்சின் உஷ்ணம் இதயத்தைச் சுடு வது கலங்கிய அவரது கண்களில் தெரிகிறது.

**********

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன் னிட்டு நமது நாளிதழில் வெளியிடப்பட்ட ‘எம்.ஜி.ஆர். 100’ தொடர் கட்டுரைகளும் அவரது படங்களைப் போலவே, இன்றோடு 100 நாட்கள் ஓடியிருக்கின்றன. இந்த அளவுக்கு தொடர் வெற்றிகரமாக வர காரணம் வாசகர்கள்தான்! தொடர் ஆரம்பித்த நாளில் இருந்தே ஏராளமான வாசகர்களும் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் கடிதம், தொலைபேசி, இ-மெயில் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவையும் வரவேற்பையும் ஆலோசனைகளையும் தெரிவித்தனர். ஆர்வத் துடன் தகவல்களையும் நூல்களையும் கொடுத்து பலர் உதவினர். அவர்கள் அனைவருக்கும் நன்றி!

தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டதுபோல, ஒருவர் ஒருதுறையில் வெற்றிபெறுவதே கடி னம். ஆனால், திரைப்படம், அரசியல் என இரு துறைகளிலும் ஈடு, இணையற்ற வெற்றியைப் பெற்று, அவற்றில் முதலிடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர்.! வெற்றி பெறுவதைவிட அதைத் தக்கவைத்துக் கொள்வது இன்னும் கடினம். கடைசிவரை முதலிடத்திலேயே இருந்ததுதான் எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்தின் அதிசயம்!

இப்போதும் அரசியல் கட்சிகள் அவரது பெய ரைச் சொல்லி ஓட்டு கேட்கின்றன. மறுவெளி யீட்டு படங்களைப் பட்டியலிட்டால் எம்.ஜி.ஆரின் படங்கள்தான் அதிக அளவில் மறுவெளியீடு செய்யப்பட்டு மக்களால் விரும்பிப் பார்க்கப்படு கிறது. 2014-ம் ஆண்டு ‘ஆயிரத்தில் ஒருவன்’ படம் மறுவெளியீட்டில் சென்னையில் வெள்ளி விழா கொண்டாடியது ஒரு உலக சாதனை!

திரைப்பட வெற்றி ஒரு சாதனைக் குறியீடு தான். அதைத் தாண்டிய விண்ணைத் தொடும் எம்.ஜி.ஆரின் புகழுக்கு அவரிடம் நிறைந்திருந்த மனிதாபிமானமும் மக்கள் சேவையும்தான் காரணம்! அப்படிப்பட்டவருக்கு ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் வெளியிட்ட ‘எம்.ஜி.ஆர். 100’ தொடர் கட்டுரைகளை சிறப்பு மரியாதையாகக் கருது கிறோம். இந்தக் கட்டுரைகள் அவரது பல்வேறு சிறப்புகளின் ஒரு துளிதான். தொடர் முடியலாம்; எல்லையற்ற பிரபஞ்சம் போல விரிந்து பரந்திருக்கும் அவரது புகழுக்கு முடிவேது?

எம்.ஜி.ஆர். இன்னும் மறையவில்லை; தனது அழியாப் புகழால் மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அப்படி வாழ்வாங்கு வாழ்பவருக்கு வாழ்த்துப்பா பாடுவதுதானே முறை! அதற்கும் அவரது படப் பாடல்தான் கைகொடுக்கிறது. ‘ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் ‘பிள்ளைத் தமிழ் பாடுகிறேன்…’ என்ற அருமையான பாடல். குழந்தையை வாழ்த்திப் பாடும் அந்தப் பாடலில் வரும் வரிகள், குழந்தை உள்ளம் கொண்ட எம்.ஜி.ஆருக்கு கச்சிதமாய் பொருந்துகிறது…

‘நீலக்கடல் அலைபோல நீடூழி நீ வாழ்க!

நெஞ்சமெனும் கங்கையிலே நீராடி நீ வாழ்க!

காஞ்சி மன்னன் புகழ்போல காவியமாய் நீ வாழ்க!

கடவுளுக்கும் கடவுளென கண்மணியே நீ வாழ்க!’

நிறைந்தார். | படங்கள் உதவி: ஞானம், செல்வகுமார்

முந்தைய தொடர்களை வாசிக்க: >எம்ஜிஆர் 100

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

எம்ஜிஆர் தொடர்எம்.ஜி.ஆர் வாழ்க்கைஎம்.ஜி.ராமச்சந்திரன்எம்ஜிஆர் கதைஎம்ஜிஆர்பாடல்கள்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author