Last Updated : 31 Mar, 2017 10:18 AM

 

Published : 31 Mar 2017 10:18 AM
Last Updated : 31 Mar 2017 10:18 AM

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 33: 150 ஆண்டுகளைக் கடந்த திருவல்லிக்கேணி இந்து மேல்நிலைப் பள்ளி!

மெட்றாஸுக்குப் பெருமைச் சேர்த்த அன்றையக் கல்வி நிறுவனங்களில் ‘திருவல்லிக்கேணி தி இந்து மேல்நிலைப் பள்ளிக் கூடம்’ தனிச் சிறப்பு வாய்ந்தது. திருவல்லிக்கேணி பெரிய தெரு வில் அமைந்துள்ள இப்பள்ளிக் கூடம் அந்நாளையப் பெரியவர் களின் உழைப்புக்கு சான்றாகத் திகழ்கிறது.

1852-ம் ஆண்டு, தமிழ் பேசும் மாணவர்களுக்காக திராவிட பாட சாலையும், தெலுங்கு பேசும் மாண வர்களுக்காக இந்து ஆந்திர பாலரு பாடசாலையும் ஒரே இடத்தில் தொடங்கப்பட்டது. 1860-ல் இவ்விரு பள்ளிக்கூடங்களும் ஒன்றாக்கப் பட்டு, ‘திருவல்லிக்கேணி ஆந்திர திராவிட பாலரு பாடசாலா’ என்று அழைக்கப்படலாயிற்று. 1873-ல் ‘தி டிரிப்ளிகேன் ஆங்லோ -வெர்னா குலர் ஹைஸ்கூல்’ என்று புதிய பெயரைச் சூட்டிக் கொண்டது.

1869-ல் எம்.ஏ.சிங்கராசாரி அப்பள்ளியின் செயலாளர் மற்றும் பொருளாளரானார். அப்போது அந்தப் பள்ளியில் 48 மாணவர்களே படித்தனர். அத்துடன் பள்ளிக்கூடம் ரூ.80 பற்றாக்குறையை எதிர் கொண்டிருந்த நிலையில் இருந்து அதை மீட்கத்தான் சிங்கராசாரி பள்ளி நிர்வாகக் குழுவில் சேர்க் கப்பட்டிருந்தார். பள்ளியின் நிதித் தேவைகளைப் பூர்த்திசெய்து பள்ளியை உயர்த்தியதில் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.

திருவல்லிக்கேணி பெரிய தெரு அந்நாளில் வீரராகவ முதலித் தெரு என்றே அழைக்கப்பட்டது. மெட்றாஸில் புகழ்வாய்ந்த பல கட்டிடங்களைக் கட்டிய நம்பெருமாள் செட்டி, 1897-ல் ரூ.57 ஆயிரம் செலவில் இப்பள்ளிக்காக சிவப்புச் செங்கல்லில் வலுவான கட்டிடம் கட்டித் தந்தார். 1898-ல் இதற்கு தி இந்து ஹைஸ்கூல் எனப் பெயர் சூட்டினர். ‘L’ வடிவில் கட்டப்பட்ட இந்தப் பள்ளியை, 1906-ல் மேலும் ஒரு பக்கம் கட்டிடம் கட்டி, ‘T’ வடிவில் மாற்றினர்.

1892-ல் வெளியான ‘தி பிரசி டென்சியன்’ என்ற பத்திரிகையில், “சென்னை மாகாண (இப்போது மாநில) கல்லூரிக்குத் திறமையான மாணவர்களை உயர் படிப்புக்கு அனுப்பி வைத்ததில் தி இந்து ஹைஸ்கூல் முக்கியப் பங்கு வகித்தது” என கல்லூரி முதல்வர் டேவிட் டங்கன் பாராட்டியிருக் கிறார். தமிழ், தெலுங்கு ஆகியவற் றுடன் ஆங்கிலமும் கற்றுத் தந்த இந்தப் பள்ளிக்கூடத்தை உருவாக்க பரந்த மனம் படைத்த மெட்றாஸ் பிரமுகர்கள் பலர் காரணகர்த்தர் களாக இருந்தனர். அவர்களில் மைசூர் பகுதியைச் சேர்ந்த மாண்டயம் அய்யங்கார்கள் குறிப் பிடத்தக்கவர்கள்.

மாகாண கல்லூரி முதல்வராக இருந்த டங்கன், பிறகு பொதுக் கல்வி இயக்குநராகப் பதவி பெற் றார். 1895-ல் ‘இந்து’ பள்ளிக்கு நிரந்தரக் கட்டிடங்களைக் கட்டும் பணி முதன்முதலாகத் தொடங்கிய போது டங்கன்தான் அடிக்கல் நாட்டினார்.

‘தி இந்து’ ஆங்கிலப் பத்திரி கையை முதன்முதலாகத் தொடங் கிய எம்.வீரராகவாசாரியார், ஜி.சுப்பிரமணிய ஐயர் என்ற இரு வரும் திருவல்லிக்கேணி இந்து பள்ளிக்கூடத்தில்தான் ஆசிரியர் களாக இருந்தனர். ஜி.சுப்பிரமணிய ஐயர் பின்னாளில் தலைமை ஆசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார். பிறகு பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார். சில ஆண்டுகள் கழித்து, ‘வெள்ளி நாவு’ படைத்த வி.சீனிவாச சாஸ்திரி இப்பள்ளியின் தலைமை ஆசிரியரானார். அவர் தலைமை ஆசிரியராக இருந்த 7 ஆண்டுகளும் பள்ளிக்கூடத்தின் வரலாற்றில் முக்கிய சாதனைகளைப் பதிய விட்டுச் சென்றார். பி.ஏ.சுப்ர மணிய ஐயர் 1916 முதல் 1938 ஆண்டுகள் வரையில் பணிபுரிந்து இந்தப் பள்ளியை மிகப் பெரிய அந்தஸ்துக்கு உயர்த்தினார்.

“சீனிவாச சாஸ்திரியாரின் ஆங்கிலப் புலமை பிரமிக்க வைப்பதாக இருந்தது. ஆங்கில மொழியில் அவருக்கிருந்த மேதமை மாணவர்களை மட்டுமல்லாமல் சக ஆசிரியர்களையும் கட்டிப்போட வைத்தது. அவருக்கு இருந்த ஆங்கிலப் புலமையைக் கண்டு வியந்தவர்களும், பொறாமைப்பட்ட வர்களும் அநேகம். அவருடைய வகுப்பில் ஆங்கில பாடத்தை அவர் நடத்தும் விதத்தைக் கேட்டு மாணவர்கள் மகுடிக்குக் கட்டுண்ட நாகம் போல மயக்கத்தில் இருப் பார்கள். வகுப்பில் ஒரு சிறு அசைவு, ஒலி இருக்காது. அவரு டைய குரல் மட்டும் கேட்டுக் கொண்டே இருக்கும்.

புத்தகத்தில் உள்ள பாடத்தை மட்டும் நடத்தி ஓய மாட்டார். ஆங்கில இலக்கணத்தின் ஒரு சிறு அம்சத்தை விளக்க ஒரு முழு வகுப்பு நேரத்தையும் கூட எடுத்துக் கொள்வார்.

இலக்கணத்தையும் ஆங்கிலச் சொலவடைகளையும் அவர் விளக்கும் பாணியே அலாதி. அவர் நடத்திய பாடங்கள் மாண வர்களுக்கு மீண்டுமொருமுறை படிக்க வேண்டிய அவசியமில் லாமல் நேரடியாகவே நெஞ்சங் களில் நிறைந்தன. சாஸ்திரி யாருக்குச் சொன்னது அந்த பள் ளிக்கூடத்தின் எல்லா ஆசிரியர் களுக்கும் பொருந்தும். அவர்கள் பாடம் நடத்துவதை ஒரு தவமாகவே மேற்கொண்டனர். அதனால்தான் அந்தப் பள்ளிக்கூடம் இன்றளவும் கொண்டாடப்படும் கல்விக் கோயிலாகத் திகழ்கிறது.

- சரித்திரம் பேசும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x