Published : 15 Jul 2016 09:56 AM
Last Updated : 15 Jul 2016 09:56 AM

துர்காபாய் தேஷ்முக் 10

சுதந்திரப் போராட்ட வீராங்கனை, பிரபல சமூக சேவகி துர்காபாய் தேஷ்முக் (Durgabai Deshmukh) பிறந்த தினம் இன்று (ஜூலை 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமுந்திரியில் (1909) பிறந்தார். படிப்பில் இருந்த ஆர்வத்தால், எதிர்ப்பையும் மீறி, பக்கத்து வீட்டில் இருக்கும் ஆசிரியரிடம் இந்தி கற்றார். சிறுவயதில் இருந்தே, அநீதிகளைத் தட்டிக்கேட்கும் துணிச்சல் கொண்டிருந்தார்.

* சுதந்திரப் போராட்டத்தில் கவனம் செலுத்தினார். காந்தியடிகள் 1921-ல் காக்கிநாடா வந்தபோது, 10 நிமிட அனுமதியுடன் அவரை சந்தித்தார். அந்த சந்திப்பு ஒரு மணிநேரம் நீடித்தது. காந்திஜிக்கு மிகவும் பிரியமான தொண்டரானார். காந்திஜியின் இந்தி சொற்பொழிவுகளைத் தெலுங்கில் மொழிபெயர்த்தார்.

* பெண்களுக்கான பள்ளியை 1923-ல் தொடங்கினார். அங்கு பெண்களுக்கு நூல் நூற்றல், நெசவுத் தொழில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இதற்காக காந்திஜியால் பாராட்டப்பெற்று, தங்கப் பதக்கம் பெற்றார். தாயுடன் சேர்ந்து கதராடைகள் விற்றார்.

* உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு, ஓராண்டு சிறை சென்றார். விடுதலையான பிறகும், பல போராட்டங்களில் கலந்துகொண்டதால், மீண்டும் கைது செய்யப்பட்டு 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட் டார். சிறைவாசத்தின்போது ஆங்கில அறிவை கூர்தீட்டிக் கொண்டார்.

* முறையாக கல்வி கற்காத இவர், பண்டிட் மதன் மோகன் மாளவியாவின் ஆலோசனையுடன், பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் பயின்று, மெட்ரிக் தேர்வு எழுதினார். சென்னை பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றார். தன் வீட்டின் ஒரு பகுதியைக் கல்விக்கூடமாக மாற்றி, தன் தாயை அங்கு ஆசிரியராகப் பணியாற்ற வைத்தார்.

* ஆந்திர மகிளா சபாவை 1938-ல் தொடங்கினார். இதன்மூலம் மருத்துவமனை, தாய் சேய் நல விடுதி, செவிலியர் பயிற்சி மையம், கலை மற்றும் கல்வி மையங்கள் தொடங்கப்பட்டன. சட்டம் பயின்று 1942-ல் வழக்கறிஞரானார். குற்றவியல் துறையில் சிறப்பு பயிற்சி பெற்று, வெற்றிகரமான வழக்கறிஞராக வலம்வந்தார்.

* மத்திய சமூக நல வாரியம் அமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்க ளிப்பை வழங்கினார். 1946-ல் அரசியலமைப்பு சட்ட வரைவுக் குழு மற்றும் தற்காலிக நாடாளுமன்றத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார். ஒடுக்கப்பட்ட, நலிவுற்ற பெண்கள் நலனுக்காக. துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையை 1962-ல் தொடங்கினார்.

* ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரி உட்பட பல கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தார். ஆந்திர மகிளா பத்திரிகையின் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். அர்த்தமற்ற சமூகக் கட்டுப்பாடுகளை பெண்கள் எதிர்த்து நிற்க வேண்டும் என முழங்கினார். நாட்டில் முதன்முதலில் குடும்ப நீதிமன்றங்கள் அமைய அடித்தளம் அமைத்தவர்.

* திட்ட கமிஷன் உறுப்பினராக நியமிக்கப்பட்டபோது, சிறந்த திட்டங் களை செயல்படுத்தினார். பால் ஹாஃப்மேன் விருது, நேரு லிட்ரரி விருது, யுனெஸ்கோ, பத்மவிபூஷண் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றார். இவரை தனது குரு என்று கூறிய இந்திரா காந்தி, ‘சமூக சேவைகளின் அன்னை’ என்று புகழாரம் சூட்டினார்.

* ‘தி ஸ்டோன் தட் ஸ்பீகத்’ என்ற நூலை எழுதினார். இவரது சுயசரிதை நூலான ‘சிந்தாமன்’ 1981-ல் வெளிவந்தது. இரும்புப் பெண்மணி என்று போற்றப்பட்டவரும், இறுதிமூச்சு வரை பெண்கள், குழந்தைகளின் நலனுக்காகப் பாடுபட்டவருமான துர்காபாய் தேஷ்முக் 72-வது வயதில் (1981) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x