Last Updated : 09 Feb, 2017 10:24 AM

 

Published : 09 Feb 2017 10:24 AM
Last Updated : 09 Feb 2017 10:24 AM

என்னருமை தோழி..! 29 - திருமணப் பேச்சு!

போயஸ் தோட்ட மனையில் கட்டப்பட்டு வந்த வீட்டின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட அன்றாடம் உங் கள் தாய் செல்வது வழக்கம். சிமென்ட் மற்றும் பெயின்ட் நெடியில், தனது உடல்நிலையை வருத் திக்கொண்டு சந்தியா சென்று வந்து கொண்டிருந் தார். வீட்டுக்குத் தேவையான உபகரணங்கள், அலங்காரப் பொருட்களையும் அவரே தேடித் தேடி வாங்கி குவித்துக் கொண்டிருந்தார். தாங் களோ, படப்பிடிப்புகளில் மும்முரமாக இருந்து வந்ததால், தாயுடன் அதிக நேரம் கழிக்க முடியாத ஒரு சூழ்நிலை.

இந்த நிலையில்தான், ‘‘அம்மு ஒரு முக்கிய மான விஷயம்..’’ என்று ஒருநாள் இரவு சந்தியா உங்களிடம் கூறியபோது, அவர் முகத்தைப் பார்த்த நீங்கள் திடுக்கிட்டு போனீர்கள். உங் களைப் போன்றே தாய் சந்தியாவும் தைரிய மான பெண்தான். தந்தையின் வீட்டில் அரசியை போன்று சகோதரிகளுடன் வளர்ந்தவர். வேத வல்லி, அம்புஜவல்லி மற்றும் பத்மவல்லி என்கிற தனது மூன்று பெண்களையும் முப்பெருந்தேவி யர் என்றுதானே உங்கள் பாட்டனார் திருவரங் கத்து ரங்கசாமி பெருமிதத்தோடு அழைத்து வந்தார்.

அப்படி அருமையாக வளர்ந்த வேதவல்லி என்கிற சந்தியா, ஜெயராமன் அவர்களை மணந்து பலவித இன்னல்களை சந்தித்தார். உங்கள் தந்தை ஜெயராமனுக்கு ஜெயம்மாள் என்கிற முதல் மனைவி ஏற்கனவே இருந்தார். தான் இரண்டாம் தாரமாக அவருக்கு மனைவி யான வருத்தம் உங்கள் தாய்க்கு நிறையவே இருந்தது.

‘ஜெயா விலாஸ்’ இல்லத்தில் இருந்து மைசூரின் சரஸ்வதிபுரம் என்கிற பகுதியில் இருந்த ஒரு சிறு வீட்டுக்கு உங்கள் குடும்பம் மாற வேண்டிய சூழ்நிலை. காரணம்... உங்கள் பாட்டனாரும் மறைந்து விட, அவர் சேர்த்து வைத்திருந்த ஆஸ்திகளும் உங்கள் தந்தையின் போக்கினால் வேகமாக கரைந்து போனது. உங்களுக்கு இரண்டு வயதாகும் போது தந்தையும் காலமாகி விட்டார்.

வேறுவழியின்றி, பெங்களூரில் வசித்த தந்தையின் வீட்டுக்கு இடம் பெயர்ந்த சந்தியா, கர்நாடக அரசு தலைமைச் செயலகத் தில் ஒரு குமாஸ்தா வேலையில் தற்காலிக மாக சேர்ந்தார். இருப்பினும், உங்களை யும், அண்ணன் ஜெயகுமாரையும் சிறு கஷ்டம் கூட தெரியாமல்தான் வளர்த்தார். பிறகு சொற்ப வருமானத்தில் குடும்பத்தை நடத்த முடியாமல்தான், சகோதரி வித்யாவதி (அம்புஜ வல்லி)யின் உதவியுடன் திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார்.

விமான பணிப்பெண்ணாக திகழ்ந்து திரைப் படங்களில் நடித்து வந்தார் வித்யாவதி. ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி யின் மனைவியாக வந்து எம்.ஜி.ஆரை எதிர்த்து கொண்டு இருக்கும் பாத்திரத்தில் நடித்தவர் வித்யாவதி!

அப்படி உங்களுக்காகவும், அண்ணன் ஜெயகுமாருக்காகவும் தன்னையே வருத்திக் கொண்ட சந்தியாவின் மீது உயிரையே வைத் திருந்தீர்கள். எனவேதான், தாயின் சோர்ந்த முகம் தங்களை பதைபதைக்க வைத்தது. உங் களைப் போலவே உங்கள் தாய் சந்தியாவுக் கும் கம்பீரமான முக அமைப்பு. அவரது முகவெட்டு, புராண மற்றும் சரித்திர கதாபாத்திரங்களுக்கு மிகப் பொருத்தமாக இருந்தது. அக்காலத்தில் தயாரிக்கப்படும் படங்கள், புராணப் படங்களாகவோ அல்லது சரித்திரப் படங்களாகவோ இருந்தால், அவற்றில் சந்தியா நிச்சயம் இருப்பார்.

அத்தகைய கம்பீரமான முகத்தில் சோர்வு மிகுந்திருந்தது. இரு கண்களின் கீழேயும் கரு வளையங்கள் தோன்றியிருந்தன. பளிச்சென்று தோன்றும் அவரது முகம் சோகை பிடித் திருந்ததை போன்று காணப்பட்டது. நெற்றியில் வழக்கமாக பெரிய திலகம் ஒன்றை வைத்திருப்பார். அதற்கு பதிலாக அன்று ஒரு சிறு பொட்டு மட்டும் வைத்திருந்தார்.

என்னருமை தோழி...!

தாயிடம் ஏதோ சரியில்லை என்கிற உணர்வு உங்களுள் எழுந்ததாக என்னிடம் நீங்கள் கூறியபோது, இவ்வளவு ஆண்டுகள் கழித்தும் அந்த காட்சி உங்கள் மனத்திரையில் ஓடி, உங்களை வேதனையில் ஆழ்த்தியதை என்னால் உணரமுடிந்தது.

‘‘என்னம்மா விஷயம்..?’’என்று பதைப்புடன் நீங்கள் வினவ, சற்றே மூச்சிரைப்புடன் தங்கள் தாய் பேசினார். ‘‘அம்மு! படப்பிடிப்புகளில் நீ பரபரப்பாக இருந்ததால் உடனடியாக உன் னிடம் சொல்ல முடியவில்லை. ‘திக்குத் தெரியாத காட்டில்’ படப்பிடிப்பு மாசினகுடி காட்டில் நடை பெற்றபோது, உன்னை பார்க்க உன் அத்தை கள் வந்திருந்தார்களே... அவர்கள் காரில் என்னுடன் பேசியபடி வந்தார்கள். உனக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கிறதாம். பையனும் நமக்கு தூரத்து சொந்தம். அவர் யார் என்று தெரிந்தால் நீ திகைத்து போவாய். உனக்கு நன்கு அறிமுகம் ஆனவர்தான்...’’ என்று தாய் சந்தியா அந்தப் பையனின் பெயரை உங் களிடம் கூறினார். உண்மையிலேயே நீங்கள் மிகவும் ஆச்சரியப்பட்டு போனீர்கள். ஏனென் றால், அவரும் உங்களுடன் ஏற்கெனவே கலகலப்பாகப் பழகி வந்தவர்தான்!

இருந்தாலும் ‘‘இப்போது என்ன அவசரம்..? முதலில் வீடு கட்டி முடிந்து கிரகப்பிரவேசம் நடக்கட்டும்...’’ என்று அம்மாவின் பேச்சை திசை திருப்ப முயன்றீர்கள். வழக்கமாக திருமண பேச்சு எழும்போதெல்லாம் ஆண்களும், பெண் களும் கூறும் அந்த வாடிக்கையான வசனத் தையே நீங்களும் அப்போது தாயிடம் கூறினீர்கள்.

ஆனால்... சந்தியாவோ தொடர்ந்து வற்புறுத் தத் தொடங்கினார். அவரது அந்த வற்புறுத் தல்தான் உங்களுக்கு அவர் உடல்நிலை குறித்து சில சந்தேகங்களை தோற்றுவித்ததாக கூறினீர்கள். எப்படியாவது உங்களுக்கு திரு மணத்தை முடித்துவிடும் தீவிரத்தில் அவர் இருந் ததை பார்த்தபோது, அவர் எது குறித்தோ கவலைப்படுவதை உணர்ந்தீர்கள். நடுநடுவே அவரிடம் எழுந்த இருமல்களும் அவரது உடல் நிலை குறித்த உங்கள் சந்தேகத்தை உறுதிப்படுத்தின.

இம்மாதிரி காட்சிகள் பலவற்றில் படங்களில் நீங்கள் நடித்திருந்தாலும் நிஜ வாழ்க்கையில் அக்காட்சி அரங்கேறும்போது துடித்துப் போகாமல் இருக்க முடியுமா என்ன? தான் நன்றாக இருக்கும்போதே உங்களுக்கு திருமணம் செய்து பார்த்துவிட வேண்டும் என்கிற எண்ணம்தான் உங்கள் தாய்க்கு அப்போது மிகுந்திருக்க வேண்டும்.

பாவம்... உங்கள் தாய் சந்தியா! திரைப்படத் துறையை ஒரு தாமரை பொய்கையாக எண்ணி விட்டார் போலும். வேண்டும் என்கிறபோது இறங்கி நன்னீராடிவிட்டு, பிறகு போதும் என் கிறபோது ஒரு முறை முழுக்கு போட்டு, கரையேறி விடும் பொய்கையா என்ன திரைப்படத்துறை. தங்கள் தாய் உணராத இந்த உண்மையை நீங்கள் அறிந்திருந்தீர்கள்.

உங்களுக்கு அப்போது திருமணப் பேச்சில் இருந்த ஆர்வத்தைவிட, தாய் சந்தியா இருந்த நிலைதான் பெரும் கவலையை உண்டு பண்ணியது. அப்போதுதான் உங்களுக்கு ஒரு உண்மை புரிந்தது. வீடு கட்டுவது தொடர்பான அத்தனை பணிகளையும் உங்கள் தாயே தனி ஒருவராக செய்து கொண்டு, தனது உடல்நிலையை அசட்டை செய்து விட்டார். நீங்களும் படப்பிடிப்பில் இருந்ததால் அவரை கவனிக்க முடியவில்லை என்பதை உணர்ந்து கொண்டீர்கள்.

‘‘முதலில் நாம் இருவரும் டாக்டர்கிட்டே போகலாம்... வாம்மா’’ என்று அவரை அழைத் தீர்கள். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் சந்தியா மீண்டும் மீண்டும் திருமண பேச்சை எழுப்பி கொண்டே இருந்தார். உங்கள் மனதில் ஓடுவதை தாயிடம், அதுவும் அவர் உடல் நலம் குன்றியிருக்கும் நிலையில் எப்படிச் சொல்வது? அப்படிச் சொன்னால் அவரால் அதை தாங்கிக் கொள்ள முடியுமா?

- தொடர்வேன்... | தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x