Last Updated : 01 Jun, 2017 09:59 AM

 

Published : 01 Jun 2017 09:59 AM
Last Updated : 01 Jun 2017 09:59 AM

இதுதான் நான் 78: பிடிச்சதும் பிடிக்காததும்

எனக்கு ரொம்பவும் பிடித்த மொழிகள் தமிழும், தாய் மொழியும்தான். நாம மூச்சு விடும்போது கஷ்டப்படுறோமா? இல்லையே. அந்த மாதிரிதான் எனக்கு தமிழும், தாய்மொழியும் பேசும்போது எந்தவிதமான கஷ்டமும் இருக்காது. அதுதான் இயற்கைன்னு நினைக்கிறேன். இயற்கையை மீறி நாம ஏதா வது பண்ணும்போது கஷ்டப் படுறோம்ல.. அந்த மாதிரிதான் வேற பாஷை பேசுறது. அதனால தான் மத்த மொழிங்க பேசும்போது வாய் வலிக்கும். அசவுகரியமா இருக்கும்னு நான் சொன்னேன்.

இப்படி எனக்கு ரொம்பவும் பிடிச்ச பாஷையை பத்தி எழுதும் போது இன்னும் என்னவெல்லாம் ரொம்ப பிடிக்கும்கிறதையும் சொல்றேன். ஸ்வீட் எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் ஹைதராபாத்ல டான்ஸ் மாஸ்டரா வேலை பார்க்கும்போது தங்கியிருக்கிற ஹோட்டல்ல பஃபே சிஸ்டம் இருக்கும். எல்லாரும் சாப்பாடு, வெஜிடபுள் பிரைடு ரைஸ், ரொட்டி, ரசம், மோர்னு பல வகையா ஆரம்பிப்பாங்க. நான் முதல்ல ஒரு ப்ளேட்ல டிபரெண்ட் ஷேப்ல இருக்குற ஸ்வீட்ஸை எடுத்து சாப்பிடுவேன். அப்பறம் பாயசம் சாப்பிடுவேன். மூணாவது ஒரு ப்ளேட் முழுக்க கேக், கடைசியா ஐஸ்கிரீம், குலோப்ஜாமூன்னு முடி யும். என்னோட மொத்த சாப்பாடும் ஸ்வீட்லயே முடிஞ்சுடும். தினமும் இப்படியே சாப்பிடுவேன்.

இப்பவும் ஊருக்கு வர்றேன்னு அம்மாகிட்ட சொல்லிட்டா போதும், பாயசமும், போளியும் ரெடி பண்ணிடுவாங்க. அதே மாதிரி என்ன நல்லா தெரிஞ்சவங்க வீட்டுக்கு போகும்போது, ‘என்ன சாப்பிடுறீங்க? காஃபியா? டீயா? கூல்டிரிங்க்ஸா?’னு என்கிட்ட கேட்க மாட்டாங்க. ‘என்ன ஸ்வீட் சாப்பிடுறீங்க!’னுதான் கேட்பாங்க. அந்த அளவுக்கு ஸ்வீட் பிடிக்கும்.

அப்பறம் சென்னை பீச் ரொம் பவும் பிடிக்கும். ஊட்டி ரொம்ப ரொம்ப பிடிக்கும். எம்.ஜி.ஆர்ன்னா அவ்வளவு பிடிக்கும். அவரோட உருவம், ஆக்டிங், ஸ்டைல்னு எல்லாமே பிடிக்கும். அப்புறம் மைக்கேல் ஜாக்சன். அவர் டான்ஸ் ஆடவே வேண்டாம். அப்படியே நின்னாலே போதும். அதே மாதிரி நாகேஷ் சாரோட காமெடி. அவரை சேனல்ல பார்த்துட்டா அவ்வளவுதான். சேனலை மாத்தவே மாட்டேன். விளையாட்டு பிடிக்கும். அதுவும் ஷட்டில்கார்க், செஸ், ஃபுட்பால்னு ரொம்ப பிடிக்கும்.

அம்பாசிடர் கார் ரொம்ப பிடிக்கும். டிரெஸ்ல சாதாரணமா ஒரு லூஸ் பேண்ட். நல்ல டி-ஷர்ட் இது போதும். அதே மாதிரி எனக்கு பர்த் டே கிஃப்ட்டா வாட்ச்சோ, பெர்ப்யூமோ இன்னும் வேற ஏதாவது கொடுத்தாக்கூட எனக்கு அந்த மாதிரி கிஃப்ட் மேல எல் லாம் பெருசா நாட்டம் இருந்ததே இல்லை. அதுக்கு பதிலா ஒரு நல்ல பேண்ட், ஷர்ட் கொடுத்தாங்கன்னா சந்தோஷப்படுவேன். என்ன கிஃப்ட் வேணும்னு சில பேர் கேட்பாங்க. நான் எனக்கு பேண்ட், ஷர்ட் இல் லைனா டி-ஷர்ட் வாங்கிக்கொடுங் கன்னு சொல்லியிருக்கேன்.

என்னோட பசங்ககூட விளை யாடுறது பிடிக்கும். அதே மாதிரி பிரெண்ட்ஸ்கூட உட்கார்ந்து மணிக் கணக்கா பேசுறது ரொம்ப பிடிக் கும். நல்ல படம் பார்க்குறதும் பிடிக்கும். யாராவது ஒருத்தர், ‘இந்தப் படம் ரொம்ப நல்லா இருக்கு!’ன்னு சொன்னாப் போதும். உடனே அதை பார்த்தே ஆகணும். அதுவும் நைட்ல தனியா உட்கார்ந்து படம் பார்க்குறது ரொம் பவும் பிடிக்கும். எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு ‘காதலிக்க நேர மில்லை’ படத்துல வர்ற ‘விஸ்வ நாதன் வேலை வேண்டும்’ பாட்டு. ஏன்னா, அந்த பாட்டும் நல்லா இருக்கும். அதுல எங்க அப்பா ஆடியிருக்காங்க.

கொரியோகிராஃபி பிடிக்கும். ஏன்னா, அப்போ நான் வேற உலகத்துல இருப்பேன். என்னோட டான்ஸ் குருக்களான வரதராஜன் மாஸ்டர், லஷ்மி நாராயணன் மாஸ்டர் ரெண்டு பேரையும் ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதே மாதிரி யாராவது புது மூவ்மெண்ட் சொல்லிக்கொடுத்து அதை நான் சரியா ஆடி முடித்ததும் அதை பார்த்துட்டு அந்த மூவ்மெண்டை சொல்லிக்கொடுத்தவங்களே என்னைப் பாராட்டும்போது ரொம்ப பிடிக்கும்.

அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, உறவுக்காரங்க, இவங்கள எல்லாம் பிடிக்காதான்னு கேட் கலாம். இவங்க எல்லாரையும் பிடிக்கும். ஆனா, இதுல நான் சேர்க்கலை. ஏன்னா, இவங்க ரத்த சம்பந்தம் உள்ளவங்க.

அப்புறம் வாழைப் பழம் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதுக்கு ஒரு பெரிய கதையே இருக்கு. ஹைதராபாத்ல பாட்டு கொரியோ கிராஃப் பண்ணும்போது மத்தி யானம் சாப்பாடுறதுக்கு முன்னாடி 10 பழம் சாப்பிட்டுடுவேன். அதுக்கு அப்புறம் சாம்பார், ரசம், தயிர் ஊத்தி சாப்பிட்டுட்டு திரும்பவும் அஞ்சாறு பழம் சாப்பிடுவேன். இப்போ ஷூட்டிங் போறப்போக்கூட பழைய இயக்கு நர், தயாரிப்பாளர், ஆக்ட்ரஸ் யாராவது இருந்தாங்கன்னா, ‘என்ன பிரபு வாழைப்பழம் கொண்டு வரச் சொல்லவா?’ன்னு கேட்பாங்க.

ஷூட்டிங்ல சில நேரத் துல குடும்ப பாட்டு எடுக்கும்போது தட்டுல 12 பழம் இருக்குற சீப்போட வாழைப்பழத்தை வைப்பாங்க. அதை வைக்கும்போதே, ‘சார் இது ஷூட்டிங்கு. உங்களுக்கு தனியா இருக்கு!’ன்னும் சொல்வாங்க.

ஆனா, பழக்க தோஷத்துல நான் அதுல இருந்து ரெண்டு, மூணு பழங்களை எடுத்து சாப் பிட்டுடுவேன். அப்புறம் கண்டின் யூடிக்கு குறையுதேன்னு என்னை பார்ப்பாங்க. அப்போ இயக்குநர், ‘இதெல்லாம் பிரபுகிட்ட கேட் கணுமா? வாழைப்பழ சீப்பை ரெடியா வெச்சிக்கோங்க. அவர் சாப்பிட்டா வேறொரு சீப்பை தட்டுல வையுங்க!’ன்னு சொல் வார். முன்பெல்லாம் அவ்வளவு வாழைப் பழம் சாப்பிடுவேன். இப்போ அந்த மாதிரி இல்லை. காலையில 2 மட்டும் சாப்பிடுறேன்.

சின்ன வயசுல இருந்தே தீபாவளின்னா அப்படி பிடிக்கும். அது எந்த அளவுக்கு பிடிக்கும்னு சொல்லத் தெரியலை. அவ்வளவு பிடிக்கும். நமக்கு ரொம்பப் பிடிச்சவங்கக்கூட கலாட்டாவா இருக்குறதும் பிடிக்கும். கலாட்டா பண்றதும் பிடிக்கும்.

இப்படி பிடிக்கிற விஷயங்களை பத்தி சொல்லும்போது பிடிக்கா ததுன்னும் இருக்குமே. டிராவலிங் பிடிக்கவே பிடிக்காது. என்ன பண்றது நான் நிறைய டிராவல் பண்றேன். எனக்கு பிடிச்சவங்க பக்கத்துல இல்லாதது பிடிக்கவே பிடிக்காது. அப்புறம் தாமதம் பிடிக்காது. முட்டாள்களை பிடிக்காது. கோபம் பிடிக்காது. ஆனா, எனக்கும் கோபம் வரும். என்ன பண்றது எனக்கு அந்த கோபம் வந்து தொலைக்குதே. கிராமத்துல இருந்த வீடுங்களை எல்லாம் கான்கிரீட் வீடுகளா மாற்றினது பிடிக்கவே இல்லை. அடுத்து குறிப்பா முயற்சியே செய்யாதவங்களை சுத்தமா பிடிக்காது. பிறப்பும் பிடிக்காது. இறப்பும் பிடிக்காது.

அடுத்த வாரம் என்ன? அதை அடுத்த வாரம் சொல் றேனே.

- இன்னும் சொல்வேன்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x