Published : 27 Jul 2016 09:07 AM
Last Updated : 27 Jul 2016 09:07 AM

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 10

தமிழக மறுமலர்ச்சிக் கவிஞர்

தமிழ்நாட்டின் 20-ம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (Kavimani Desika Vinayagam Pillai) பிறந்த தினம் இன்று (ஜூலை 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l

குமரி மாவட்டம், தேரூரில் பிறந்தார் (1876). ஐந்து வயதில் தேரூர் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். திருவாவடுதுறை மடத் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். எம்.ஏ. பட்டம் பெற்றார்.

l

திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் பயின்றார். கோட்டாறு, நாகர்கோவில் பாடசாலைகளில் ஆசிரியர், திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் பேராசிரியர் என 36 ஆண்டுகள் கல்விப் பணியாற்றினார்.

l

இவரது இலக்கிய வெளிப்பாட்டில் ஒரு அறிவியல் கண்ணோட்டம் பிரதிபலித்தது. நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாக கல்வெட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். சுதந்திர போராட்டத்தில் காந்தியத்துக்கு ஆதரவாகக் கவிதைகளை எழுதியதால் ‘விடுதலைக் கவிஞர்’ எனவும் போற்றப்பட்டார்.

l

‘ஆங்கிலத்தில் உள்ளதுபோல தமிழில் குழந்தைப் பாடல்கள் இல்லையே என்றுதான் நான் பள்ளிப் பிள்ளைகளுக்கு எளிய நடையில் பாடல்கள் எழுதினேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

l

‘மலரும் மாலையும்’, ‘ஆசிய ஜோதி’, ‘உமர்கய்யாம் பாடல்கள்’, ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’, ‘அழகம்மை ஆசிரிய விருத்தம்’, ‘கதர் பிறந்த கதை’, ‘குழந்தைச் செல்வம்’ உள்ளிட்ட இவரது படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவரது ‘தேவியின் கீர்த்தனங்கள்’ என்ற இசைப்பாடல் தொகுப்பில் இடம் பெற்ற பல பாடல்களை, இசைக் கலைஞர்கள் மேடைகளில் விரும்பிப் பாடினார்கள்.

l

இவரது சொற்பொழிவுகள் ‘கவிமணியின் உரை மணிகள்’ என்ற நூலாக வெளிவந்தது. சிறந்த மொழிபெயர்ப்பாளரான இவர் எட்வின் ஆர்னால்டின் ‘தி லைட் ஆஃப் ஏஷியா’ என்ற படைப்பைத் தழுவி ‘ஆசிய ஜோதி’ என தமிழில் எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாமின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார்.‘மனோன்மணியம் மறுபிறப்பு’ என்ற திறனாய்வுக் கட்டுரை எழுதியுள்ளார்.

l

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராகப் பணியாற்றினார். ‘கம்பராமாயணம் திவாகரம்’, ‘நவநீதப் பாட்டியல்’ உள்ளிட்ட பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்துள்ளார். ‘தேசியக் கவிஞர்’, ‘குழந்தைக் கவிஞர்’, ‘சமுதாயக் கவிஞர்’, ‘விடுதலைக் கவிஞர்’, ‘உணர்ச்சிக் கவிஞர்’ என்றெல்லாம் போற்றப்பட்டார்.

l

‘பைத்தியக்காரன்’, ‘மணமகள்’, ‘தாயுள்ளம்’, ‘வேலைக்காரன்’, ‘கள்வனின் காதலி’, ‘கண்ணின் மணிகள்’, ‘நன் நம்பிக்கை’ ஆகிய திரைப்படங்களில் இவர் எழுதிய பாடல்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.

l

‘தேசிய விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பது என் செவிப்பெருமை’ என நாமக்கல் கவிஞர் பாராட்டியுள்ளார். 1940-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உமாமகேஸ்வரம் பிள்ளை இவருக்கு ‘கவிமணி’ பட்டம் வழங்கினார்.

l

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க் கவிஞர்களுள் ஒருவருமான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1954-ம் ஆண்டு, 78-வது வயதில் மறைந்தார். இவர் பிறந்த ஊரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு இவர் நினைவாக 2005-ல் தபால் தலை வெளியிட்டது.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x