Published : 26 Mar 2017 09:14 AM
Last Updated : 26 Mar 2017 09:14 AM

டென்னசி வில்லியம்ஸ் 10

அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற முன்னணி நாடகாசிரியரும் படைப்பாளியுமான டென்னசி வில்லியம்ஸ் (Tennessee Williams) பிறந்த தினம் இன்று (மார்ச் 26).

* மிசிசிப்பி மாநிலத்தில் கொலம்பஸ் நகரில் பிறந்தார் (1911). தாமஸ் லேனியர் வில்லியம்ஸ் III இவரது இயற்பெயர். தனது 28-வது வயதில் தன் பெயரை டென்னசி வில்லியம்ஸ் என மாற்றிக்கொண்டார். ஸோல்டன் உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர் சிட்டி உயர்நிலைப்பள்ளியிலும் பயின்றார்.

* 12 வயதில் அம்மா இவருக்கு ஒரு தட்டச்சு இயந்திரம் வாங்கிக் கொடுத்தார். அப்போதே எழுத ஆரம்பித்து விட்டார். 16-வது வயதில் எழுதிய ஒரு கட்டுரைக்குப் பரிசு கிடைத்தது. அடுத்த ஆண்டே இவர் எழுதிய ‘தி வெஞ்ஜன்ஸ் ஆஃப் நைட்டோகிரிஸ்’ என்ற சிறுகதை வெளிவந்தது.

* 1929-ல் மிசோரி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அப்போது ஊடகவியலும் பயின்றார். அந்த சந்தர்ப்பத்தில் வருமானம் ஈட்டுவதற்காகக் கவிதை, கட்டுரைகள், கதைகள் மற்றும் நாடகங்கள் எழுதும் போட்டிகளில் கலந்துகொண்டார்.

* கல்லூரிப் படிப்பை நிறுத்திய தந்தை இவரை சர்வதேச காலணி நிறுவனத் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். இந்த வேலை இவருக்கு சலிப்பூட்டவே, அதிகமாக எழுத ஆரம்பித்தார்.

* குடிகார அப்பா, எப்போதும் சோகமயமாய் இருக்கும் அம்மா இவர்களுடன் வாழ்ந்து வந்த இவருக்கு வேலையும் பிடிக்கவில்லை; எழுத்திலும் பெரிதாக சாதிக்க முடியவில்லை எனப் பல காரணங்களால் 24 வயதான இவருக்கு நரம்புத் தளர்ச்சி நோய் ஏற்பட்டது. வேலையை விட்டார்.

* 1936-ல் செயின்ட் லூயிசில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பின்னர் அயோவா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து ஆங்கிலத்தில் பட்டம் பெற்றார். டிராமாடிக் வொர்க் ஷாப்பில் சேர்ந்து பயின்றார். எது எப்படி இருந்தாலும் எப்போதும் எழுதிக்கொண்டே இருந்தார்.

* நியு ஆர்லியன்சில் இருந்தபோது மெட்ரோ கோல்ட்வின் மேயர் ஃபிலிம் ஸ்டுடியோவில் ஒப்பந்த எழுத்தாளராகப் பணியாற்றினார். 1944-ல் இவர் படைத்த ‘தி கிளாஸ் மெனாஜெரி’ இவரது திடீர் புகழுக்குக் காரணமாக அமைந்தது. குறிப்பாக, இவரது ‘ஏ ஸ்ட்ரீட்கார் நேம்ட் டிசையர்’ நாடகம் அமெரிக்காவில் 20-ம் நூற்றாண்டில் வெளிவந்த தலைசிறந்த நாடகங்களுள் ஒன்றாகப் போற்றப்பட்டது.

* அமெரிக்காவின் சிறந்த நாடகாசிரியர்களுள் ஒருவராகப் புகழ்பெற்றார். இவரது படைப்புகள் பெரும்பாலும் இவரது வாழ்க்கையையே பிரதிபலித்தன. மூளைக் கோளாறால் பாதிக்கப்பட்ட தன் சகோதரியை அன்புடன் பராமரித்துவந்தார்.

* இவரது பெரும்பாலான நாடகங்களைத் தழுவிப் பல திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. நாடகங்கள், ஓரங்க நாடகங்கள் தவிர, சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை உள்ளிட்ட அத்தனை களங்களிலும் முத்திரை பதித்தார். 2 முறை புலிட்சர் பரிசு, 3 முறை நியுயார்க் டிராமா கிரிட்டிக்ஸ் சர்க்கிளின் விருது, 3 டொனால்ட்சன் விருது, செயின்ட் லூயிஸ் லிட்ரரி விருது மற்றும் டோனி விருது என பல பரிசுகளும் விருதுகளையும் பெற்றார்.

* 1979-ல் அமெரிக்கன் தியேட்டர் ஹால் ஆஃப் ஃபேமில் இவரது பெயர் இணைக்கப்பட்டது. 20-ம் நூற்றாண்டில் ஆர்த்தர் மில்லர், யூஜின்ஓநில், டென்னசி ஆகிய மூவரும் அமெரிக்க நாடகத் துறையின் முக்கிய ஆளுமைகளாகப் போற்றப்பட்டனர். அமெரிக்க நாடகத் துறையில் முன்னணி நாடகாசிரியர்களுள் ஒருவராகக் கருதப்பட்ட டென்னசி வில்லியம்ஸ் 1983-ம் ஆண்டு 72-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x