

அந்த விண்கலம் பூமியிலிருந்து புறப்பட்டு இன்றோடு 37 ஆண்டுகள், 2 மாதம், 7 நாட்கள் ஆகின்றன. பூமியிலிருந்து 1,900 கோடி கி.மீ-க்கு அப்பால் சூரியக் குடும்பத்தின் விளிம்பை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது அந்த விண்கலம். பூமியிலிருந்து அதிகத் தொலைவில் இருக்கும் ‘மனிதர்களால் உருவாக்கப்பட்ட பொருள்’ இதுதான்.
வாயேஜர்-1 என்பது அதன் பெயர். சூரியக் குடும்பத்தின் வெளிப்புறக் கோள்களான வியாழன், சனி ஆகியவற்றை ஆராய வேண்டும் என்று 1960-களில் நாஸா முடிவு செய்தது. இதற்காக, வாயேஜர்-1 உருவாக்கப்பட்டது. ஆனால், அதை விண்ணில் செலுத்துவதற்குத் தாமதம் ஏற்பட்டது.
இதற்கிடையே வாயேஜர்-2 என்ற விண்கலத்தை 1977 ஆகஸ்ட் 20-ல் நாஸா ஏவியது. அதே ஆண்டு செப்டம்பர் 5-ல் வாயேஜர்-1 ஏவப்பட்டது. எனினும், வாயேஜர்-2 விண்கலத்தை முந்திக் கொண்டு இந்த விண்கலம் முன்னேறியது. ஆண்டுக்கு 52 கோடி கி.மீ. வேகத்தில் இந்த விண்கலம் பறந்து செல்கிறது. 1979-ல் வியாழன் கிரகத்தையும் அதன் நிலவுகளையும் இவ்விண்கலம் பட மெடுத்து பூமிக்கு அனுப்பியது.
அதன் பின்னர், 1980-ல் இதே நாளில் சனிக் கிரகத்தின் அருகில் சென்று அதைப் பட மெடுத்தது. அந்தப் படத்தில்தான் சனிக் கிரகத்தைச் சுற்றியிருக்கும் வளையத்தை முதன் முதலாகப் படம் எடுத்தது. இந்த வளையம் பாறைத் துகள்களாலும் பனிக்கட்டிகளாலும் ஆனது என்று அறியப்பட்டிருக்கிறது. அதன் பின்னரும் வாயேஜர் இரட்டை விண்கலங்கள் விண்ணில் முன்னேறிக்கொண்டிருக்கின்றன.
ஆகஸ்ட் 2012-ல் ‘இன்டெர்ஸ்டெல்லார் ஸ்பேஸ்’ எனப்படும் பகுதிக்குள் நுழைந்தது வாயேஜர்-1. வாயேஜர்-2-ம் இந்தப் பகுதிக்குள் நுழையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இவை இரண்டும் ‘டீப் ஸ்பேஸ் நெட்வொர்க்’ (டி.எஸ்.என்.) என்ற தொழில்நுட்பம் மூலம் இன்றும் பூமியுடன் தொடர்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.