Last Updated : 08 Mar, 2014 11:08 AM

 

Published : 08 Mar 2014 11:08 AM
Last Updated : 08 Mar 2014 11:08 AM

வாங்கரி மாத்தாய் எனும் தலைவி

சமூகத்தின் துயரங்களை காலம்தான் மாற்ற வேண்டும் என்ற எண்ணத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு, பிறந்த மண்ணுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி தன் வாழ்வை முழுவதுமாக மக்களுக்காக அர்பணித்தார் ஆப்பிரிக்காவின் வாங்கரி மாத்தாய்.

கென்யாவில் இகிதி என்ற கிராமத்தில் 1940 ஆம் ஆண்டு பிறந்தார் வாங்கரி மாத்தாய். அவருடைய காலத்தில் பெண்கள் யாரும் படித்திருக்கவில்லை. சகோதரரின் தூண்டுதலில் படிப்பை தொடர்ந்தார் வாங்கரி மாத்தாய். அன்றைய காலக்கட்டத்தில், அமெரிக்க அதிபர் கென்னடியின் அரசு வழங்கிவந்த உதவித்தொகை மூலம் கல்லூரியில் உயிரியலில் பட்டம் பெற்றார்.

ஜனநாயகம், மனித உரிமைகள் இவை எதை பற்றியுமான புரிதல் இல்லாமல் ஆப்பரிக்காவிலிருந்து, அமெரிக்கா சென்றார் வாங்கரி மாத்தாய். மார்டின் லூதர் கிங் அமெரிக்காவில் ஏற்படுத்திய கிளர்ச்சியால் தூண்டப்பட்டார். படிப்பு முடிந்ததும் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உணர்வில் தாயகமான கென்யா திரும்பினார்.

காலனி ஆதிக்கத்தில் வேறூன்றி, அடிமைகளாக வாழும் சமூகத்தில் ஜனநாயகம் என்பது கேள்விக்குறி. அந்தநிலையில், நைரோபி பல்கலைக்கழகத்தில் பல போராட்டங்களுக்குப் பிறகு கால்நடைத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

வாங்கரி மாத்தாய், முனைவர் பட்டம் பெற்ற முதல் ஆப்பிரிக்க பெண்மணி ஆவார். அதே வரிசையில் நைரோபி பல்கலைக்கழகத்தின் கால்நடைத்துறையின் முதல் பெண் துறைத்தலைவரும் ஆனார். இவருடைய வளர்ச்சி பலரின் - குறிப்பாக ஆண்களிடம் - வெறுப்பைத் தூண்டியது.

கல்வி மற்றும் அமெரிக்காவில் கண்ட போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட வாங்கரி தன் கல்லூரி வேலையைத் துறந்து ஏழை மக்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் 'பசுமை பட்டை' இயக்கத்தை தொடங்கினார்.

இந்த இயக்கம் மூலம் மரங்களை நடுவதற்கான பணியைத் தொடர்ந்தார். ஆப்பிரிக்காவில் ஆண்கள்தான் பெருமளவில் நிலத்திற்கு சொந்தக்காரர்கள். பெண்கள் அனைவருமே நிலத்தில் வேலை மட்டுமே செய்து வந்தார்கள். பெண்களுக்கென்று எந்த உரிமையையும் அன்றைய காலக்கட்டத்தில் இல்லை.

வேலை மட்டுமே செய்து வந்த பெரும்பாலான பெண்களுக்கு, மரங்களை வளர்க்க தெரியாதபோது, பல முயற்சிகளால் பல கிராமங்களுக்கும் சென்று மரம் நடுவதற்கான பயிற்சியை அளித்தார் வாங்கரி மாத்தாய். காடுகளில் வளர்க்கப்பட்டு வந்த பணப்பயிர்களை எதிர்த்து போராடி பெண்களை பாரம்பரிய பயிர்களை வளர்க்க தூண்டினார். அதன் மூலம் அவர்களே சத்தான உணவை உற்பத்தி செய்ய பழக்கப்படுத்தினார்.

ஆப்பிரிக்காவில் காலனிய ஆதிக்கத்தால், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்ன என்று தெரியாது இருந்த மக்களை, குறிப்பாக ஏழை மக்களை, வழிநடத்தும் தலைவரானார்.

பெண்களுக்காகவும், அவர்களுடைய உரிமைகளுக்காகவும் போராடிய வாங்கரி மாத்தாய் கிராமப்புற பெண்களுக்கு மரம் வளர்ப்பதற்காகவும், அதை பராமரிப்பதற்காகவும் சிறியளவில் ஊக்கத்தொகை வழங்கி வந்தார். இதன்மூலம், ஆண்களும், பெண்களுடன் சேர்ந்து மரங்கள் நடுவது, அவர்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டு கல்விக்கான முக்கியத்துவத்தை கொடுப்பது போன்ற மாற்றங்களில் இறங்கினர்.

சிறிய கிராமத்தில் தொடங்கிய வாங்கரி மாத்தாயின் பணி, கென்யாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 90களில் பெரிய பூங்காவை அழித்து 60 மாடி கட்டடம் கட்ட அரசு எடுத்த முடிவை எதிர்த்து பெரிய கிளர்ச்சிச் போராட்டம் கென்யாவில் நடந்தது. இதில் பெண்கள் பலரும் தாக்கப்பட்டனர். வாங்கரி மாத்தாய் நினைவு இழந்து தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்தார். இந்த போராட்டம்தான் வாங்கரி மாத்தாய்க்கு உலகளவில் பெரிய அங்கீகாரம் கிடைக்க வழிவகுத்தது.

ஐ.நாவின் பெண்களுக்கான வளர்ச்சி திட்டத்தில் சேர்ந்தார் வாங்கரி மாத்தாய். சிலமாதங்களில் அவரின் பணி அடுத்த நிலைக்கு நகர்த்தப்பட்டது. அரசியலில் அவர் பங்கெடுத்தார், பலமுறை அவர் தேர்தலில் அரசின் சர்வாதிகாரத்தால் தோற்றார். 2002–ல் முறையான ஜனநாயக தேர்தல் கென்யாவில் நடந்தபோது, அதிக வாக்குகளைப் பெற்று சுற்றுச்சூழல் இணை அமைச்சரானார்.

“மாற்றத்திற்கான பெண்கள்” என்ற அமைப்பை தொடங்கி பெண்களின் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார் வாங்கரி மாத்தாய். ஆண்களின் அடிமைகளாக கருதப்பட்ட பெண்களை பாதுகாக்கும் விதமாக சட்டங்களை உருவாக்கினார்.

மேலும், இளம் பெண்களுக்கு கல்வி மூலம் தன்னம்பிக்கையும், முடிவெடுப்பதில் தங்களுக்கும் பங்குண்டு என்ற உணர்வையும் ஏற்படுத்தினார்.

2004-ல் வாங்கரி மாத்தாய் உலகமே வியந்து பார்க்கும் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார். சூழலியல் பாதுகாப்பு மூலம் அமைதி, வளர்ச்சி மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்தியதால் இவ்விருதை வழங்குவதாக நோபல் அமைதி பரிசு தேர்வாளர்கள் கூறினார்கள். நோபல் பரிசு பெற்ற முதல் ஆப்பிரிக்க பெண்மணி என்ற பெருமையும் அடைந்தார் வாங்கரி .

பெரும்பாலான ஏழைகளின் தேவைகள் குறைவுதான் ஆனால் அவை எளிதில் நிறைவேறுவதில்லை, அவற்றை இயன்ற அளவில் நிறைவேற்றி, இன்று ஆப்பரிக்காவில் மிகப்பெரிய ஜனநாயக புரிதலை கொடுத்துவிட்டுதான் வாங்கரி மாத்தாய் மறைந்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x