Published : 14 Jun 2016 10:04 AM
Last Updated : 14 Jun 2016 10:04 AM

எப்படி இருந்தது இந்தப் புத்தகக் காட்சி?

புகழேந்தி,தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கப் பொதுச் செயலாளர்:

பலரும் எளிதில் வந்து செல்ல முடியாத இடமாகத் தீவுத்திடலைக் குறிப்பிட்டார்கள். அரங்க அமைப்பைப் பற்றி பலர் மனக்குறையை வெளிப்படுத்தினர். ஆனால், இந்த இடத்தில் இந்த அரங்கத்தை அமைக்க வெறும் 12 நாட்கள் அவகாசமே எங்களுக்குக் கிடைத்தது. விளம்பரதாரர்களில் பலர், ஜனவரியில் நடக்கப்போகும் புத்தகக் காட்சிக்கும் நிதி வழங்க வேண்டியிருப்பதைக் கருதி இந்த முறை பெரிய அளவில் பணம் வழங்கவில்லை. பிற மொழி அரங்குகளுக்குக் குறைவான கட்டணமே வசூலித்தோம். இப்படியான காரணங்களும் சேர்ந்தே சங்கடப்படுத்திவிட்டன. ஒவ்வொரு முறையும் குறைகளைத் தவிர்க்க கடுமையாக முயற்சிக்கிறோம். புத்தகக்காட்சிக்கென நிரந்தர இடம் ஒன்று மட்டும் கிடைத்துவிட்டால், பல பிரச்சினைகளைத் தவிர்த்துவிட முடியும். இந்த முறை ஏற்பட்ட பிரச்சினைகள் வரவிருக்கும் புத்தகக்காட்சியில் வராமல் பார்த்துக்கொள்வோம்!

வேடியப்பன்,டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம்:

ஜனவரியில் நடத்தப்படும் புத்தகக் காட்சிக்கு வரும் கூட்டத்தில் சுமார் 60% பேர்தான் இந்த முறை வந்திருந்தார்கள். விற்பனையும் அதற்கேற்பவே அமைந்திருந்தது. என்றாலும், ஜனவரியில் புத்தகக் காட்சி, ஜூனில் ஒரு புத்தகக் காட்சி என்று இரு காட்சிகள் நடத்துவதற்கான வாய்ப்பை இது நமக்குச் சுட்டிக்காட்டுகிறது!

சிவ.செந்தில்நாதன்,பரிசல் பதிப்பகம்:

இந்தப் புத்தகக்காட்சியில் இளைஞர்களும் பெண்களும் அதிகமாக வந்தனர். நிறையப் பேர் கையில் பட்டியல்களோடு வந்தனர். கோயம்பேடு வியாபாரி ஒருவர் பகலெல்லாம் வியாபாரம். இரவெல்லாம் வாசிப்பு என்று வாழ்வதாக அறிமுகப்படுத்திக்கொண்டவர் புத்தகங்களை வாரிச் சென்றார். நான் சந்தித்த வாசகர்களில் அவர் என்னை நெகிழச் செய்தார். மொழிபெயர்ப்பு நூல்கள் அதிகம் விற்றன. அரசியல் நூல்களும் புனைவுகளும் நன்றாக விற்றன!

யுகன்,நற்றிணை பதிப்பகம்:

காற்றோட்டம் இல்லாமலிருந்தது பெரிய குறை. கழிப்பறை பராமரிப்பு சரியாக இல்லை. சரியான அலைவரிசை இல்லாததால் ஏடிஎம் கார்டு ஸ்வைப் சாதனம் சில அரங்குகளில் சரியாக வேலை செய்யவில்லை. பெரிய பதிப்பகங்கள் அதிக எண்ணிக்கையில் அரங்குகளை வாடகைக்கு எடுத்துக்கொள்வதால் சிறிய பதிப்பகங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, அரங்குகளை ஒதுக்கும் விஷயத்தை முறைப்படுத்த வேண்டும். அதேபோல், புத்தகக் காட்சிக்கு வருபவர்கள் உட்கார்ந்து இளைப்பாறும் வகையில், 3 முதல் 5% அரங்குகளை ஒதுக்கி, இருக்கை வசதி செய்து தரப்பட வேண்டும்!

கெளதமன்,அந்திமழை பதிப்பகம்:

வெயில் பெரிய பிரச்சினை. ஆனாலும், இதற்கு யாரைக் குறை சொல்ல முடியும்? ஜூன் மாதம் பள்ளி, கல்லூரிகள் இயங்கிக்கொண்டிருக்கும் தருணத்தில் புத்தகக் காட்சி வைத்ததால் கூட்டம் வராதோ என்ற சந்தேகம் இருந்தது. ஆனால், இந்தப் பிரச்சினைகளையெல்லாம் தாண்டியும் இந்தப் புத்தகக் காட்சி நன்றாகவே அமைந்தது என்பேன். மழை பெய்தபோது சில அரங்குகளுக்குள் மழைநீர் வந்தது. இதுபோன்ற குறைகளை எதிர்காலத்தில் களைய வேண்டும்!

சிராஜூதீன்,பாரதி புத்தகாலயம்:

கோடை வெயில் உக்கிரத்தையும் தாண்டி நம் மக்கள் இந்தப் புத்தகக் காட்சிக்கு வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். கூட்டம், விற்பனையை வழக்கமான புத்தகக் காட்சியோடு ஒப்பிட முடியாது என்றாலும், இது மோசம் இல்லை. ஒரு வரிசைக்கு நூறு கடைகள் என்ற அளவுக்குப் பெரிதான ஒரு புத்தகக் காட்சியில், வாசகர்கள் கடைகளைத் தேடி அலைவதைத் தடுக்கும் வகையில், எந்தக் கடை எங்கே இருக்கிறது எனும் விவரக் கையேட்டை மேலும் எளிமையாக்கி, நுழைவுச்சீட்டு கொடுக்கும் இடத்திலேயே அதையும் கொடுக்க வேண்டும். எந்தப் புத்தகம் எங்கே இருக்கிறது என்பதைத் தெரிவிக்கவும் ஏதேனும் ஒரு வழிமுறை செய்தால் வாசகர்கள் படும் அலைச்சலைத் தடுக்கலாம்.

பெ.நா.சிவம், அலைகள் வெளியீட்டகம்:

ஊடகங்கள் உதவியால் உயிர் பிழைத்த புத்தகக்காட்சி இது என்றே சொல்ல வேண்டும். சிலர் கடைகளையே மூடிவிட்டு போனார்கள். ஆரம்ப நாட்களில் நிலைமை அவ்வளவு மோசமாக இருந்தது. ஊடகங்கள் தொடர்ந்து அன்றாடம் இந்தப் புத்தகக்காட்சியைப் பேசுபொருளாக்கியது மக்களை இழுத்துவந்தது. குறிப்பாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் தொடர்ந்து புத்தகக் காட்சிகளுக்கும் வாசிப்புக்கும் கொடுத்துவரும் முக்கியத்துவமே ஏனைய ஊடகங்களையும் இதை நோக்கித் தள்ளுகிறது என்று சொல்வேன். எப்படியோ ஊடகங்கள் இப்படிப் புத்தகங்களைப் போட்டிப்போட்டு பேசுவது தமிழ்ச் சூழலுக்கு நல்லது. இதே நிலைமை தொடர்ந்தால், வாசிப்புச் சூழல் எங்கோ போய்விடும்!

தொகுப்பு: சாரி, சிவசு, வெ.சந்திரமோகன், நீதிராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x